கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 12, 2011

மரணத்திலும் வெற்றி கொண்ட வெற்றிகொண்டான்!


தி.மு.க.வின் அனல் கக்கும் பேச்சாளர் வெற்றிகொண்டான் கடந்த ஜனவரி 29 அன்று இறந்துவிட்டார். துணை முதல்வர் ஸ்டாலின் அவரது இறுதி அடக்கம் நடந்த ஜெயங்கொண்டத்திற்கு நேரில் வருகை தந்து 10 மணி நேரத்திற்கு மேல் இருந்து, இரங்கல் கூட்டம் முடித்து சென்றார்.

ஒரு துணை முதல்வர் 10 மணி நேரம் செலவிடும் அளவிற்கு பெரிய பதவிகள் எதிலும் வெற்றி கொண்டான் இருந்ததில்லை. இருந்தாலும் அவரது மரணத்திலும் இவ்வளவு பெரிய வெற்றியை வெற்றிகொண்டான் பெற்றது எப்படி?

மிசா காலத்தில் திருச்சி சிறையில் ஒரு ஆண்டு தண்டனையை அனுபவித்தவர் வெற்றிகொண்டான். ஆரம்பத்தில் ஜெயங்கொண்டத்தில் அவர் நடத்தி வந்த காபித்தூள் கடை வாசலிலும், காபித்தூள் விற்பனைக்காக செல்லும் பகுதிகளிலும் அங்குள்ள மக்களிடம் தி.மு.க.வின் கொள்கைகளை, அதன் நிலைப்பாடுகளை சுவாரசியமாக விளக்கினார். இக்காலங்களில்தான் ஜெயங்கொண்டம் என்ற ஊரின் பெயரையே வெற்றிகொண்டான் என தமிழாக்கி தன் பெயராகவும் ஆக்கிக்கொண்டார். அவரது பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தி.மு.க. மேடைகளில் மைக் பிடிக்க தொடங்கினார்.

‘வெற்றிகொண்டானைப் பார்த்து பலமுறை சிரித்திருக்கிறோம். இப்போது அழ வைத்துவிட்டார்’ என்று சொல்லும் சீனியர் தி.மு.க. தொண்டர்கள் சிலர், வெற்றிகொண்டானின் கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். இப்படி தி.மு.க.வினரிடம் மட்டும் புகழ்பெற்ற வெற்றிகொண்டான் தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்பற்றவர்களிடமும் புகழ்பெற்றது தி.மு.க.வில் இருந்து வைகோ விலக்கப்பட்ட 1993-ம் ஆண்டுக்குப் பிறகுதான். அப்போது வைகோ மாநிலம் முழுவதும் கூட்டம் போட்டு தி.மு.க.வின் மீதும், கலைஞரை நோக்கியும் ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறினார். அந்த சமயத்தில் வைகோவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வெற்றிகொண்டானை கலைஞர் மாநிலம் முழுவதும் அனுப்பினார். ம.தி.மு.க.வினர் ‘வைகோ பேசுகிறார்’ என்று கூட்டம் போட்டால், உடனே ‘வெகொ பேசுகிறார்’ என்று தி.மு.க.வினர் கூட்டம் போடுவார்கள். வைகோ தி.மு.க. மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்களைக் கேட்டு நரம்பு துடிக்க கண்ணீர் சிந்தியவர்கள், அந்த குற்றச்சாட்டுக்களுக்கு வெகொ(வெற்றிகொண்டான்) கூறும் பதிலை கேட்டு வயிறு வலிக்க சிரித்துச் செல்வார்கள். ம.தி.மு.க. பிளவின்போது கலைஞர் மாநிலம் முழுவதும் சுற்றி தி.மு.க.வினரை சந்திப்பதற்கு முன்னாலேயே வெற்றிகொண்டான், மாநிலம் முழுக்க தி.மு.க.வினரை தனது மேடைகளுக்கு முன் கட்டிப்போட்டவர். தி.மு.க.வுக்காக இவ்வளவு தூரம் வெற்றிகொண்டான் உழைத்தாலும் உள்ளூரில் இருப்பவர்கள் வெற்றிகொண்டான் தங்களை மீறி கலைஞருடன் நெருக்கம் ஆவதை விரும்பாமல், அவர் கட்சியை விட்டே செல்லும் அளவிற்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனாலும் கலைஞரின் மகன் மு.க.முத்து, தீப்பொறி ஆறுமுகம் ஆகியோர் கட்சி மாறிய போதும் சாகும்வரை ஒரே தலைவன், ஒரே கொடி என்று வாழ்ந்தவர் வெற்றிகொண்டான். தன்னுடைய மேடைப் பேச்சுக்காக 100க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்தவர். வழக்கு போட்டால் பயந்து விடுவார் என்று போலீஸ் நினைத்தால், வழக்கு வாய்தாவிற்கு எந்த ஊருக்கு சென்றாலும், அருகில் உள்ள இடங்களில் கூட்டத்திற்கு தேதி கொடுத்து போலீசின் தூக்கத்தை மேலும் கெடுப்பார் வெற்றிகொண்டான். அவர் தன் வாயில் மென்று துப்பாத அகில இந்திய தலைவரோ, மாநிலத் தலைவரோ கிடையாது. எல்லா கட்சிகளையும் போற்றியும், தூற்றியும் பேசி இருந்தாலும் காங்கிரசையும், கம்யூனிஸ்ட்டுகளையும் திட்டும் போது இவரது பேச்சில் தனி துள்ளல் தெரியும். தன் மனதுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தால் கூட பிரித்து மேய்ந்து விடுவார். தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதே மூப்பனாரின் பேச்சையும், பா.ம.க.வினர் ராமதாசை ஐயா என்று அழைப்பதையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இவரிடம் ஒரு முறை கலைஞர் பேசும்போது, ‘உனக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால், உன்னை ராஜ்யசபாவிற்கு அனுப்பி இருப்பேன்யா’ என்று கூறினாராம். அப்போது வெற்றிகொண்டான், ‘நல்லவேளை எனக்கு ஆங்கிலம் தெரியாததால் தப்பித்தேன்’ என்று கூறினாராம்’’ என்று பழைய நினைவுகளை அசை போட்டார்கள் அந்த சீனியர் பிரமுகர்கள். தலைமைக் கழக பேச்சாளர்கள் நூற்றுக்கணக்கில் இருந்ததால், அவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக தலைமை பேச்சாளராக இருந்தார். அண்ணாவைப் பார்த்து, கலைஞரை பார்த்து கடந்த தலைமுறை பேச்சாளர்கள் உருவானார்கள் என்றால், வெற்றிகொண்டானைப் பார்த்து இன்றைய தலைமுறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பேச்சாளர்கள் உருவாகினர்’’ என்றனர் வெற்றிகொண்டானுக்கு அஞ்சலி செலுத்திய தலைமைக் கழக பேச்சாளர்கள் சிலர். ஜெயங்கொண்டம் ஆண்டாள் தெருவில் வைக்கப்-பட்டிருந்த வெற்றிகொண்டானின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கண்ணீர் அவருடைய பேச்சாற்றலுக்கு கட்டியம் கூறியது. அவர் கூட்டங்களில் பேசும்போது... ‘‘என் தலைவன் முதலமைச்சராக இருக்கும் போதே, என் உயிர்போக வேண்டும்’’ என்று கூறுவார். அதன்படியே மரணத்திலும் வெற்றிகொண்டார் வெற்றி-கொண்டான்! ஆனாலும், உடல்-நலமின்றி இருந்த தன்னுடைய இறுதி நாட்களில், சமீபகால அரசியல் சூழல்களை மனதில் வைத்து ‘தளபதி முதல்வர் ஆவதைப் பார்த்துவிட்டால் நிம்மதியா கண்ணை மூடுவேன்’ என்று சொல்லி வந்த வெற்றிகொண்டானுக்கு அந்த ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை!

நன்றி : தமிழக அரசியல்.

No comments:

Post a Comment