விழாவில், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
’’இன்று காணொலிக் காட்சி வாயிலாக ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் -தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகம் - கீழ்வேளூர் வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா உட்பட - வேளாண் துறையின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஆகிய நிகழ்ச்சிகள் ஒருசேர நடத்தப்படுகின்ற இந்த இனிய வைபவத்தில் நானும் கலந்து கொண்டு, நீங்கள் அடைகின்ற மகிழ்ச்சியில் பங்கு பெறுவதில் மிகுந்த நல்லுணர்வும் - நம்பிக்கை கொண்ட மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
அண்மையில் நடைபெற்று நிறைவேறிய கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில் - நான் குறிப்பிட்ட தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள் - ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றிலே சில திட்டங்களைத் தொகுத்துரைத்து - அதனைத் தொடங்குகின்ற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள - குறிப்பாக வேளாண் துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர் மற்றுமுள்ள அமைச்சர் பெருமக்களையெல்லாம் வரவேற்கிற அதே நேரத்தில், இந்தத் திட்டங்கள் செவ்வனே நடைபெறுவதற்கு அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்களுடைய உழைப்பினை நல்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் - பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகத்திலே படித்த ஐந்திணை - ஐவகை நிலம் - இவைகளெல்லாம் தமிழகத்திலே இருந்தனவா என்ற கேள்விக்கிடையே படிக்கப்பட்டவை - சொல்லப்பட்டவை - பரிமாறிக் கொள்ளப்பட்டவை - அவற்றையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றுகின்ற பொற் பணியில், ஒரு பொறுப்பில் நான் அமர்ந்திருப்பதும், அதை நிறைவேற்றி வைக்கின்ற அரும்பணியினைத் தொடங்கி வைப்பதும் நான் பெற்ற பேறு என்றே கருதுகின்றேன்.
இன்றையதினம் நடைபெறுகின்ற இந்த விழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் இங்கே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் பிரித்து நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அந்தந்தத் துறையினுடைய அதிகாரிகள் இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
அவற்றைக் காணொலிக் காட்சி வாயிலாக காணுகின்ற தமிழ்ப் பெருமக்கள், தமிழகத்திலே எத்துணை சிறப்பாக ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் எதிர்கால எழிலை, எதிர்கால ஏற்றத்தை, எழுச்சியை நினைத்தவாறு இந்த அரசு நடைபெறுகிறது என்பதை எண்ணிப் பார்த்து, தங்களுடைய ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
கேட்கின்ற ஆதரவு கட்சியின் பெயரால் அல்ல - ஆட்சியின் பெயரால் - தமிழ்ச் சமுதாயத்தின் பெயரால். திராவிட இனம் எப்படி ஒரு காலத்திலே வாழ்ந்தது -– எந்த வகையிலே நிலங்களைக் கூட வகுத்துக் கொண்டு அதை அந்த இலக்கண ரீதியாக வாழ்ந்து காட்டியது என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னால், எதிர்காலத்திலே மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, தங்களுடைய சந்ததியினருக்குப் பயன்படும் என்ற வகையிலே இந்த இனிய விழாவிலே கலந்து கொண்டு உங்களையெல்லாம் காணொலி மூலம் சந்திப்பதிலே பெருமையும், பெரும் பேறும் பெற்றதாகக் கருதி, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்’’என்று உரையாற்றினார்.
No comments:
Post a Comment