’’இந்த இயக்கத்திலே இருந்து - பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து பல நேரங்களிலே கூடியிருக்கிறார்கள்.
இந்த இயக்கத்தை எதிர்க்கின்ற முறையிலே இயக்கம் நடத்தியவர்கள் - தங்களை, தங்களுடைய கருத்துக்களை மாற்றிக் கொண்டு, இந்த இயக்கத்திலே வந்து சேர்ந்திருக்கின்றார்கள். இப்படி பல நிகழ்வுகள், பல நேரங்களிலே திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையிலே நடந்திருக்கின்றன.
அவற்றிற்கெல்லாம் மேலாக இங்கே வந்து சேர்வதற்கு முன்பே, இணைவதற்கு முன்பே - வேறு இயக்கத்திலே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருப்பதைப் போலவே, நம்முடைய காசி முத்துமாணிக்கம் அவர்கள் எங்களிடத்திலே பழகியிருக்கின்றார்.
அதனால்தான் அவர் இன்றைக்கு வந்து சேர்ந்தபோது, புதிதாக யாரோ ஒருவர் இங்கு வந்து சேர்வதைப் போல் எங்களுக்குத் தெரியவில்லை. (பலத்த கைதட்டல்) இங்கே இருப்பவர்தான் - அங்கே போய் இங்கே வந்து சேருகிறார் என்ற அந்த உணர்வுதான் எனக்கு - முத்துமாணிக்கத்தைப் பொறுத்தவரையில் ஏற்படுகிறது.
எல்லோரும் பேசுகிறபோது, எங்கிருந்து வந்தார்களோ, அந்த இடத்திலே - மிக முக்கியமான இடத்திலே இருந்த சகோதரிகள், நண்பர்கள், பெரியவர்கள் அனைவரும் இங்கே பேசினார்கள். பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்றும், அதற்கு இந்த அவையினுடைய ஒப்புதலை அதற்குப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவரே சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதி, இன்றைக்கு வர முடியவில்லை என்று சொல்லியிருக்கலாம். பெங்களூரில் அந்த அம்மையார் மீது ஒரு வழக்கு நடைபெறுவது உங்களுக்குத் தெரியும். வருமானத்திற்கு மீறி - அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட 70, 80 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார் என்று ஒரு வழக்கு நடைபெறுகிறது. அந்த வழக்கில் குறைந்தது 50 வாய்தா வாங்கியாகி விட்டது. இப்போது தேர்தல் வரவிருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாக வேண்டிய கட்டம் வந்துவிட்டது. இந்த நேரத்திலே அந்த வழக்கு நடைபெற்றால், வழக்கிலே தீர்ப்பு வந்தால், இந்த அம்மையார் தேர்தலிலே நிற்க முடியுமா? (கைதட்டல்) என்று சந்தேகம் வந்துவிட்டது. அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு? எப்படிப்பட்ட தீர்ப்பு? என்பதையெல்லாம் நான் சொல்லமாட்டேன் - சொல்லக்கூடாது. நீதிமன்றத்திலே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அது நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்ததே தவிர, என்னுடைய கருத்தைப் பொறுத்தது அல்ல. ஆகவே, நான் அதைப்பற்றியெல்லாம் விவரமாகச் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. உடனே “இல்லை, இல்லை - எனக்கு உடம்பு சரியில்லை - வரமுடியாது” என்று சொல்ல, அதற்கு ஆதாரமாக எங்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். (கைதட்டல்) நாம் எப்படியெல்லாம் பயன்பட வேண்டியிருக்கிறது பாருங்கள். நேற்றைக்கு ஆஜராக வேண்டிய அந்த நிகழ்ச்சி மாற்றி வைக்கப்படக் கூடும் - அது வேறு. ஆக, “எதற்கும் பயப்பட மாட்டேன். நீதிக்கு முன்னால் நீதியை நிலைநாட்டி நிற்பேன்” என்றெல்லாம் சொல்கின்றவர்கள், இன்றைக்கு நீதியை வளைப்பதற்கு என்னென்ன தந்திரங்கள் உண்டோ, அவைகளையெல்லாம் செய்து பார்க்கிறார்கள் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேனே அல்லாமல், வேறல்ல.
ஒவ்வொருவரும் பேசும்போதும் நான் எண்ணிக் கொண்டேன் - ஏறத்தாழ இன்றைக்கு அண்ணா அறிவாலயத்தில் ஒரு பொதுக் கருத்துக்கான பட்டிமன்றமே நடைபெறுவது போல் தோன்றுகிறது என்று எண்ணி நான் மகிழ்ந்தேன்.
ஏனென்றால், ஒவ்வொருவரும் மேடையிலே பேச விட்டால், அரை மணி நேரத்திற்கும் மேல், ஒரு மணி நேரத்திற்கும் மேல் - “போதும், போதும்” என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்கள்.
முக்கியமான நேரத்தில் - இந்த இயக்கத்தினுடைய அடிப்படைக் கொள்கைகளை, இந்த இயக்கத்திற்கு ஏற்படுகின்ற எதிர்ப்புகளைச் சமாளிக்கின்ற அந்தத் திறன்களை வெளிப்படுத்துகின்ற ஆற்றலாளர்கள் இன்றையதினம் வந்து சேர்ந்திருக்கின்றீர்கள்.
உங்களையெல்லாம் நான் வரவேற்று மகிழ்கிறேன். (கைதட்டல்)
இன்றைக்கு நாட்டில் பல்லாயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்களால் ஜனநாயகத்தினுடைய நெறியைப் பின்பற்றி - இந்திய நாட்டிலே எந்த ஜனநாயகத்தை ஆண்டாண்டுக் காலமாகப் போற்றி வந்திருக்கிறோமோ, போற்றி வளர்த்து வந்திருக்கிறோமோ, அந்த ஜனநாயகத்தின் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா அவர்களால் தயாரிக்கப்பட்ட ஜனநாயகவாதிகளாகிய நாங்கள், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒப்பற்ற இன உணர்வுக் கழகத்தின் சார்பில் ஆட்சி அமைத்து - இந்த ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சி என்ற நிலையில் பாராட்டுக்களைப் பெற்று, சிறப்புக்களைப் பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில்,
இதை இழந்தவர்கள் - இந்தப் பொறுப்பைப் பெற முடியாமல் ஒதுங்கி நின்றவர்கள் - விலகி நின்றவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் - மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள் - மீண்டும் இந்த ஆட்சியைப் பிடிப்போம் என்று முழங்கிக் கொண்டு - “ஆட்சியைப் பிடிப்போம்” என்றால், ஏதோ தவறுதலாக, கொள்கைக்கு மாறாக - அண்ணா உருவாக்கிய இலட்சியங்களுக்கு எதிராக ஒரு ஆட்சி நடைபெறுவதைப் போலவும், அதை மாற்றி மீண்டும் அண்ணாவினுடைய இலட்சியங்களை - அவருடைய கருத்துக்களைக் கொண்ட ஒரு ஆட்சியை அமைக்கப் போவதாகவும் இன்றைக்கு ஒரு நாடகத்தை, ஒரு கூத்தினை நாட்டிலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்றுவரையிலே கூட, இந்த ஆட்சியை நாம் நீடித்து நடத்த இருக்கிறோமா - அதற்கு மக்களுடைய ஆதரவு தொடருகிறதா என்ற வகையிலே - சட்டப் பேரவையில் விவாதமே நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 7, 8 நாட்களாக நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலளிக்கின்ற வகையில், நம்முடைய நிதியமைச்சர் - அவை முன்னவர் பேராசிரியர் அவர்கள் - பல வாதங்களுக்குப் பதில் கூறி நேற்று நிறைவுரை ஆற்றினார்கள்.
அதற்கு முன்பு இறுதியாக பேசிய இன்றைய எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் நண்பர் பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது, “நீங்கள் எல்லாம் வீட்டிற்குப் போகிற காலம் வந்துவிட்டது - நாங்கள் அந்த இடத்திலே வந்து அமரப் போகிற நேரம் வந்து விட்டது - எங்கள் அம்மா முதலமைச்சராக வந்து அமருவார்” - என்றெல்லாம் சொல்லி, தன்னுடைய கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
பேராசிரியர் அவர்கள் பதில் சொல்லும்போது சொன்னார் - “மிக வேகமாக, மிக ஆணித்தரமாக பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய கருத்துக்களையெல்லாம் இங்கே எடுத்துச் சொல்லி, நாங்கள்தான் ஆட்சியிலே வந்து அமரப் போகிறோம் என்று நாற்காலிகளையெல்லாம் காட்டிப் பேசினார்.
ஆனால், அவருக்கு நான் சொல்வேன். அவருடைய எண்ணம் ஈடேறாது என்பதை நான் எப்படி விளக்குகிறேன் என்றால்.. ” என்று கூறிவிட்டு - பேராசிரியர் அவர்கள் அவருக்கே உரிய நகைச்சுவையோடு அல்ல - பொறுப்புணர்ச்சியோடு சொன்னார்.
“நீங்கள் யார் வேண்டுமானாலும் அமரலாம் - அம்மா வந்து முதலமைச்சராக உட்காருவார் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சொன்னார் - ஆனால், அம்மா இப்பொழுது ஓய்விலே இருப்பதாக நமக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்” என்று சொன்னார் - அவ்வளவுதான். “அம்மா ஓய்விலே இருக்கிறார்” என்று சொன்னார்.
இதைச் சொன்னால் என்ன தப்பு? வந்ததே பார் பன்னீர்செல்வத்திற்கு ஆத்திரம்! அவருக்குப் பக்கத்திலே இருந்தவருக்கு வந்தது அதை விட அதிகமாக ஆத்திரம்! இவர் எரிமலையாகப் பொங்கினார் என்றால், அவர்கள் எல்லாம் பூகம்பமாக வெடித்து - “எப்படிச் சொல்லலாம் ஓய்விலே இருக்கிறார்?” என்று கேட்டனர்.
உடனே நான் எழுந்துகூட அல்ல; அமர்ந்தபடியே சொன்னேன். ஒரு கடிதத்தைக் காட்டி, “நேற்றைக்கு நீங்கள் சட்டமன்றத்திலே அளித்து, ஒரு தீர்மானம் என்ற பெயரிலே அதை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டீர்களே? அதிலே இருக்கிறது - உங்கள் அம்மா உடல் நலமில்லாமல், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் - அவருக்குப் பரிபூரண ஓய்வு தேவை என்று - (பலத்த கைதட்டல்) டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்று எழுதப்பட்ட கடிதத்தைப் படித்துக் காட்டச் சொன்னேன்.
அதைக் கடிதம் என்றுகூடச் சொல்லமுடியாது. பேராசிரியர் அவர்கள் குறிப்பிடுவதைப்போல, அந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று பன்னீர்செல்வம் கொடுத்த தீர்மானம் அது. “உடல் நலம் சரியில்லை - பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்ற அந்த தீர்மானம். “ஓய்வு” என்றால் உங்களுக்குத் தெரியும். அது என்ன “பரிபூரண ஓய்வு?” (கைதட்டல்) நான் அந்த விளக்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை.
அதை ஏன் தீர்மானமாக அவையிலே நிறைவேற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதைத் தீர்மானமாக நிறைவேற்றுங்கள் என்று சபாநாயகரிடம் சொன்னேன்.
அதன்படி, அன்றைக்கு அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த அம்மையார் அவைக்கு வரவில்லை. எவ்வளவு புத்திசாலித்தனமாக - எவ்வளவு அறிவுக் கூர்மையோடு - எவ்வளவு தந்திரத்தோடு அந்தக் கடிதம் கொடுக்கப்பட்டது என்பது பிறகுதான் எங்களுக்குப் புரிந்தது.
அந்த வழக்கைப் போட்டு 15 வருடத்திற்கும் மேலாகிறது. 15 வருடங்களாக வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி - வாய்தாவிற்கும் கால் வலித்து, அலுத்துப் போய் - கடைசியாக பெங்களூர் நீதிமன்றத்தில் - ஏன் பெங்களூருவில் அந்த வழக்கு நடைபெறுகிறது என்றால், தமிழ்நாட்டில் அந்த வழக்குப் போடும்போது தி.மு.க. ஆட்சியில் இருந்ததால், ஒரு வேளை நீதிபதிகளை எல்லாம் நாங்கள் பயமுறுத்தி, அந்த அம்மையாருக்கு எதிராகத் தீர்ப்பு வந்து விடுமோ என்று பயந்து, வேறு மாநிலத்தவரால் இந்த வழக்கு நடைபெற வேண்டுமென்று அவர்களே வலியுறுத்தி, அதன்படி பெங்களூரூவிற்கு மாற்றப்பட்ட வழக்கு - இந்தச் சொத்து சேர்த்த ஊழல் வழக்கு.
அவர்கள் கடைசியாக வாய்தாவெல்லாம் வாங்க முடியாது - இப்போது நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிற கட்டம் எல்லாம் வந்துவிட்டது - நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிறபோது, “குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வரவேண்டும்” என்று கண்டிப்பாக நீதிபதி சொல்லிவிட்டார்.
எங்களைப் பயன்படுத்தி, அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, நாங்கள் வாக்களித்து, “சரி, பாவம் - சில நாட்கள்தானே? ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும்” என்று சொல்லப் போக, அந்தச் செய்தியை பெங்களூர் நீதிமன்றத்திலே சொல்லி - “பாருங்கள், பாருங்கள் - தமிழகச் சட்டப் பேரவையிலே கூட, எனக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்” என்று எடுத்துக் காட்டி, நீதிபதியை நம்ப வைக்க முயற்சித்து, நீதிமன்றத்தில் தப்பித்து இருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்திலே நீங்களெல்லாம் இன்றைக்கு இணைந்திருக்கிற இந்த நல்ல நாளில், நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்வது, திராவிட முன்னேற்றக் கழகம் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்று அண்ணா அவர்கள் சொன்ன அந்தத் தாரக மந்திரத்தைத்தான் அடிப்படையாக வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் - இனமான இயக்கம் - இன உணர்வு இயக்கம் - “திராவிட” என்கின்ற அந்த உணர்வை வளர்க்கின்ற இயக்கம் - தமிழ் மொழியைக் காப்பாற்றுகின்ற இயக்கம்.
இந்த அடிப்படை இலட்சியங்களை, உணர்வுகளை மறந்துவிடாமல், என்றென்றைக்கும் இந்தக் கழகம் எடுக்கின்ற தன்மான இயக்கத்தினுடைய முடிவுகளுக்கு - தமிழை வாழ வைக்கின்ற போராட்டங்களுக்கு அனைவரும் கலந்து கொள்கின்ற அளவில் தயாராக இருக்க வேண்டுமென்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்’’
No comments:
Post a Comment