தேர்தல் வரப்போகிறது என்பதால் அரசு ஊழியர்கள் மீது ஜெயலலிதாவுக்கு திடீர் அக்கறை வந்துள்ளதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி 26.02.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் அரசு அலுவலர்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார்கள் என்பதை அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மறக்கலாமா? போக்குவரத்து ஊழியர்களை பற்றிக்கூட ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகிறாரே, அவர்கள் இடையே நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்புடைய சங்கத்திற்கு எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பது மறந்து விட்டதா?
அரசு அலுவலர்களுக்காக தற்போது அறிக்கையிலே பாசாங்கு செய்து பரிந்து பேசும் ஜெயலலிதா ஆட்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அழைத்துப் பேசாதது மட்டுமல்ல, அதிரடிச் சட்டங்களைப் பிரயோகித்து அவர்களை அடக்கி ஒடுக்கவும், நிர்வாகிகளை கைது செய்யவும், ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்யவுமான அடக்குமுறைக் கொடுமைகளை ஏவி விட்டார். இந்த பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் தரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த துரைமுருகன் 25&10&2002 அன்று வற்புறுத்தினார். அப்போது ஜெயலலிதா ஜேக்டோ& ஜியோ அமைப்பின் சார்பில் தன்னைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அப்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் போராட்டக் குழுவினரிடம் போராட்டத்தை கை விட்டுவிட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறி அவர்களை சந்திக்கவே மறுத்துவிட்டார். இந்தப் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுத்ததோடு தி.மு.க உறுப்பினர்களையும் வெளியேற்றினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி நம்பியமுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் காசிப்பாண்டியன் தீக்குளித்து மாண்டார். தேனி மாவட்டம், பெரியகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி மஞ்சளாறு அணைப் பகுதி ஆசிரியர் அப்துல் சத்தார் அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து தற்கொலை செய்து இறந்தார். இந்த இரண்டு குடும்பங்களுக்கும் திமுக அறக்கட்டளை சார்பில் தலா ஸீ50 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் 10 நாட்களாக நடந்த போராட்டம் அதற்குமேல் தொடர முடியவில்லை. அரசாங்கம் தன் அராஜகப் பிடிவாதத்திலிருந்து இறங்கி வர மறுத்தது. போராட்டம் நடத்திய சங்கத் தலைவர்கள், அரசு அழைத்து பேச வேண்டுமென்று தொலைபேசி வாயிலாக கூறிக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் ஜெயலலிதாவோ இனி பேச ஒன்றும் இல்லை, பணிக்குத் திரும்பாவிட்டால் ‘‘எஸ்மா’’ பாயும், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டினார். போராட்டம் நடத்திய நாட்களுக்கு ஊதியம் கிடையாது என்று கூறிய அரசு, அந்த நாட்களை விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமென்று அறிவித்தது. வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும், சஸ்பெண்ட் உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என்றும், பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்காது என்றும் அளித்த உறுதிமொழியேற்று போராட்டம் கைவிடப்பட்டது.1997ம் ஆண்டில் திமுக ஆட்சியில் 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2001ல் அதிமுக ஆட்சியில், சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் திமுக ஆட்சியில் பணி தரப்பட்டு வேலை பார்த்துக் கொண்டி ருக்கின்றார்கள். அவர்கள்தான் அதிமுக ஆட்சியிலே தாங்கள் வேலையில்லாமல் இருந்த 41 மாதங்களை பணியிலே இருந்ததாக கணக்கிலே கொள்ள கேட்டு நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள்.
அதற்கு முக்கிய காரணமே ஜெயலலிதா ஆட்சிதான். தலைமைச் செயலகத்திலிருந்து மதியம் வீட்டிற்கு நான் புறப்பட்டபோது, சாலைப் பணியாளர்களைப் பற்றிய செய்தி எனக்கு கூறப்பட்டவுடன், போலீஸ் அதிகாரிகளிடம் நான் சாலை பணியாளர் பிரதிநிதிகளை என்னைச் சந்திக்கச் செய்யுமாறு செய்தேன். அவர்களின் பிரதிநிதிகள் ஐந்தாறு பேரை என் இல்லத்திற்கே அழைத்து வந்தார்கள். அந்த ஐந்தாறு பேரிடம் அரசின் மூத்த அதிகாரிகளை அழைத்து பேசச் செய்தேன். பின்னர் அவர்கள் என்னைச் சந்தித்தபோது இப்படிச் செய்யலாமா என்று கூறிவிட்டு பின்னர் நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ளச் சென்றேன். இதைப்பற்றி எதுவும் தெரியாத ஜெயலலிதா விரைவில் தேர்தல் வரப்போகிறது என்றதும், அவசர அவசரமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டுமென்று தெரிவித்துள்ளார். அவருடைய ஆட்சி காலத்தில் பேச மறுத்தவர், அந்த அரசு அலுவலர்களையெல்லாம் நள்ளிரவில் அவர்கள் வீடு புகுந்து கைது செய்து சிறையிலே அடைத்தவர், அவர்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுத்தவர், தற்போது நான் என் வீட்டிற்கே அழைத்துப் பேசியதைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே அறிக்கை விடுகிறார் என்றால் அந்த அரசு அலுவலர்களே சிரிக்க மாட்டார்களா?
நேற்று முன்தினம் கூட, அதாவது 25&2&2011 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், வருவாய்த் துறை கிராம ஊழியர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம், நில அளவைத் துறை சங்கங்கள், அதன் கூட்டமைப்பு நிர்வாகிகள் தனித்தனியாக என்னை சந்தித்தனர்.
திமுக அரசு, அதன் அலுவலர்களுக்காக தொடர்ந்து செய்து வரும் நற்காரியங்களுக்காக நன்றி தெரிவித்தனர். அவர்களது எஞ்சியுள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாக உறுதி அளித்ததின்படி போராட்டங்களை திரும்பப் பெற்று பணிக்குத் திரும்புவதாக என்னிடம் கூறிச் சென்றார்கள். அரசு அலுவலர்களின் மிகப்பெரிய சங்கமான அரசு அலுவலர் ஒன்றியத்தின் தற்போதைய தலைவரான இரா.சண்முகராஜன், அவரது சங்க நிர்வாகிகளும் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த செய்திகளையெல்லாம் மறைத்து அரசு அலுவலர்களின் அபிமானத்தைக் கொஞ்சமாவது பெற முடியாதா என்ற நப்பாசையில் ஜெயலலிதா அறிக்கை விட்டு, அந்த அலுவலர்கள் அதிமுக ஆட்சியில் பட்ட சிரமங்களையெல்லாம் நினைவுபடுத்தி, நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல நடந்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா தனது அறிக்கையில் சத்துணவு ஊழியர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்த ஆட்சியில் 2 லட்சத்து 12981 சத்துணவு பணியாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக காலமுறை ஊதியம் அளித்ததோடு ஓய்வூதியம் தரவும் ஒப்புக் கொண்டிருக்கின்றோம்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எஸ்மா, டெஸ்மா சட்டங்களை நீக்கி அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கியதோடு 1&1&2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு ஸீ5155 கோடியே 79 லட்சம் கூடுதல் செலவில் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஸீ11093 கோடி அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக மட்டும் அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதே திமுக ஆட்சியிலேதான்.
ஊதியக் கமிஷன் பரிந்துரையிலே சில முரண்பாடுகள் இருப்பதாக அரசு அலுவலர்களின் சங்கங்கள் தெரிவித்த நேரத்தில், அதனையேற்று 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஸீ200 கோடி கூடுதல் செலவிலே ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை 1&8&2010 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தோம். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி ஸீ163 கோடி செலவில் கூடுதல் சலுகைகள் அளித்ததின் வாயிலாக 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன் பெற்றனர். அரசு அலுவலர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், சத்துணவு பணியாளர்களுக்காகவும், அங்கன்வாடி ஊழியர்களுக்காகவும், சாலைப் பணியாளர்களுக்காகவும் திமுக அரசு செய்துள்ள சாதனைகளையெல்லாம் பட்டியலிடுவ தென்றால் ஒருநாள் போதாது.
அதையெல்லாம் மறைத்துவிட்டு ஜெயலலிதா தற்போது ஏதோ திடீரென்று அரசு அலுவலர்களிடம் அக்கறை கொண்டவரைப் போல அறிக்கை நாடகம் போட்டால் அதனை நம்பி ஏமாற இனியும் அவர்கள் தயாராக இல்லை. என்னையும் என் குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும், விசாரணை நடத்த வேண்டுமென்றெல்லாம் புலம்புகின்றார் என்றால் அதற்கு காரணம் இன்னும் சில நாட்களில் அவர் மீதான ஸீ66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கிலே விசாரணை, தீர்ப்பு என்றெல்லாம் தன் மீது எங்கே சட்டத்தின் பாய்ச்சல் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம்தான். என்ன செய்வது? வினை விதைத்தவர்கள் வினையை அறுவடை செய்துதானே ஆக வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிக்கை யில் கூறி யுள் ளார்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிக்கை யில் கூறி யுள் ளார்.
No comments:
Post a Comment