மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை விரிவாக்க கட்டிட திறப்பு விழா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் ஆகிய நகராட்சிகள், திருநகர், பரவை, விளாங்குடி, வெள்ளாலப்பட்டி, பால மேடு, அலங்காநல்லூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1430 ஊரக குடியிருப்புகளுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கக கட்டிட வளாகத்தில் 27.02.2011 அன்று காலை நடந்தது.
விழாவில் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளை திறந்து வைத்தும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அவர், ‘’இந்த இனிய விழாவில் கலந்து கொண்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் இந்த விழாவிற்கு வருவதற்கு முன்பாக மதுரை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒரு வருடத்திற்கு கிடைக்கக் கூடிய தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் ரூ.1 1/2 கோடி அளவிற்கு மதுரை மாநகராட்சிக்கு தந்து திடீர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இங்கு வந்துள்ளேன்.
அந்த நிகழ்ச்சி என்னவென்றால் மாநகராட்சி பகுதிகளில் 15 இடங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் இடங்களில் உப்பு தண்ணீருக்கு பதிலாக நல்ல குடிநீர் வரும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
இங்கே நடைபெறும் விழாவில் ஒவ்வொன்றும் தனித்தனியாக நடத்தப்படும் விழா. விரைவில் தேர்தல் வரவுள்ள விஷயம் அனைவருக்கும் தெரியும். எனவே தான் அனைத்து விழாக்களையும் ஒன்றாக வைக்கும்படி மாவட்ட கலெக்டரிடமும், துணைவேந்தரிடமும் கேட்டு கொண்டேன். அதற்கேற்றாற்போல இன்று அனைத்து விழாவும் ஒரே விழாவாக சீரும் சிறப்புமாக நடந்துள்ளது.
உங்கள் (நெப்போலியன்) தொகுதியில் நான் எம்.பி.யாக இருந்திருந்தால் நீங்கள் ஒரு இணை அமைச்சராக ஆகியிருக்க முடியாது.
அதனை மறந்து விட்டு அவர் பேசிவிட்டார். மத்திய மந்திரி நெப்போலியன் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அவர் சினிமாத்துறையில் இருப்பதால் சாதனைகளை மனப்பாடமாக வைத்து பேசி இருக்கிறார்.
தென் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு நாங்கள் நிச்சயம் அவரை பயன்படுத்தி கொள்வோம். விழாவில் பேசிய உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன், அரசின் அடுக்கடுக்கான சாதனைகளை குறிப்பிட்டார். என்னையும், என்னை தேர்ந்தெடுத்த மதுரை மக்களையும் புகழ்ந்து பேசினார்.
நாங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முன்பே அவர் அந்த வேலையை இன்று தொடங்கி விட்டார். மறைந்து முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மதுரைக்கு பல்வேறு திட்டங் களை கொண்டு வந்தார். குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மெஜூராகோட்ஸ் மேம்பால திட்டம் அவரால் கொண்டுவரப்பட்டது.
நான் சமீபத்தில் திறந்து வைத்த செல்லூர் மேம்பாலமும் அவரது முயற்சி தான். சபாநாயகராக இருந்து மதுரை நகர மக்களுக்கு அவர் செய்த பணிகளை விட அமைச்சராக இருந்து நிறைய செய்வார் என்ற எதிர் பார்ப்பில் அமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பதவி ஏற்ற ஒரே வாரத்தில் நம்மை பிரிந்துவிட்டார். அவரை நேரில் பார்க்க விரும்பினேன். அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் மதுரைக்கு வரும்போது தமிழகத்தில் எந்த அமைச்சருக்கும் இல்லாத வரவேற்பை கொடுக்க போகிறேன் என்று கூறினேன்.
அப்படியென்றால் நான் வரமாட்டேன் என்று அவர் மறுத்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் காலமாகிவிட்டார்.
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழக புதிய வளாகம் “பி.டி.ஆர்.பழனி வேல் ராஜன் வளாகம்” என அழைக்கப்படும். மதுரையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் முதலமைச்சரை சந்தித்து பேசினேன்.
எப்படியாவது மதுரையில் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழகம் அமைய வேண்டும் என்று கேட்டேன். நான் கண்டிப்பானவன் என்பவது அவருக்கு தெரியும். எனவே உடனடியாக ஒப்புதல் வழங்கி இங்கு அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய விழாவில் 1994 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்களுக்காக இந்த அரசு செய்து வரும் சாதனைகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள். இங்கே பேசிய பலரும் டாக்டர் கலைஞர் 6-வது முறையாக முதலமைச்சராக வருவார் என குறிப்பிட்டனர்.
நான் கூறுகிறேன் 6-வது முறை மட்டுமல்ல, 7-வது முறையும் கலைஞர் தான் முதலமைச்சராக வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்று உரையாற்றினார்.
No comments:
Post a Comment