பச்சிளம் குழந்தைகளின் உயிகாக்கும் அவசரகால சிகிச்சைத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் உடல்நலப் பாதுகாப்பை, சுகாதாரமான வாழ்வை உறுதிப்படுத்திடவேண்டுமெனும் உணர்வோடு 2006க்குப் பின் இந்த அரசு உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ஏழைச் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம்; பள்ளிச்சிறார் இருதயப் பாதுகாப்புத் திட்டம், அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம், ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ள 6000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம், அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவசச் சேவைத் திட்டம் என்பனபோல பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி நாடெங்கும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
மக்கள் நல்வாழ்வுத் துறையில் முத்திரைகள் பல பதித்துவரும் இத்தகைய திட்டங்களுடன் முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று (26.2.2011) நடைபெற்ற விழாவில் மேலும் பல புதிய மருத்துவ நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்கள்.
அவற்றின் விவரம்:
சென்னை மண்டலம் சார்ந்த பகுதிகளில் கொடையாளர்களிடமிருந்து ரத்த சேகரிப்பு செய்திட, 1 கோடியே 39 இலட்ச ரூபாய்ச் செலவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய ரத்த சேமிப்பு ஊர்தியையும்;
மூலை முடுக்குகளில் உள்ள ஏழை எளியவர்களுக்கும் அவசர மருத்துவ உதவிகள் கிடைக்க உதவும் வகையில் இந்த அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் அவசர மருத்துவ ஊர்தி இலவசச் சேவைத் திட்டத்தின்கீழ் தற்போது இயங்கிவரும் 385 மருத்துவ ஊர்திகளுடன் 5 கோடியே 96 இலட்ச ரூபாய்ச் செலவில் வாங்கப்பட்டுள்ள 31 அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவசச் சேவை விரிவாக்கத் திட்டத்தையும்;
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காச் சேர்க்கப்பட்டு இறந்து விடுவோரின் உடலை அவர்களது இருப்பிடத்திற்கு அல்லது மயானத்திற்கு இலவசமாக எடுத்துச் செல்ல உதவும் இலவச அமரர் ஊர்தி சேவைத் திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படுவதால் அத்திட்டத்தின் முதல் கட்டமாக 10 இலவச அமரர் ஊர்திகளையும் முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பிறந்து ஒரு வயது வரையுள்ள குழந்தைகளிடையே ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைத்து 15 கோடி ரூபாய்ச் செலவிலான பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் அவசரகால சிகிச்சைத் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்கான விளக்க அட்டைகளை 10 குழந்தைகளுக்கு வழங்கினார். 69 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாமக்கல், பரமக்குடி, கமுதி, கீழக்கரை, இராமேசுவரம், திண்டிவனம், வாடிப்பட்டி, தொண்டாமுத்தூர், சூலூர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராயப்பேட்டை மருத்துவ மனை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மனநலக் காப்பகம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்தியமுறை மருத்துவமனை ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள 25 புதிய கட்டடங்களையும், சென்னை திருவொற்றியூரில் டைம்ஸ் பவுண்டேஷன் சார்பில் 5 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன அரசு மருத்துவமனைக் கட்டடத்தையும் திறந்து வைத்த முதலமைச்சர், தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின்கீழ், 48 கோடி ரூபாய்ச் செலவில் கோவை, வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, தேனி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவுகளுக்குத் தேவைப்படும் கட்டடங்களுக்கும், சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ வளாகத்தில் 3 கோடியே 60 இலட்சம் ரூபாய்ச் செலவில் மருந்தாளுநர் பட்டயப் பயிற்சிக் கட்டடம் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் பயிற்சிக் கட்டடம் ஆகியவற்றுக்கும் முதலமைச்சர் இன்று (26.2.2011) அடிக்கல் நாட்டினார்.
மேலும், மூன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஏறத்தாழ 55 இலட்சம் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 5 கோடியே 66 இலட்சம் ரூபாய்ச் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான பல்பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்து 5 பல் மருத்துவர்களுக்கு இத்திட்டத்திற்கான கருவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதாரக் குழுக்கள் அமைத்து, 32 இலட்சத்து 6 ஆயிரம் மாணவ மாணவியர் பயனடையும் வகையில் 10 மாவட்டங்களில் 6 கோடியே 18 இலட்சம் ரூபாய்ச் செலவில் செயல்படுத்தப்படும், மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதாரத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்து புதிய சுகாதார அட்டையை வழங்கி, திட்டக் கையேடு மற்றும் குறுந்தகடுகளை வெளியிட்டார்.
4 கோடியே 86 இலட்சம் ரூபாய்ச் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ள 48 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய தர நிறுவனம் வழங்கியுள்ள தரச் சான்றிதழ்களைப் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநரிடம் முதலமைச்சர் கலைஞர் வழங்கினார்.
No comments:
Post a Comment