கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 28, 2011

இன்னும் 6 வருடங்கள் நானும் இருப்பேன்; ஆட்சியும் இருக்கும் : கலைஞர் பேச்சுசமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ சேகர்பாபு திமுகவில் இணைந்தார். இதற்கான இணைப்பு விழா பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர்.தியாகராயர் கல்லூரி மைதானத்தில் 26.02.2011 அன்று நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி,


‘’இன்றைய தினம் தியாகராயர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற மகத்தான இந்த விழாவை காணும்பொழுது என்னுடைய நெஞ்சில் பல அலைகள் - பல்லாண்டுகாலமாக இந்த வட்டாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடிகளை ஏற்றவும், கொள்கைகளை முழங்கச் செய்யவும் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டு, இந்த வட்டாரத்திலே வாழ்ந்த கழக நண்பர்களோடு கலந்து பேசி, உரையாடி, ஒத்துழைத்து திராவிட இயக்கத்தை வளர்ப்பதற்குப் பட்ட பாடுகளை எல்லாம் இந்த மேடையில் அமர்ந்தபோது நான் எண்ணிப்பார்க்கத் தலைப்பட்டேன்.

திராவிட இயக்க வரலாற்றில் வடசென்னைக்கு ஒரு தனி இடம் உண்டு. ஏனென்றால், அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, அறிவித்த இடம் வடசென்னைதான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக, பிறப்பிடமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பாசறை வீரர்கள் தங்கும் இடமாக, பயிற்சி பெற்ற இடமாக வழங்கிய இடம்தான் இந்தப் பகுதி.

இங்கே புகழ் பெற்ற தியாகராயருடைய பெயரால் அமைந்துள்ள கல்லூரியும், அந்தக் கல்லூரியினுடைய நிதித் தேவைக்காக, அதனை நிறைவு செய்வதற்காக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் பட்ட பாடும், அப்படிப்பட்ட பணியில் அடியேனுடைய பங்கும் உண்டு என்று எண்ணுகின்ற அகமகிழ்ச்சியும் இந்த நேரத்திலே என்னுடைய நினைவில் நிழலாடுகின்றன.


ஒன்றை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். தம்பி துரைமுருகன் இங்கே குறிப்பிட்டார் - திருவொற்றியூர் டி. சண்முகம் பிள்ளை அவர்களைப் பற்றி. துரைமுருகன் நீண்டகால கழகத் தோழராக அப்போது தன்னை ஒப்படைத்துக் கொள்ளாத காரணத்தாலோ என்னவோ, சண்முகம் பிள்ளை என்று சொல்லுவதற்குப் பதிலாக சண்முகம் முதலியார் என்று சொன்னார்.


டி. சண்முகம் என்பதுதான் அவருடைய பெயர். பிள்ளை என்பதற்கு மரியாதைக்காக அந்த மூன்றெழுத்துக்கள் அவருடைய பெயருக்குப் பின்னால் சேர்க்கப் பட்டிருந்தாலும்கூட, சுயமரியாதைக்காரன் சாதியை ஒட்டிக்கொள்ள மாட்டான் என்ற பெரியாருடைய வழியில் வந்தவன் நான், எனவே எனக்கு சாதிப் பெயர் தேவையில்லை - என்று சண்முகம் பிள்ளை வெறும் சண்முகமாக திருவொற்றியூரில் நகராட்சித் தலைவராக அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்டக் கழகத்தினுடைய தலைவராக விளங்கி அரும்பணிகள் பலவற்றை இந்த வட்டாரத்து மக்களுக்காக ஆற்றியவர் டி.சண்முகம் அவர்கள் ஆவார்கள்.

இந்த இடத்திற்கும், சண்முகத்திற்கும் என்ன தொடர்பு என்றால், இங்கே அண்ணா எழுதிய நாடகங்கள் - அண்ணா நடித்த நாடகங்கள் - அண்ணாவும் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்த நாடகங்கள் - அண்ணாவும் நானும் இணைந்து நடித்த நாடகங்கள் பல நடைபெற்றது உண்டு. அந்த டி. சண்முகம் அவர்கள் அண்ணாவிடத்திலே எப்படி தன்னை ஒப்படைத்துக்கொண்டவர் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.


ஒரு நாடகத்தில், அண்ணா அவர்கள் துரைராஜ் என்ற ஒரு பகுத்தறிவுவாதியின் பாத்திரத்தை ஏற்று நடிப்பார். அந்த துரைராஜ் சமுதாயத் தொண்டுகளை ஆற்றி முதலாளிகளை எல்லாம் வென்று, மடாதிபதிகளையெல்லாம் முறியடித்து, பண்டார சன்னதிகளையெல்லாம் ஒரு கை பார்த்து, இறுதியில் தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்ற சூழ்நிலையில், தனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளையெல்லாம் சமாளிக்க முடியாமல், தான் ஆற்றிய தொண்டினை மக்களுக்காக அப்படியே அர்ப்பணித்துவிட்டு ஒரு துளி விஷத்தை எடுத்து அருந்தி, மாண்டு விடுகிற நிகழ்ச்சி ஒரு காட்சியாக அந்த நாடகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.


அண்ணா அந்தப் பாத்திரத்தை ஏந்தி நடித்தபோது, விஷமருந்தி துரைராஜ் என்ற அந்தக் கதாபாத்திரம் இறந்து போகிற அந்தக் காட்சியில் எதிரே அமர்ந்து அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் டி. சண்முகம் அவர்கள் ‘‘அண்ணா, அண்ணா, நீ சாகக்கூடாது’’ என்று நாடகத்தையே மறந்துவிட்டு, நடிப்பவர் அறிஞர் அண்ணா என்பதை மறந்துவிட்டு, உண்மையிலேயே அது நாடகப் பாத்திரம் சாகப் போகிற காட்சி என்பதை மறந்துவிட்டு - அண்ணா உண்மையாக சாகப்போகிறார் என்று எண்ணி ‘‘அண்ணா, நீ சாகக்கூடாது’’ என்று முன் வரிசையிலே அமர்ந்திருந்த டி. சண்முகம் அவர்கள் எழுந்து மேடைக்கு ஓடி, அண்ணாவைத் தடுத்து விட்டார். நடிப்பைக் கெடுத்து விட்டார்.


இது அந்தக் காலத்திலே நடந்தது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அண்ணா மீது அந்த அளவுக்கு அபரிமிதமான அன்பையும், ஆசையையும் வழங்கி அவருடைய இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்த பெரியவர்கள் சுயமரியாதை தளகர்த்தர்கள், தன்மான இயக்க வீரர்கள் இந்த இயக்கத்திலே அத்தனை பேர் இருந்தார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.


அந்த நாடகத்தைப் போல பல நாடகங்களை இதே மைதானத்தில் அண்ணா அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். அதிலே ஒரு நாடகம்தான், சிவாஜியோடு அண்ணா அவர்கள் நடித்த நாடகம்.

ஒருநாள் சிவாஜியோடு சேர்ந்து நடித்தார் - இன்னொரு நாள் அண்ணா என்னோடு சேர்ந்து நடித்தார் - நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம். எதற்காக, எங்களது நடிப்புத் திறனைக் காட்டுவதற்கா? அல்ல! அல்ல! அப்படி நடிக்கிற நாடகத்திற்குக் கட்டணம் வசூலித்து, அந்தக் கட்டண வசூலில் மிச்சப்பட்ட பணத்தை தியாகராயர் கல்லூரி நிதிக்குத் தருவதற்காக நாடகங்களை அண்ணாவும் நானும் சேர்ந்து நடித்தோம். அந்த நிகழ்ச்சிகளெல்லாம் எனக்கு மிகப் பசுமையாக நினைவுக்கு வருகிறது.


அந்த அண்ணா இல்லையே என்ற ஆதங்கத்தோடு நான் மிகுந்த வேதனையோடு இன்றைக்கு இந்த மேடையிலே பல ஆண்டுகளுக்குப் பிறகு காணுகிற இந்த மைதானத்தைக் கண்டு மனம் வெதும்புகிறேன்.


அண்ணா மாத்திரமல்ல! திருவொற்றியூர் சண்முகம் மாத்திரமல்ல! இன்னும் எத்தனையோ பேர் - இந்த இயக்கத்தை வளர்த்தவர்கள் இன்று இல்லை. ஆனால், அவர்கள் இட்ட எரு இன்றைக்குத் தருவாகி, அந்தத் தரு நிழலில் நாமெல்லாம் அமர்ந்திருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.


அந்த நிழலில் வளர்ந்த மரங்களில் ஒன்றுதான் - செடிகளில் ஒன்றுதான் - கொடிகளிலே ஒன்றுதான் நம்முடைய தம்பி சேகர் பாபு. இந்தக் கொடி வேறொரு மரத்திலே படர்ந்திருந்தது. இன்றைக்கு அங்கிருந்து விடுபட்டு, எந்த மரத்திலே படர்ந்தால் மரத்திற்கும் நல்லது, கொடிக்கும் நல்லதோ, அந்த மரத்திலே இன்றைக்குப் படர்ந்திருக்கின்றது. அதுதான் இந்த விழா.துரைமுருகன் பேசும்போது சொன்னார் - அ.தி.மு.க. கப்பல் உடைந்துவிட்டது. ஓட்டையாகி விட்டது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று சேகர் பாபு இங்கே வந்துவிட்டார் என்று துரைமுருகன் சொன்னார்.


நான் அதை சேகர் பாபுவுக்குப் பாராட்டாகக் கருதவில்லை. கப்பல் உண்மையிலேயே உடைந்திருந்தால் அதிலே பயணம் செய்கிறவர்கள் அந்த ஓட்டையை அடைத்து, தானும் பயணம் செய்து, மற்றவர்களும் பயணம் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அதுதான் கடமை. ஆனால், துரைமுருகன் சொன்னது, ஏதோ கப்பல் உடைந்ததும் இவர் ஓடிவந்துவிட்டார் என்பதைப் போல துரைமுருகன் சொன்னார்.அப்படி அல்ல! கப்பல் உடையவில்லை. நன்றாகத்தான் இருந்தது. பளபளப்பாக இருந்தது. ஒரு சிறு ஓட்டை கூட இல்லாமல் இருந்தது. வலுவாக இருந்தது. ஆனால், கப்பல் எந்த திசைக்கு வந்து எங்கே கரை சேர வேண்டுமோ அந்தக் கரைக்கு வராமல் வேறு கரைக்கு திசை மாறிச் சென்றது.

திசை மாறுகிற கப்பலில் நமக்கெல்லாம் வேலையில்லை என்று சேகர் பாபு வந்து விட்டாரே தவிர, ஓட்டை விழுந்துவிட்டது, ஆகவே அது நமக்கு உபயோகப்படாது என்று வந்தவர் அல்ல.எனக்கு சேகர் பாபுவைப் பற்றி நன்றாகத் தெரியும். நான் ஓராண்டு காலத்திற்கும் மேலாகவே சேகர் பாபுவைப் பற்றி தம்பி ஸ்டாலினிடத்திலே பேசியிருக்கிறேன். சட்டப் பேரவையில் நான் பார்த்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் - இன்னும் தெளிவாகச் சொன்னால் அ.தி.மு.க. உறுப்பினர்களில் தெளிவு படைத்தவராகத் தெரிந்தவர் தம்பி சேகர் பாபு என்பதால், இது என்ன கப்பல் திசைமாறிப் போகிறது, இவருக்கு இது தெரியவில்லையா, அந்தக் கப்பலில் உட்கார்ந்திருக்கிறாரே என்ற அந்த அர்த்தத்தில்தான் நான் ஸ்டாலினிடத்திலே பல முறை கேட்டிருக்கிறேன். ‘‘அவர் எதையும் அவசரப்பட்டுச் செய்ய மாட்டார். ஆர அமர யோசித்து, இறுதியாகத்தான் முடிவெடுப்பார்’’ என்று என்னிடத்திலே ஸ்டாலின் தெளிவுபடுத்தினார்.

அவர் அப்படித்தான் முடிவெடுத்தார் - எடுத்தால் - அந்த முடிவு வலிவான முடிவாக இருக்கும். அந்த முடிவு யாரும் விமர்சிக்கத்தக்க முடிவாக இல்லாமல், பாராட்டத்தக்க முடிவாக இருக்கும் என்பதற்கு உதாரணமாகத்தான் இன்றைக்கு சேகர் பாபு நம்மிடத்திலே வந்து வீற்றிருக்கின்ற இந்தக் காட்சி!


சேகர் பாபு துடிதுடிப்பாக சட்டப் பேரவையில் பேசக்கூடியவர். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு துடிதுடிப்பாகப் பேசக்கூடியவர் இங்கல்லவா இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதுண்டு.


அதற்காக வலை வீசியது கிடையாது. வரும்போது வரட்டும், அப்படி வருகிற நேரத்தில் நாம் தவழ்ந்து வருகிற குழந்தையை தாய் தாங்கிக் கொள்வதைப் போல தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்போம் என்றுதான் காத்திருந்தேன். காத்திருந்த என்னுடைய எண்ணம் இன்றைக்கு கைகூடிவிட்டது.


நான் சேகர் பாபுவுக்கு சொல்வேன். அவரோடு இணைந்து இன்றைக்கு வந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான திராவிட இயக்கத் தோழர்களுக்கும், தம்பிமார்களுக்கும் சொல்லுவேன் - நீங்கள் இருந்த இடம் என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.


அவர்களால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற இடம். அங்கிருந்து நீங்கள் இங்கு வந்துவிட்டதற்குக் காரணம் - எம்.ஜி.ஆர். உருவாக்கிய அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். என்ன கருதி அந்த இடத்தை உருவாக்கினாரோ, அதற்கு நேர்மாறாக, அவருக்கே பகையாக, அவருக்கே முதலமைச்சர் வேலை பார்க்கத் தகுதி இல்லை என்று குற்றம் சொல்கிற, குறை சொல்கிற நிலை அங்கே ஏற்பட்டு, ‘‘அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, தன்னை முதலமைச்சராக ஆக்குங்கள்’’ என்று சொல்லுகின்ற ஒரு அம்மையார் அங்கே தலையெடுத்து விட்ட காரணத்தால், அப்பொழுதே அவர் அந்த அம்மையாரைப் பற்றி தன்னுடைய கட்சிக் காரர்களுக்கு எடுத்துச்சொன்னார்.ஆனால், அது காதில் விழ, சேகர் பாபுவுக்கு இவ்வளவு காலம் ஆயிற்று! இப்போதாவது அது காதில் விழுந்து தானும் தப்பித்துக் கொண்டு, தமிழ்நாட்டையும் தப்ப வைத்திருக்கிறார் என்பதற்காக நான் சேகர் பாபுவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


தமிழகத்திலே இன்றைக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. எனக்கு முன்னால் பேசியவர்கள் எடுத்துச் சொன்னதைப் போல், இது தேர்தல் நேரம். தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் - இடங்களின் எண்ணிக்கைகள் - இவைகளெல்லாம் தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகளால் - கட்சித் தலைவர்களால் கணக்கிடப்படுகின்ற வேளை. உங்களுக்கு எத்தனை இடம் - எங்களுக்கு எத்தனை இடம் என்று பங்கு பிரித்துக் கொள்கிற நேரம்.இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, அந்த இடத்திற்குப் பெயர் என்ன என்று ஒவ்வொருவரும் தொகுதிகளை அடையாளம் காட்டி, அந்தத் தொகுதிகளில் யார் நிற்பது என்று பெயரையும் எடுத்துக் காட்டி, அந்தப் பெயருக்குரியவர் வெற்றி பெறுவதற்காக இருதரப்பிலும் பணியாற்றக் கூடிய காலம் சில நாட்களிலே இருக்கிறது. அல்லது வாரக்கணக்கிலே இருக்கிறது. நாமெல்லாம் தேர்தல் களத்திலே இறங்கி வேலை செய்ய வேண்டிய நாள் வெகு விரைவிலே வந்து கொண்டிருக்கிறது.தேர்தல் என்பது ஜனநாயகக் கடமை. ஜனநாயகத்திலே யார் நாட்டுப் பரிபாலனத்தைச் செய்வது - யார் எதிர் வரிசையில் அமர்வது என்று நிர்ணயிக்கக் கூடிய காலக்கட்டத்தை நாம் அல்ல, மக்களே நிர்ணயிக்கிறார்கள். அதுதான் ஜனநாயகம்.ஜனங்கள் பார்த்துத் தீர்மானித்து யார் ஆட்சிக்குத் தகுதி - யார் எதிர்க் கட்சியாக இருக்கத் தகுதி என்று நிர்ணயித்தால் அதற்குப் பெயர்தான் ஜனநாயகம். ஜனங்களால் உருவாக்கப்படுகின்ற நாயகம். அதுதான் ஜனநாயகத்தினுடைய தத்துவம். அந்த ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பெரும் தலைவராக நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் திகழ்ந்தார்கள்.அவர் உருவாக்கிய கழகம் இந்த வட்டாரத்திலே மழைத் துளிகளுக்கிடையே அறிவிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம். இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது.


ஒரு மாவட்டத்தினுடைய ஒரு பகுதியிலே அறிவிக்கப்பட்ட இந்த இயக்கம் இங்கே நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்திலே பாதிக் கூட்டம் கூட இல்லாத அளவிற்கு மாநாட்டை நடத்தி, திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாடு என்று அதை அழைத்தோமே,

அந்தக் கழகம் இன்றைக்கு இதுபோன்ற ஒரு கூட்டத்தை மாநில மாநாடு என்ற பெயரால் நடத்துவதென்றால், தமிழ்நாட்டிலே எங்கே இடம் இருக்கிறது என்று தேடிப்பார்க்கின்ற அளவிற்கு விரிந்து பரந்து - வங்கக் கடலா, அரபிக் கடலா, இலட்சோப லட்சம் கோடிக்கணக்கான மக்களா - இவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்படி இந்த வளர்ச்சி ஏற்பட்டது? என்று வடக்கே உள்ளவர்களும்,

கிழக்கே உள்ளவர்களும், மேற்கே உள்ளவர்களும் திகைக்கின்ற அளவிற்கு நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால், பெரியார், அண்ணா - இந்த இருபெரும் தலைவர்களுடைய கொள்கை இன்றைக்கு எல்லோருடைய உள்ளத்திலும் பதிந்திருக்கிறது என்றால், அதற்காக நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு - நாம் இழந்த உயிர்கள் எவ்வளவு - நாம் உதிர்த்த கண்ணீர் வெள்ளம் எவ்வளவு - நாம் வீழ்த்திய பகையை விட, நம்மை வீழ்த்தியவர்கள் பணபலம் கொண்டோர் - அந்தச் செல்வாக்கும், வலிவும் நமக்குக் குறைவு, அவர்களிடத்திலே அந்த வலிவு அதிகம்.


அந்த வலிவுக்கு உறுதுணையாக இருந்தது பணம், வேறு பல சக்திகள். எல்லாம் இருந்தும்கூட, சாதாரண, சாமானிய மக்களால் நடத்தப்பட்ட இயக்கம் ஆகும் இந்த இயக்கம். இன்றைய தினம் அது ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரோடி, அண்ணாவின் புகழை, அய்யாவின் கீர்த்தியை அகிலமெங்கும் இன்றைக்குப் பரப்பியிருக்கிறதென்றால், அதற்குக் காரணம் நாம் அல்ல - என் எதிரே அமர்ந்திருக்கின்ற நீங்கள்தான் அதற்குக் காரணம் என்பதை அறியாதவன் அல்ல நான்! எல்லாம் அறிந்தவன்தான்!


மக்கள் இல்லை என்றால் மக்களாட்சி இல்லை. மக்களாட்சி இல்லையென்றால் மக்களுக்கு எந்தவிதமான நல்வழியையும் காட்டுவதற்கு ஆள் இல்லை. அந்த மக்களாட்சியை நடத்துகின்ற இயக்கமாகத்தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்கிறதென்றால், மக்களாட்சித் தத்துவத்தை, மக்களாட்சியின் மாண்பை, மக்களாட்சி உண்மையிலேயே ஏற்படுமேயானால், அது மக்களுக்காகப் பாடுபடுகின்ற ஆட்சியாகத்தான் இருக்கும்.

இன்றைக்கு மக்களுக்குத் தேவை என்ன என்பதை இந்தியாவிலே உள்ள எந்த மாநிலமும் அந்த அரிச்சுவடியைக் கூட உணர்ந்து கடைப்பிடிக்காத இந்தக் காலக்கட்டத்தில், மக்களாட்சியின் மகிமையை வலுப்படுத்துகின்ற வகையிலே ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்கின்ற மலிவான விலைக்கு மக்களுடைய உணவுக்கு முக்கியத்துவம் தந்து அரிசியை விலை குறைத்து வழங்குகின்ற ஒரே ஆட்சி - இந்தியாவிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த ஆட்சி - அடியேன் தலைமையிலே இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த ஆட்சி.


பக்கத்திலே கேரள மாநிலம். கம்யூனிஸ்டுகள் ஆளுகின்ற மாநிலம். பல ஆண்டுகாலமாக அவர்கள்தான் அங்கே ஆண்டு வருகின்றார்கள். நேற்றைக்குத்தான் செய்தி வருகிறது - கேரளத்தில் இனிமேல் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குத் தரப்படும் என்ற அறிக்கை. இது என்ன வேடிக்கை! இங்கே ஒரு ரூபாய்க்குத் தருகிறோம், கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்தில் இரண்டு ரூபாய்க்குத் தரப்படும் என்பது தலைப்புச் செய்தி. இங்கே ஒரு ரூபாய்க்குத் தரலாம் என்று பல மாதங்களுக்கு முன்பே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே அது வழங்கப்பட்டு, படி அரிசித் திட்டத்தை அண்ணா அன்றைக்குத் தொடங்கினார்.

இடையில் அது தளர்ந்தது. சில தயக்கங்கள் ஏற்பட்டது. சில தடங்கல்கள் ஏற்பட்டது. இருந்தாலும், அண்ணாவுடைய கொள்கையை நிறைவேற்றியே தீருவது என்று சங்கல்பம் செய்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் இல்லை - இந்த இயக்கம் இல்லை - இந்த இயக்கத்தினுடைய இலட்சியங்கள் இல்லை - கொள்கைகள் இல்லை. எனவே, அவர்களை வாழ வைக்க அண்ணாவின் இலட்சியமான, ஏழைகளின் வயிற்றுப் பசியைப் போக்குவதுதான் முதல் பணி என்று, இன்றைக்கு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று கொடுக்கிறோம்.


அரிசி மாத்திரம் கொடுத்தால் போதுமா! அகில இந்திய அளவிலே விலைவாசி எல்லாப் பொருள்களுக்கும் ஏறியிருக்கிறதே என்று சில பேர் கை உயர்த்தியபோது, பயப்படாதீர்கள் என்று அவர்களுக்கு அமைதி கற்பித்து, சமையல் பொருட்கள், பண்டங்களான பருப்பு, பாமாயில், உளுந்து - இதுபோன்ற அத்தியாவசியப் பொருட்களையெல்லாம் 10 பொருள்களை ஒரு பையிலே வைத்து, விலைவாசி குறைவாக - அதுவும் அந்தப் பையிலே இருக்கின்ற பொருள்களைப் பெற்றால் விலைவாசியைச் சமாளிக்கலாம் என்று அதற்காகவும் பணியாற்றிய அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு.

அது மாத்திரமல்ல! ஒரு பெண்ணுக்குத் திருமணமே ஆகாமல், வாழாவெட்டியாகி விடுவாளே என்று பெற்றோர் தவிக்கின்ற நேரத்தில், உற்றார் வருந்துகின்ற நேரத்தில், அந்தப் பெண்ணின் திருமணச் செலவையும் ஏற்றுக்கொண்டு, அந்தப் பெண்ணிற்குத் திருமணத்திற்காக 25 ஆயிரம் ரூபாய் (கைதட்டல்) நன்கொடையும் தருகின்ற ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.


திருமணமான பிறகு குழந்தை பிறக்குமே! குழந்தை பிறந்தால், குழந்தை உருவானால் அதற்குச் செலவாகுமே என்று வருந்துகின்றவர்களைப் பார்த்து, வருந்தாதீர்கள் என்று அபயக்கரம் நீட்டி, குழந்தை உருவான அந்தப் பெண்ணுக்கு ஆறுமாத காலத்திற்கு ஆகிற எல்லா செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்கிறது என்ற அளவிற்கு 6 ஆயிரம் ரூபாய் - முதலிலே ஒரு 3 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த பிறகு ஒரு 3 ஆயிரம் ரூபாய். மாமன் மச்சான் கூட இந்த அளவிற்கு (கைதட்டல்) அந்தக் குழந்தைக்காக செலவு செய்ய மாட்டான். அந்தச் செலவை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசே ஏற்றுக் கொள்கிறது.


அது மாத்திரமல்ல, நான் முக்கியமாகச் சொல்ல வேண்டியது மக்களின் முக்கியமான அத்தியாவசியமான தேவை - உணவு, உடை, உறையுள். உணவு அளிக்கிறோம் - கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று. அந்த உணவருந்தி அவன் வாழ வேண்டிய இடம் - தமிழகத்திலே எத்தனை குடிசைகள் இருக்கின்றன என்று கணக்கிட்டு அந்தக் குடிசைகளையெல்லாம் கோபுரங்கள் ஆக்குவோம். குடிசைகளை கோபுரங்கள் ஆக்குவோம் என்றால், மதுரை கோபுரமாக அல்ல, திருவரங்கம் கோபுரமாக அல்ல.

வாழக்கூடிய குடும்பக் கோபுரங்களாக ஆக்குவோம். (கைதட்டல்) ஒவ்வொரு குடும்பமும், பெண்டு பிள்ளைகளோடு, குழந்தைகளோடு வாழக்கூடிய குடும்பங்களின் குடிசைகளை - கான்கிரீட் வீடுகளாக மாற்றுவோம் என்று கணக்கிடச் செய்து, ஆண்டு ஒன்றுக்கு 3 இலட்சம் வீடுகள் கட்டுவதற்குத் திட்டமிட்டு, முதற்கட்டமாக 3 இலட்சம் வீடுகள் கட்ட ஆரம்பித்து, 3 இலட்சம் குடிசைகள் இன்றைக்குக் கான்கிரீட் வீடுகளாக அமைந்து வருகின்றோம்.

இன்னும் 6 வருடத்தில், தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட் வீடுகளாக ஆகிவிடும். இன்னும் 6 வருடத்திலா, நீ இருப்பாயா! என்றால் ‘‘நானும் இருப்பேன்; ஆட்சியும் இருக்கும்’’ (கைதட்டல்).


நீங்கள் இருக்கும்போது நாங்கள் இல்லாமல் எங்கே போவோம்!

ஆகவே, நாங்கள் வெளியிட்டிருக்கின்ற இந்தத் திட்டங்களையெல்லாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். அவைகளைத் தொடங்கி விட்டோம். ஏறத்தாழ ஒரு இலட்சம் வீடுகள் இப்பொழுதே கான்கிரீட் வீடுகளாக - பல கிராமங்களில், பல நகரங்களில் மாற்றப்பட்டு வருகின்றன. இன்னும் 6 ஆண்டுக் காலத்தில் ஒரு அயல்நாட்டுக் காரன் தமிழ்நாட்டிற்கு வந்து பார்த்தால், அதிசயப்படுவான்.


‘‘ஏ அப்பா! இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே குடிசைகள் இல்லாத ஒரு மாநிலம் தமிழ்நாடுதான் ’’ என்று சொல்வான். இப்பொழுது நமக்கு பல பரிசுகளை, விருதுகளை டெல்லியிலே சி.என்.என். -ஐ.பி.என். போன்ற சில முக்கியமான நிறுவனத்தார் வழங்கினார்கள்.

‘‘இந்தியாவிலே தலைசிறந்த மாநிலம் - முதல் மாநிலம் தமிழ்நாடு’’ என்று. (கைதட்டல்) உலகத்திலே உள்ள பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, இந்தியாவிலே, தமிழகத்திலே குடிசைகள் அற்ற கிராமங்கள், நகரங்கள் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி இரும்பூதெய்துவார்கள்.

அந்தக் காணக் கிடைக்காத காட்சியைக் காண எதிர்காலத்திலே உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். எங்களையும் தயார் நிலையிலே வையுங்கள் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்.


இந்த அருமையான மக்கள் தேர்தலை நடத்தி, தங்களை ஆள்வதற்கு ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிற இந்தக் காலக்கட்டத்தில், நமக்குத் துணையாக, நம்மிடத்திலே இருக்கின்ற படை போதாதென்று, இன்னும் இந்தப் படையைப் பெருக்கவேண்டும், வலிமைப் படுத்த வேண்டுமென்று இந்தப் படைக்கோர் அணிகலனாக நம்முடைய தம்பி சேகர் பாபு இன்று வந்து இங்கே இணைந்திருக்கிறார். அவருடைய வருகையை நான் பாராட்டுகின்றேன் - வாழ்த்துகின்றேன்.


அவர் பணி சிறக்க என்னுடைய விருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார் - தனிப்பட்ட விருப்பம் எனக்கு எதுவும் இல்லை. ஒரே ஒரு விருப்பம் - திராவிட இயக்கம் இந்த இடத்திலே பிறந்தது, இந்த இடத்திலே அரசியல் இயக்கமாக உருவானது. அறிஞர் அண்ணா அவர்களால் இந்த இடத்திலே வித்திடப்பட்டது. அந்தத் தருவை வளர்க்கின்ற அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற என்னுடைய தம்பிமார்கள் அத்தனை பேரோடும், நீயும் ஒரு தம்பியாக இருந்து இந்தத் தருவை வளர்த்திடுவாய்! வளர்த்திடுவாய்! ’’ என்று உரையாற்றினார்.


No comments:

Post a Comment