கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 22, 2011

அவதூறுகளே...அரசியலாகுமா?


“ சொல்றதுக்கு ஒன்னுமில்லன்னா உங்க அம்மா ஓட்டுவீட்டுல புள்ளயப் பெத்தான்னு சொல்லுவியே ” என்று கிராமப்புறங்களில் ஒரு சொலவடை சொல்லுவதுண்டு. இன்று எதிர்க்கட்சிகளின் நிலையும் அப்படித்தான் ஆகிவிட்டது. ஐந்தாண்டு கால தி.மு.க.அரசின் மக்கள் நல ஆட்சியில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாத அவர்கள், அவதூறுகள் என்கின்ற ஓட்டைச் சட்டியைக் கையில் ஏந்தி தெருவுக்கு வந்திருக்கிறார்கள். இதில் போயஸ் தோட்டத்தில் போகி கொண்டாடப் பட்ட சு.சாமி முன்னணியில் நிற்கிறார்.

இவர்கள் கட்டவிழ்த்து விடுகின்ற அவதூறுகளுக்குப் பதிலளிக்கின்ற வகையில், தமிழ் சிமிழ் என்கிற சமூக விழிப்புணர்வு அமைப்பு, 14.02.2011 அன்று மாலை, சென்னை தியாகராயர் அரங்கத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விஜயா தாயன்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன், சென்னை மாமன்ற உறுப்பினர் வ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘ மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞரும், சு.சாமியும் தனி மனிதர்கள் அல்ல. இரண்டு இனங்களின் பிரதிநிதிகள். தர்ப்பைகளுக்குத் தலைவணங்கி நின்ற தமிழர்கள், தந்தை பெரியாரால் மான உணர்வூட்டப்பட்டு தலைநிமிர்ந்த திராவிட இனத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுகின்ற பிரதிநிதியாகத் தலைவர் கலைஞர் இருக்கிறார். எந்தச் சூழ்நிலையிலும் தமிழர்களுக்குச் செம்மாந்த வாழ்வு வந்து சேர்ந்து விடக் கூடாது என்பதில் அன்று முதல் இன்று வரை கவனமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற ஆரிய இனத்தின் பிரதிநிதியாக சு.சாமி போன்றவர்கள் இருக்கிறார்கள். எனவே இது வெறும் தேர்தல் நேர அரசியல் மட்டுமல்ல, ஆரிய ‡ திராவிட அரசியல் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் ’ என்ற கருத்தினை தன்னுடைய தலைமை உரையில் டி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ‘ திரும்பத் திரும்ப முன்னிலைப்படுத்தும்போது சில நேரங்களில் வில்லன்கள்கூட கதாநாயகர்களாகத் தெரியும் ஆபத்து நேர்ந்துவிடுவதுண்டு. அப்படித்தான் சு.சாமியை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. இவரைப் போன்றவர்களை ஊடகங்கள் ஏன் தூக்கிப் பிடிக்கின்றன என்கின்ற உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம் ’ என்று குறிப்பிட்டார்.

‘ தன் ஒருவனுக்காகவே கட்சி நடத்துகின்றவர் சு.சாமி. அவரை வில்லன் என்றோ, காமெடியன் என்றோ கூட சொல்லமுடியாது. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வருகின்ற வைத்தி பாத்திரம் அவர். கண்டிப்பாக வைத்தியம் பார்த்துத்தான் ஆகவேண்டும். அரசியலுக்காக அவதூறு பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவதூறுகளையே அரசியலாக வைத்திருக்கிறார்கள். அவாள்களுடையது அவதூறு அரசியல். கலைஞர் அரசின் மக்கள் நலத்திட்டங்களின் முன் இவர்களின் அவதூறு பரப்புரைகள் காணாமல் போய்விடும் ’ என்று ‘சு.சாமி ’களின் பச்சைப் பார்ப்பன சூழ்ச்சிக்குப் பதிலடி கொடுத்தார் பேரா.சுப.வீரபாண்டியன்.

சு.சாமியே ஓடாதே, நில் ! என்ற தலைப்பில் விடுதலை நாளேட்டில் சு.சாமியின் வண்டவாளங்கள் கிழிந்த தோரணங்களாகத் தொங்கவிடப்பட்டு வருகின்றன. இந்தப் பச்சைப் பார்ப்பனரின் இனப்பாசத்தை விடுதலை விரிவாகவே விளக்கிவருகிறது. காஞ்சி மட சங்கராச்சாரியைக் கைது செய்த ஜெயலலிதாவிற்காக (பட்டுக்குஞ்சத்தால் பார்வை பார்க்கப்பட்டாலும் ) அரசியல் செய்கின்ற இவரின் சேவையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த யோக்கியரைப் பற்றி ஜெயின் கமிசன் அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா? ராஜீவ் கொலையில் தொடர்புடைய சந்திராசாமியும், சு.சாமியும் இலண்டன் சென்றது பற்றிய விசாரணையில், ஜெயின் கமிசன் அறிக்கை, பகுதி ‡ 8 இணைப்பு ‡ சி‡553 இல் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது:

“ ...டாக்டர் சுப்பிரமணியன் சாமியின் வாக்குமூலத்தை முழுவதும் எங்கு படித்தாலும், எந்த வகையிலும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கவில்லை...டாக்டர் சுப்பிரமணியன் சாமி தனது வார்த்தைகளை மாற்றிக் கொள்வதால், அவர் நம்பக் கூடியவராக இல்லை ”

ஜெயின் கமிசனின் அறிக்கை மட்டுமன்று நமது கருத்தும் அதுதான். தமிழக நலனுக்கு, தமிழர் நலனுக்கு சு.சாமி ஒருபோதும் நம்பகமானவர் இல்லை. இதற்கு எத்தனையோ சான்றுகளைக் காட்டலாம். மாதிரிக்கு மூன்று மட்டும்,

1.சேதுக்கால்வாய்த் திட்டத்திற்கு எதிர்ப்பு

2.இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுப்பு

3. கோயில் சொத்துகளைச் சுரண்டிக் கொழுத்த, தில்லை தீட்சிதர்களுக்கு ஆதரவாக தன்னையும் வழக்கில் இணைத்துக் கொள்ளக் கேட்டது.

சு.சாமியுடைய ஜனதாக் கட்சியில் அகில இந்திய பொறுப்பில் இருந்தவரும், நண்பருமான திருச்சி வேலுச்சாமி 6.03.2008 குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த ஆரியப் பிரதிநிதியைப் பற்றிச் சொல்லியதை, மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வது இன்றை சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும்.

“ தமிழ் நாட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிற இளைஞரான திருமாவளவனை இவ்வளவு கொச்சையாகவும், கேவலமாகவும் நீங்கள் பேசும்போது உங்கள் மனதில் இருக்கும் நஞ்சு என்ன என்பது புரிகிறது. நான் இந்த நேரத்தில் தமிழ் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டில் ஓர் ஆரிய ‡ திராவிடப் போர் உருவாகி விடுமோ என்று நான் அச்சப்படு கிறேன். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து உங்களைத் தமிழ்நாட்டில் நுழையவிடாமல் விரட்ட வேண்டும் ”

இந்த மனிதர்தான் தமிழக முதல்வர் கலைஞர் மீது 23 வழக்குகள் தொடுக்கப் போகிறாராம். அதற்கான ஆதாரங்கள்கூட இவரிடம் இருக்கின்றனவாம். இத்தனைக்குப் பிறகும் கூச்சமில்லாமல் எப்படித்தான் இப்படிச் சொல்லித் திரிகிறாரோ , அந்த (ஆ)சாமிக்கே வெளிச்சம் !

இப்படி நாடற்ற கூட்டத்தினரின் நரித்தந்திரங்கள் அவதூறுகளாகவும், ஆரியக் கூத்துகளாகவும் ஒரு பக்கத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களின் இலவச விளக்கங்களும், தமிழ்த் தேசியவாதிகளின் திராவிட எதிர்ப்பு அரசியலும். பெரியாரைப் புறந்தள்ளிய, திராவிட இயக்க வரலாற்றைப் புறக்கணித்தத் தமிழ்த் தேசியம் என்றுமே சாத்தியமில்லை என்பதைத் தமிழக அரசியல் வரலாறு பதிவு செய்திருக்கிறது.

கலைஞர் அரசு செயல்படுத்தி வருகின்ற ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை, அரசியலுக்காகப் பொதுவுடைமைக் கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. இதே திட்டம், கம்யூனிஸ்ட் கட்சி ஆளுகின்ற கேரளாவில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என்றும், பா.ஜ.க.ஆளுகின்ற உத்ரகாண்ட்டில் ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய் என்றும் பிப்ரவரி 11 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பொதுவுடை மைத் தோழர்கள் இதைப் போற்றுவார்களா அல்லது பொலிட் பீரோவில் கூடி விவாதிப் பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலவசங்கள் மக்களைச் சோம்பேறிகளாக் குவதற்கன்று. பொருளாதாரச் சுழலில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்ற அவர்கள், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும் ஊக்கத் திட்டம். மக்கள் அதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அநாவசியமான அவதூறுகளும், பொய்ப்பிரச்சாரங்களும் அவர்களிடம் எடுபடப்போவதில்லை.

‘வேதா’ள உலகத்திற்குள் நுழையத் தயங்கிக் கொண்டிருக்கும், கட்சிகளை எப்படியாவது பணிய வைத்துப் பயன்படுத்திக் கொள்ள அக்கிரகார அம்பிகள் அயராது பாடுபட்டு கின்றனர். 1971ஆம் ஆண்டின் அரசியல் சூழலை இன்று உருவாக்க முயல்கின்றனர். அன்று கொடுத்த அதே மகத்தான தீர்ப்பினைக் கொடுக்கவே மக்களும் காத்திருக்கின்றனர்.

- இரா.உமா.

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர் .

No comments:

Post a Comment