கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 8, 2011

இந்தீ ஆரிய - திராவிடப் போர்


இந்தியை ஆட்சி மொழி ஆக்கவும், இந்தியைத் திணிக்க எடுக்கும் நடவடிககையும், சமற்கிருத மேலாண்மையை நிறுவ ஆரியம் எடுக்கும் முயற்சியாகும்.

இந்தியை எதிர்ப்பதும், அதற்கானக் களம் அமைத்துப் போராடுவதும் திராவிடர்களின் உரிமை மீட்பாகும். எனவே இந்தி எதிர்ப்பு மொழிப்போர் என்பது ஆரிய திராவிடப் போராட்டம்.

பல்வேறு தேசிய மொழிகள், இனங்களைக் கொண்ட இந்நாட்டை ஒன்றுபடுத்திய ஆங்கிலேயர்கள், ஆங்கிலம் என்ற ஒற்றை மொழியை ஏனைய மொழிகளுக்கு மாற்றாகக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்தியா என்ற நாட்டின் ஆட்சி மொழியாக இந்தி என்ற ஒற்றை மொழியைக் கொண்டுவர இந்துத்துவப் பார்பனர்கள் கடும் முயற்சியில் இறங்கினார்கள்.

காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சத்தியமூர்த்தி ஐயர் 1939 ஆம் ஆண்டு, “என் கைகளில் அதிகாரம் கிடைத்தால், அல்லது நான் சர்வாதிகாரி ஆனால், இந்தியர்களை இந்தி மட்டுமின்றிச் சமற்கிருதத்தையும் கட்டாயமாக்குவேன். சர்க்கார் உத்தியோகங்களுக்குச் சமற்கிருதம் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்படுத்தி விடுவேன்” என்று பேசியதில் இருந்து, பார்ப்பனர்களும், அவர்கள் சார்ந்த காங்கிரசும் இந்தி - சமற்கிருதத்தை ஆட்சி மொழியாக்கும் கொள்கை உடையவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தி என்பது ‘கடிபோலி ’ என்ற இனத்தைச் சேர்ந்தது. ஆரிய மொழிக் குடும்பத்தில், சமற்கிரு தத்தின் ஒரு கிளை கடிபோலி. அக்கடிபோலி மொழி, இந்தியைத் தோற்றுவித்துவிட்டு மறைந்து போனது. ஆகவே சமற்கிருதத்தை அரியணை ஏற்ற இந்தி ஆட்சிமொழி என்ற வழியைப் பார்ப்பனர்கள் கையில் எடுத்தார்கள்.

1937 ஆம் ஆண்டு இராஜாஜி தலைமையில் சென்னையில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவை, 6,7,8 ஆம் வகுப்புகளில் ஆங்கிலம், தமிழுடன் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது.

இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்பதை உணர்ந்த தந்தை பெரியார், ‘குடி அரசு’ இதழில் இதனை வன்மையாகக் கண்டித்தார். திராடர்களான தமிழர்கள் களம் இறங்கினர் - தொடங்கியது இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்.

நீதிக்கட்சியாளரும், கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவருமான த.வே.உமாமகேசுவரனார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா.சு.பிள்ளை, பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் போன்ற தமிழறிஞர்கள் இந்தியைக் கடுமையாக எதிர்த்தார்கள். அதேசமயம் சத்தியமூர்த்தி ஐயர், கல்கி கிருஷ்ணமூர்த்தி, தினமணி டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற பார்ப்பனத் தலைவர்கள் காங்கிரஸ் அரசின் இந்தித்திணிப்பை ஆதரித்தார்கள். தமிழர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வலிமை காங்கிரசைப் பின்வாங்கச் செய்தது.

மீண்டும் 1965 ஆம் ஆண்டு இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்தது. மீண்டும் தொடங்கியது இந்தி எதிர்ப்புப் போர். நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.டி.இராசன், அண்ணாமலைப் பல்கலைக் கழக இளைய வேந்தர், ராசா சர். முத்தையா செட்டியார், முன்னாள் துணைவேந்தர், எஸ்.ஜி.மணவாள இராமானுஜம், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், மதுரை பசுமலைத் தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர் சி.இலக்குவனார், பேராசிரியர் மு.வரதராசனார் உட்படத் தமிழ் அறிஞர்கள் இந்திய அரசின் இந்தித் திணிப்புக்கும், ஆட்சி மொழிக் கொள்கைக்கும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா, அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி, கலைஞர் மு.கருணாநிதி, என்.வி.நடராசன் உள்ளிட்ட கழகத் தலைவர்கள் நேரடியாக போராட்டக் களம் இறங்கினார்கள் ‡ சிறை சென்றார்கள். அன்று வங்கத்திலும், மராட்டியத்திலும், கருநாடகத்திலும் கூட இந்தி எதிர்ப்பு வலுவாக இருந்தது.

1959 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில், இந்திய நாடாளுமன்றத்தில், “ இந்தி பேசாத மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பீதியை நாம் புறக்கணிப்பதற்கு இல்லை. இந்தி பேசாத மக்கள் மீது அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இந்தி திணிக்கப்பட மாட்டாது ” என்று அன்றைய பிரதமர் நேரு உறுதிமொழி அளித்திருந்தார். இந்த உறுதிமொழியை வலியுறுத்தி, 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் எழுந்த இந்தி எதிர்ப்புப் போரின் கடுமையை உணர்ந்து, வேறு வழியில்லாமல் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்கள் தென்னிந்திய காங்கிரஸ் தலைவர்கள். அவர்கள், தமிழ்நாட்டின் காமராசர், ஆந்திரத்தின் நீலம் சஞ்சீவ ரெட்டி, கர்நாடகத்தின் நிஜலிங்கப்பா ஆகியோர். இக்கூட்டறிக்கையில் தமிழ்நாட்டின் சார்பாக சி.சுப்பிரமணியம், எம். பக்தவச்சலம், ஆந்திரத்தின் சார்பாக பட்டாபி ராமாராவ், கருநாடகத்தின் சார்பாக வீரண்ண கவுடா ஆகியோர் கையயழுத்திட்டிருந்தார்கள்.

இந்தி எதிர்ப்புப் போரின் வேகமும், வலிமையும் குறைவதாக இல்லாமல், மேலும் வலிமையாவதை அறிந்த மத்திய அரசு இந்தி ஆட்சி மொழி என்பதில் இருந்து பின்வாங்கியது.

பின்னர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசின்போது, பிரதமர் மொரார்ஜியும், மத்திய அமைச்சராக இருந்த பா.இராமச்சந்திரனும் இந்தியை வலிந்து திணிக்க மாட்டோம் என்று சொன்னார்கள். ஆனால் அதே அமைச்சரவையில் இருந்து அடல் பிகாரி வாஜ்பேய், ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியைப் பேசவைக்கவும், அங்கே இந்தியை ஒரு மொழியாக ஆக்கிவிடவும் 6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று பேசினார்.

இன்னொரு அமைச்சர் ராஜ்நாராயண், “ நான் ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ மாட்டேன் என்று சபதம் ஏற்றிருக்கிறேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்றாலும், எந்தக் கேள்வியை நீங்கள் கேட்டாலும், அதற்கு நான் இந்தியிலேயேதான் பதில் சொல்வேன் ” என்று ஒருபடி மேலே நின்று தன் இந்திவெறியைப் பறைசாற்றினார்.

இந்திய அரசியல் சட்டத்தின் விதி 343 பிரிவு ஒன்றின்படி, இந்திய யூனியன் ஆட்சி மொழியாக இந்தி தேவநாகரி லிபியில் இருக்கும் என்றும், யூனியனின் அரசு அலுவல்களுக்குப் பயன்படும் இலக்கங்கள் சர்வதேச முறை இந்தி இலக்கங்களாக இருக்கும் என்றும் கூறுகிறது. இது இந்தியை இந்நாட்டில் நுழைப்பதற்கான ஒரு வழியாக இருக்கிறது.

1959 ஆம் ஆண்டு நேரு உறுதிமொழியின்படி அரசியல் சட்டப்பிரிவு 347 இல் எட்டாம் செட்யூல் இடம்பெறாவிட்டாலும், குறிப்பிட்ட அளவு மக்கள் விரும்பினால், ஒரு மொழியை அது வழங்கும் பகுதியில் ஆட்சி மொழியாகப் பிரகடனப்படுத்த குடியரசுத தலைவருக்கும் அதிகாரம் உள்ளது என்கிறது. இங்கே “ஒரு மொழி” என்பது மறைமுகமாக இந்தியைச் சுட்டுவதாகவே கொள்ளலாம்.

இந்நிலையில் 7.01.2011 ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதல்அமைச்சரும், பாரதிய சனதாக் கட்சியைச் சேர்ந்தவருமான எடியூரப்பா பேசும்போது, “அனைத்து இந்திய மொழிகளுக்கெல்லாம் சமற்கிருதம் தாய்மொழி போன்றது. சமற்கிருத வளர்ச்சிக்காக யாரும் செய்யாத அளவு 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். கர்நாடக அரசு சமற்கிருத வளர்ச்சிக்காக, குல்பர்கா பல்கலைக்கழகத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. கர்நாடக அரசு சமற்கிருத வளர்ச்சிக்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகிறது” என்று பேசியுள்ளார்.

உத்ராஞ்சல் மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியால் பேசும்போது, “சமற்கிருதம் கங்கையைப் போல் புனிதமானது. எங்கள் மாநிலத்தில் அதை இரண்டாவது மொழியாக அறிவித்துச் செயல்படுத்தி வருகிறோம்” என்று பேசியிருக்கிறார்.

இவைகளை எல்லாம் பார்க்கும்போது சமற்கிருதப் பார்ப்பனியவாதிகள் எப்படியும் முதலில் இந்தியை ஆட்சிமொழியாக்கி, அதன் வழியாக சமற்கிருத ஆரிய வர்ணாசிரம அமைப்பை மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறார்கள் என்பது விளங்குகிறது.

ஆரிய இந்தியை எதிர்த்து 1937 இல் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டது இந்தி எதிர்ப்பு நெடிய போராட்டம் தாளமுத்து, நடராசன், சின்னச்சாமி, அரங்கநாதன் போன்ற பலர் உயிரை ஈந்துள்ளார்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டிலும் இன்னுயிர் இழந்தவர்களை நினைக்கும் நாள், சனவரி 25 மொழிப்போர் தியாகிகள் நாள்.

- எழில்.இளங்கோவன்.

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர் .

No comments:

Post a Comment