வீட்டுவசதி வாரிய மனை விருப்புரிமை ஒதுக்கீ¢ட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை; விருப்புரிமை ஒதுக்கீட்டால் அரசுக்கு எந்த வகையிலும் நிதி இழப்பில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
பேரவையில் நேற்று (08.02.2011) கேள்வி நேரம் முடிந்ததும், விதி 110ன் கீழ் முதல்வர் அளித்த அறிக்கை:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி முதல்வராகிய என் மீது வழக்குத் தொடர ஆளுனரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி அனுமதி கோரியுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.
வீட்டுவசதி வாரிய வீடுகள் அல்லது மனைகள் ஆகியவற்றில் 85 சதவீத வீடுகளை வீட்டுவசதி வாரியத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதும், மீதியுள்ள 15 சதவிகித வீடுகள் மற்றும் மனைகளை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுவதும், எல்லா ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் முறையாகும். அரசு தனது விருப்புரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்த வீடுகளிலே முறைகேடு நடைபெற்று விட்டதாக சுப்ரமணியசாமி சொல்லியிருக்கிறார்.
அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது ஏதோ இப்போது தி.மு.க ஆட்சியிலே மட்டும் நடைபெற்ற நிகழ்ச்சியல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே, எல்லா ஆட்சிக் காலங்களிலும் இருந்து வரும் ஒன்றாகும்.
அரசு தனது விருப்புரிமை ஒதுக்கீடான 15 சதவீத இடங்களை திருமணம் ஆகாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், சமூக சேவகர்கள், சமூகத்தில் சிறப்பு வாய்ந்தோர், தனியாக வசிக்கும் முதியோர், பொது நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணி புரிவோர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர், பத்திரிகையாளர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிவோர், தேசியமயமாக ஆக்கப்பட்ட ஈட்டுறுதி நிறுவனங்களில் பணிபுரிவோர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாரியங்களில் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தைத் தவிர) பணிபுரிவோர், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிவோர், ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் ஆகியோருக்கு, கைவசம் உள்ள மனைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அரசால் விருப்புரிமையைப் பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குலுக்கல் முறையிலே விற்பவர்களிடம் பெறப்படும்
தொகையைவிட குறைவானத் தொகைக்கும் தரப்படவில்லை. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு களுக்கு அல்லது மனைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும்பொழுது, வாரியம் நடைமுறையில் கடைபிடிக்கும் விலை, சந்தை விலை, பத்திரப்பதிவு அலுவலக வழிகாட்டி மதிப்பீட்டு விலை ஆகியவற்றுள் எது அதிகமோ, அதையே இறுதி விலையாக நிர்ணயம் செய்கிறது.
அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டிற்கும், வாரிய ஒதுக்கீட்டிற்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணய முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது, இந்த அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில் மனை பெற்றோர், அந்தத் தொகை மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து, அந்த மனையையே திரும்ப ஒப்படைக்கிற நிலை உள்ளது. இதிலிருந்தே இதில் எந்தச் சலுகையும் செய்யப்படவில்லை என்பதை அறியலாம்.
மேலும், ஒதுக்கீடு பெறுவோர், வாரிய விதிமுறைகளின்படி விண்ணப்பப் படிவத்தில் தெரிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தரும் உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டே ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டினால் அரசுக்கோ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கோ எந்த வகையிலும் நிதியிழப்பு இல்லை. எல்லா ஆட்சிக் காலத்திலும் ஒரே மாதிரியான நடைமுறைகள், விதிமுறைகள்தான் பின்பற்றப்பட்டு வருகின்றன. விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அல்லது விதிமுறைகளை மீறி அரசு விருப்புரிமை ஒதுக்கீடுகள் நடைபெற்றதாகச் சொல்லப்படும் செய்தி விஷமத்தனமானது.
விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால், அரசு அதனைப் பரிசீலனை செய்து, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும் என்று 7.12.2010 அன்றே செய்தியாளர்களிடம் வருவாய்த்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கியுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இதுபோல வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளன. அ.திமு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என்.நாராயணனுக்கு 1993ல் 4115 சதுர அடி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் என்பவருக்கு பெசன்ட்நகர் பகுதியில் 1995ல் 4535 சதுர அடி, முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான் துணைவியார் நூர்ஜமிலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993ல் 2559 சதுர அடி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி பானுமதிக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம், அதிமுக. முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில் 1993ல் வீடு, 2004ல் தேவாரம், கே.விஜயகுமார், ஆர்.நடராஜ் உட்பட பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சோளிங்கநல்லூரில் தலா 4800 சதுர அடி, நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலுவுக்கு 2005ல் சோளிங்கநல்லூரில் இரண்டு மனைகள், சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே. செல்வராஜ் என்பவருக்கு 1994ல் கொட்டிவாக்கத்தில் 2692 சதுர அடி, முன்னாள் முதல்வரிடம் துணைச் செயலாளராக இருந்த டி. நடராஜன் ஐஏஎஸ்க்கு 1995ல் திருவான்மியூரில் 6784 சதுர அடி, ஆதிராஜாராம்க்கு 1995ல் 3101 சதுர அடி., 1993ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சரஸ்வதிக்கு அண்ணா நகரில் 880 சதுர அடி, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு அண்ணா நகரில் 950 சதுர அடி, எம்ஜிஆருடைய ஓட்டுநர் பூபதிக்கு நந்தனத்தில் 3600 சதுர அடி, ஆண்டித்தேவரின் மனைவி பிலோமினாவுக்கு 1994ல் மதுரையில் 1500 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. 2005ல் ஆண்டு பலருக்கு இரண்டு மனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உண்டு.
இன்னும் சொல்லப் போனால் தமிழகத்திலே அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில் இதுபோல அரசாங்கம் விரும்புவோருக்கு வீடுகளை, மனைகளை வழங்கலாம் என்ற முடிவே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலே தான் எடுக்கப்பட்டு, அதற்கான அரசாணை 25.1.1979ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் இதைத் தொடங்கிய போது 10 சதவீத வீடுகள் அல்லது மனைகள் என்பதற்கு மாறாக 1991&1996ம் ஆண்டுகளில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 15 சதவீத வீடுகளை அல்லது மனைகளை அரசு தனது விருப்புரிமை அடிப்படையிலே வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
உண்மை இவ்வாறிருக்க, சுப்ரமணியசாமி விஷமத்தனமாக இந்த செய்தியைத் திரித்து வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது. நடவடிக்கைக்கு உரியது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment