கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 8, 2011

உதயசூரியனே மீண்டும் உதிக்கும்! - சுப.வீரபாண்டியன்


எதிர்க்கட்சிகள் அனைவரும் வெவ்வேறு செய்திகளை ஊடகங்களிலும், மேடைகளிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அத்தனை பேருக்கும் நோக்கம் மட்டும் ஒன்றே ஒன்றுதான். வரும் தேர்தலில் தி.மு.கழகத்தையும் அதன் கூட்டணியையும் வீழ்த்திவிட வேண்டும் என்கிற வீண் கனவில் அனைவரும் சங்கமித்திருக்கிறார்கள்.

தள்ளாடித் தாள்ளாடி மாநாட்டு மேடையிலே ஏறுகிறார் ஒருவர். மக்களோடும், ஆண்டவனோடும்தான் கூட்டணி என்று பேசிக்கொண்டிருந்தவர் அவர். இப்போது எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று கேட்டு எதிரே இருப்பவர்களை கை உயர்த்தச் சொல்கிறார். கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்று கேட்டு, சட்டமன்றத்தில் நிகழ்வது போல, ஆம் என்போர் கை உயர்த்துக என்கிறார். பிறகு இல்லை என்போர் கை உயர்த்துக என்கிறார். கைகள் மாறி மாறி உயர்ந்து தாழ்கின்றன. இறுதியில் கூட்டணி பற்றிய முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன், அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று முடித்துவிடுகிறார். பிறகு எதற்கு நம்மைக் கை உயர்த்தச் சொல்லி அவமானப்படுத்தினார் என்று எண்ணி மாநாட்டிற்கு வந்த கூட்டம் குழம்பித் திரும்புகிறது.

மேடையில் நின்று பேசும்போது, கீழே ஒருவரைச் சம்மணம் போட்டு உட்கார வைத்திருக்கிறார்கள். அந்த மனிதர் அவ்வப்போது, அடுத்துப் பேச வேண்டியது என்ன என்பதை எடுத்துக் கொடுக்கிறார். நாடக மேடைகளில்தான், திரைக்குப் பின்னால் நின்று எடுத்துக் கொடுப்பார்கள். அதற்குப் ‘ பிராம்ப்டிங் ’ என்று பெயர். அதை அரசியல் மேடைகளிலும் நிகழ்த்திய பெருமை இந்த நடிகருக்குத்தான் உண்டு. எழுதிப் படித்த அந்த அம்மையாரே மேல் என்று ஆக்கிவிட்டார் இவர்.

“ புதிதாய் அரசியலுக்கு வந்திருக்கும் இந்த நடிகரை ஒரே ஒரு பக்கம் சொந்தமாய் ஓர் அறிக்கை எழுதித் தரச் சொல்லுங்கள், நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன் ” என்றார் எழுச்சித் தமிழர் திருமாவளவன். நடிகரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அரசியலை விட்டுப்போக வேண்டிய கட்டாயம் திருமாவளவனுக்கு ஒருநாளும் வராது என்பது தெளிவாகிறது.

இன்னொரு பக்கத்தில் ஈழத்தைக் காரணம் காட்டி, இந்த ஆட்சியைக் கவிழ்த்தே தீருவோம் என்று கங்கணம் கட்டுகின்றனர் சிலர். 20 ஆண்டுகளுக்கு முன்பு, கழகத்தில் கலைஞரோடு இருந்த காலத்தில், தி.மு.கழகத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தக் கூடிய வாய்ப்பு வைகோவிற்கு இருந்தது. ஆனால் அதனைச் செய்யாததோடு மட்டுமின்றி, இருவருக்கும் இடையிலான விரிசலை மேலும் மேலும் விரிவுபடுத்தியது அவர்தான். ஈழ அரசியலைத் தன் சொந்த அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டு, தான் மட்டுமே உயரவேண்டும் என்று கருதியதால்தான், பெரும் கேடுகள் பின்னால் விளைந்தன.

இப்போது புதிதாய்ச் சிலர், ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்னும் புதிய கூச்சலோடு புறப்பட்டிருக்கிறார்கள். ‘தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து தூக்கில் போட வேண்டும்’ என்று சொன்ன ஜெயலலிதாதான் ஈழம் மலர்வதற்கு உதவிபுரிவார் என்று சொல்வது அபத்தம் மட்டுமன்று, அப்பட்டமான திரிபுவாதமும் ஆகும்.

ஈழச்சிக்கல் ஒரு சர்வதேசியச் சிக்கல். அங்கே நடைபெற்ற கொடூரத்திற்குப் பின்னால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பழிவாங்கும் முகங்களும் இருந்தன. அவை அனைத்தையும் மறைத்து விட்டுக் கலைஞர் ஒருவரால்தான் இனமே அழிந்தது என்று சொல்லுவது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பொய். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாய் நின்றவர்களை, இன்றும் நிற்பவர்களை எல்லாம் மூடிமறைத்துவிட்டு, தான் ஒருவனே தமிழ் ஈழ மக்களின் ஒற்றை ஆதரவாளன் என்பது போலக் காட்டிக் கொள்ள முயல்வது, வெறும் அரசியல் விளம்பரத்திற்காக ஆடுகிற நாடகம்.

ஸ்பெக்ட்ரம் பற்றியே பேசித் திரிந்து தி.மு.க.வை வீழ்த்திவிடலாம் என்று நினைத்தவர்கள் இப்போது கொஞ்சம் ஓய்ந்து போய் இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் குறித்த உண்மை விளக்கம் மக்களிடம் போகத் தொடங்கியிருக்கிறது. இனி அந்தப் பரப்புரை செல்லாது என்று புரிந்தவுடன், உட்கட்சிப் பிரிவு ஏதும் வராதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பே அவர்களின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசினால் பயன்பெற்ற மக்களே வரும் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகின்றனர். எந்த ஒரு கட்சியின் வாக்கு வங்கியையும்விட, தமிழக அரசினால் பயன்பெற்றவர்களின் வாக்கு வங்கியே தமிழகத்தில் இன்று கூடுதலாக இருக்கிறது. குற்றுயிரும் குலை உயிருமாக விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்ற ஓடிவருகிற 108, அவன் எந்தக் கட்சி என்று பார்த்து வருவதில்லை. தமிழக அரசு வழங்கிய தொலைக்காட்சிப் பெட்டிகள் கட்சி பார்த்து வழங்கப்படவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டபோது, கூடுதல் பலன் பெற்றவர்கள் எதிர்க்கட்சியினர்தான் என்பதற்கு ஆதாரங்களை அள்ளித்தந்திருக்கிறார் துணை முதல்வர். கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கால்நடைக் காப்பீட்டுத் திட்டம், நூறு நாள் வேலைத் திட்டம் என வரிசையாய் அறிவிக்கப்பட்ட அத்தனை திட்டங்களும் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவருக்கும்தான் பயன்பட்டிருக்கின்றன. அனைத்தையும் தாண்டி, குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்க கலைஞர் எடுத்திருக்கும் முயற்சிக்கு, வரலாறு காணாத வரவேற்புக் கிடைத்திருக்கிறது.

எனவே எத்தனை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தாலும், ஏற்க முடியாத காரணங்கள் பலவற்றை எடுத்துரைத்தாலும், ஆறாவது முறையாகவும் அமைச்சரவையை அமைக்கப் போவது கலைஞர்தான்.

இதயம் நிறைந்த நன்றிகளால் உதயசூரியனே மீண்டும் உதிக்கும்.

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்


No comments:

Post a Comment