கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, February 13, 2011

தமிழக அரசு கடன்களை வாங்கி இலவச திட்டங்களுக்கு செலவிடவில்லை: கலைஞர் விளக்கம்


தமிழக அரசு, கடன்களை வாங்கி இலவச திட்டங்களுக்கு செலவிடவில்லை என்றும், நிதிப்பற்றாக்குறை குறிப்பிட்ட அளவுக்குள் இருப்பதாகவும், முதல் அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.


இது குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கேள்வி: தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்களைப் பெற்று இலவச திட்டங்களை வாரிக் கொடுத்துவிட்டதாகவும், அதனால் தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மீதும் கடன் சுமையை ஏற்றி வைத்து விட்டதாகவும் அ.தி.மு.க.வினரும், கம்ழூனிஸ்ட்களும் பேரவையில் கூறிய குற்றச்சாட்டுக்கான விளக்கம் என்ன?


பதில்: இந்தக் கேள்விக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டு விட்டது. இருந்தாலும் வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் கூறுவதற்கு இல்லாததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவசத் திட்டங்களை வழங்குவதற்காக தமிழக அரசு கடன்களை வாங்கவில்லை.


அ.தி.மு.க. 2001 2002 ம் ஆண்டு முதல், 2005 2006 ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த போது வாங்கிய கடன் தொகை 28,772 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவு மட்டும் 15,614 கோடி ரூபாய். மூலதனச் செலவு என்றால், சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்படும் செலவுகளாகும்.


2006 2007 ஆண்டு முதல் 2010 2011 (திருத்த மதிப்பீடு) ஆகிய ஐந்தாண்டுகளில் தி.மு.கழகம் ஆட்சியிலே வாங்கிய கடன் தொகை 44,084 கோடி ரூபாய். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவாகச் செலவிட்டது 44,667 கோடி ரூபாய். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன்களை வாங்கி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இனியாவது அவர்கள் கடன்களை வாங்கி, இலவசத் திட்டங்கள் வழங்கப்பட்டதாக பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.


கடன் அளவு

இதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை பக்கம் 55 ல், 2006 2007 முதல் 2010 2011 வரையான ஐந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கால அளவில் மொத்த மூலதனச் செலவினங்கள் ரூபாய் 44,667 கோடியாக இருந்துள்ளது. திரட்டப்பட்ட கடன் பொறுப்புகள் அனைத்தும் பயன் அளிக்கக் கூடிய நோக்கங்களுக்காகச் செலவிடப்பட்டதை இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய நிதிக் குழுவும், மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலமும், அதன் மொத்த உற்பத்தியில் 25 சதவிகிதம் வரை கடன் பொறுப்புகளை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது. மேலும் 2005 2006 ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு 2010 2011 ல் தி.மு.கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து தமிழகத்தின் கடன் பொறுப்பு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளதைத் தெரிந்து கொள்ளலாம்.


மற்ற மாநிலங்களில் குறிப்பாக இந்தக் கடன் பற்றி அதிகமாக பேரவையிலே பேசிய பொதுவுடைமைக் கட்சிகள் ஆளுகின்ற கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலே கூட தமிழ்நாட்டைவிட கூடுதலாகக் கடன் சுமை உள்ளது. இது பற்றியும் நான் ஏற்கனவே எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு கடன்களை வைத்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறேன்.


வட்டி தொகை


கேள்வி: கம்ழூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் எதற்குக் கடன், எவ்வளவு கடன் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்கிறாரே?


பதில்: நான் மேலே தெரிவித்த புள்ளி விவரங்கள் அவருக்கு விளக்கமளிக்கும் என்று நம்புகிறேன். எதற்குக் கடன் என்பதையும் சொல்ல வேண்டுமென்றால், உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூபாய் 2442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபிவிருத்தி திட்டம், ரூபாய் 1224 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொண் டுள்ளது. அதே போல் ஜப்பான் நாட்டு நிதியுதவி பெற்று ரூபாய் 1928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நபார்டு வங்கியின் மூலம் ஊரக சாலைகள், நீர்ப்பாசன நிலைகள் அபிவிருத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 4113 கோடியும் கடன் பெற்று மூலதனப் பணிகளைத்தான் இவ்வரசு மேற்கொண்டுள்ளது. எனவே பொறுப்போடுதான் கடனைப் பெற்று இந்த அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது.


கேள்வி: இவ்வாறு அரசு வாங்கும் கடன்களுக்கு செலுத்துகின்ற வட்டித் தொகை அதிகமாகிக் கொண்டே போகிறது என்று சொல்கிறார்களே?


பதில்: ஒரு மாநிலம் செலுத்துகின்ற கடன் மீதான வட்டித்தொகை, அதன் மொத்த வருவாயில் 15 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்க வேண்டும். கடந்த 2005 2006 ம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் மொத்த வரி வருவாயில் செலுத்தப்பட்ட வட்டியின் சதவீதம் 13.42 ஆகும். ஆனால் 2010 2011 ம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியிலே மொத்த வரி வருவாயில் செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் 11.15 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து தமிழ் நாட்டினுடைய நிதி நிலைமை 2005 2006 ம் ஆண்டினைக் காட்டிலும் தற்போது திருப்திகரமாகவே உள்ளது என்பதை பேரவையில் முழங்கிய அ.தி.மு.க.வினர் புரிந்து கொள்ளலாம்.


கடன் பொறுப்புகள் அதிகரித்துள்ள போதிலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் நிலையிலேயே தமிழ்நாடு உள்ளது.


கட்டுக்குள் இருக்கிறது


கேள்வி: எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியதைப் போலவே, "தினமணி'' நாளிதழும் "உபரி ஒரு புறம், கடன் மறுபுறம்'' என்று குறிப்பிட்டிருந்ததே?


பதில்: உபரி என்பது வருவாய் உபரி. சிறப்பாக செயல்படுகின்ற மாநில அரசு வருவாய் உபரி நிலையை எட்ட வேண்டும். அதாவது வருகின்ற வரி வருவாயில், வருவாய் செலவினம் போக உபரி நிதியை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். அதற்கு மேல் செய்யப்படுகின்ற மூலதனச் செலவுகளுக்கு, மாநில அரசுகள் கடன் பெறுவது அவசியம் ஆகிறது. இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கையாகும். இவ்வாறு கடன் பெறுவது வளர்ச்சித் திட்டங்களுக்காக இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவுக்குள் நிதிப் பற்றாக்குறை இருப்பதில் தவறில்லை.


உலகப் பொருளாதார மேதை ஜான் மேனார்டு கீன்ஸ் போன்றவர்கள் கூறியுள்ள "வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டுமென்றால், கடன் பெற்றாவது அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்'' என்ற முறை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான். 2007 ம் ஆண்டில்கூட உலகளவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்ட போதும்கூட, இத்தகைய கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.


எனவே நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக கூறுபவர்களுக்கு கூற விரும்புகிறேன், நிதிப்பற்றாக்குறை தமிழகத்திலே குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கிறது. மேலும் இந்த நிதிப் பற்றாக்குறை மத்திய அரசு வகுத்த வரம்புக்குள் இருக்கிறது.


புள்ளி விவரம்

கேள்வி: வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாமல், இலவசத் திட்டங்களை மட்டுமே தி.மு.கழக அரசு செயல்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?


பதில்: தி.மு.கழக அரசு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்ற அதே நேரத்தில், சமூகப் பொருளாதார கட்டமைப்புகளையும், திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் சமூகக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 2005 2006 ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 3.81 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் கழக ஆட்சியில் 1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அ.தி.மு.க. ஆட்சியில் 7.58 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் 1.79 சதவீதமாகக் குறைந்துள்ளது.


2005 2006 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 802. 2010 2011 ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்து 421. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் மகப்பேறு கடந்த ஐந்தாண்டுகளில் 277 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 க்கு 37 லிருந்து 31 ஆகவும் பேறு காலத்தில் பெண்கள் இறப்பு விகிதம் லட்சத்திற்கு 111 லிருந்து 79 ஆகவும் குறைந்துள்ளது.


569 புதிய பள்ளிகள் 168 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் 6 புதிய மருத்துவக்கல்லுநுரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 5 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க 2,568 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரக் கட்டமைப்புகளான சாலைகள், பாசனம், போக்குவரத்து, குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சாலை மற்றும் பாலங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 14 ஆயிரத்து 748 கோடி ரூபாய். பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 ஆயிரத்து 822 கோடி ரூபாய். தென்னகநதிகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் கட்டளைக் கதவணை, தாமிரபரணி நம்பியாறு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1 ஆயிரத்து 440 கோடி ரூபாய் இந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.


சென்னை பெருநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் இந்த அரசு தொடங்கியுள்ள ஒரு மகத்தான திட்டம். குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக கடந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்ட தொகை 3 ஆயிரத்து 320 கோடி ரூபாயாகும். இந்த அரசால் 616 கோடியில் முடிக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டுக் குடிநீர் திட்டமான இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1929 கோடி ரூபாய் செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் இந்த அரசு புறக்கணிக்கவில்லை.


கம்யூனிஸ்டுகள் பேச்சு


கேள்வி: தி.மு.கழக அரசின் சார்பாக கடந்த ஐந்தாண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? இந்த ஆண்டு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி செலவழிக்கப்படவுள்ளது?


பதில்: 2006 2007 முதல் 2010 2011 வரை முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக தி.மு.கழக அரசில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 61 ஆயிரத்து 727 கோடி ரூபாய். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய்.


2011 2012 ம் ஆண்டிற்கு இலவச காங்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 3 ஆயிரத்து 497 கோடி ரூபாயும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் போன்றவற்றுக்காக 1 ஆயிரத்து 106 கோடி ரூபாயும் கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், இலவசபுத்தகம் போன்ற திட்டங்களுக்காக 6 ஆயிரத்து 73 கோடி ரூபாயும் முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்திற்காக 1 ஆயிரத்து 471 கோடி ரூபாயும் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்திற்காக 247 கோடி ரூபாயும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கும், சத்துணவு போன்ற நலத் திட்டங்களுக்கும் சேர்த்து 495 கோடி ரூபாயும், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் போன்ற வைகளுக்காக 860 கோடி ரூபாயும் என்ற வகையில் 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கேள்வி: மாநில அரசின் கடன் பற்றி கம்ழூனிஸ்ட் கட்சியினர் பேசுகிறார்களே, அவர்களின் கட்சி ஆளும் கேரள மாநில அரசு கடனே வாங்கவில்லையா?


பதில்: இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப்பதைவிட 10 2 2011 தேதிய "எகானமிக் டைம்ஸ்'' குறிப்பிட்டிருப்பதை அப்படியே சொல்கிறேன்.


உள்நாட்டுக் கடன், சிறு சேமிப்புகள் மற்றும் வருங்கால வைப்புநிதி மற்றும் மத்திய அரசிடமிருந்து கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளடக்கிய கேரளாவின் ஒட்டுமொத்தக் கடன், 1999 2000 ம் ஆண்டு ரூ.20,176 கோடியிலிருந்து 2004 05 ம் ஆண்டில் ரூ.41,878 கோடியாகவும், 2009 2010 ம் ஆண்டு ரூ.70,969 கோடியாகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதுவும் ஏறத்தாழ 3.4 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் 2010 2011 ம் ஆண்டுக்கான பட்ஜெட் உத்தேச மதிப்பீடுகளில் கடன் தொகை கவலை அளிக்கும் அளவுக்கு ரூ.78,329 கோடி என்று காட்டப்பட்டுள்ளது.


சில ஆண்டுகளாக கேரளாவின் தனிநபர் கடனளவு மிகப் பெரும்பாலான இதர மாநிலங்களைவிட மிக அதிகமாகவும் தேசிய சராசரிக்கு மேலும் உள்ளது. 2008 ம் ஆண்டில் கேரளாவின் தனிநபர் கடனளவு ரூ.16,074. அதே ஆண்டில் ஆந்திராவில் ரூ.9,991, தமிழ்நாட்டில் ரூ.9,692, கர்நாடகாவில் ரூ.8,901, அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.10,018 ஆகவும் தனிநபர் கடனளவு இருந்தது.


இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


No comments:

Post a Comment