தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முதலமைச்சர் கருணாநிதி சுதந்திரதின நிகழ்ச்சியில், மின்சார சிக்கனத்தை மேற்கொள்ளும் பொருட்டு பழைய பம்புசெட்டுகளுக்கு பதிலாக திறன்மிக்க புதிய பம்புசெட்டுகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்துடன் பொருத்தித் தரப்படும் என்று அறிவித்தார்.
இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசால் 04.02.2011 அன்று இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது சுமார் 19.08 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இந்த திட்டத்தினை செயல் படுத்துவதின் தொடக்கமாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று 10 விவசாயிகளுக்கு புதிய திறன்மிக்க பம்புசெட்டுகளை வழங்கினார். தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தினைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் முன்னிலையில் இது வழங்கப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு திட்டத்தின் கீழ் விவசாய பொறியியல் துறையின் மூலம் மார்ச் 2010 வரை உயர் சக்தித் திறன்கொண்ட பம்புசெட்டுகள் 50 சதவீதம் மானியத்துடன் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2000-01-ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுளில் சுமார் 3,44,199 விவசாய இணைப்புகளைக் கொடுத்துள்ளது.
புதிய பம்பு செட்டுகள் 10 ஆண்டுகளுக்கு உழைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கடந்த 10 ஆண்டுகளில் விவசாய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்ட பம்புசெட்டுகளும் ஏற்கனவே வேளாண்மை பொறியியல் துறையால் மாற்றப்பட்ட பம்புசெட்டுகளும் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்படுகிறது. எனவே ஒட்டு மொத்தமாக சுமார் 14.67 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய உயர் சக்தித் திறன் கொண்ட பம்புசெட்டுகள் மாற்றப்பட வேண்டி உள்ளது.
இதனால் 20 சதவீத மின்சக்தியை சேமிக்க முடியும். உயர் சக்தித்திறன் கொண்ட பம்புசெட்டுகளை மாற்றி மற்றும் நிறுவுவதற்கு சராசரியாக ஒரு பம்பு செட்டுக்கு ரூ. 22 ஆயிரம் ஆகும். முதல் கட்டமாக இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 32 மின் தொடர்களில் உள்ள சுமார் 10,000 பம்பு செட்டுகள் மாற்றப்பட உள்ளது. இதற்கான மொத்த முதலீட்டுத் தொகை சுமார் ரூ. 22 கோடி ஆகும்.
No comments:
Post a Comment