அண்ணா பல்கலைக்கழக கிளை, காவிரி கூட்டு குடிநீர் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு மதுரையில், வரும் 27ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அடிக்கல் நாட்டுகிறார். அதே விழாவில் அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டிடம், குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.
மதுரை மாவட்டத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப் படுகிறது. குளித்தலையில் இருந்து ராட்சத குழாய் அமைத்து கொண்டு வர குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஆய்வு நடத்தி திட்டம் உருவாக்கி உள்ளனர்.
இதன் மூலம் மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், ஏ.வெள்ளாளபட்டி, விளாங்குடி, பரவை, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 6 பேரூராட்சிகள், கொட்டாம்பட்டி, மேலூர், மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 7 ஒன்றியங்களை சார்ந்த 1,430 கிராமப்புற குடியிருப்புகள் மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி பயன்பெறும் வகையில் மேல்நிலை தொட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.557 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சிக்காக, அண்ணா பல்கலைக்கழக கிளை மதுரையில் கடந்த ஆண்டு நிறுவப்பட்டு, அழகர்கோயில் சாலையில் தற்காலிகமாக செயல்பட துவங்கி உள்ளது.
பெரிய வளாகத்துடன் பிரமாண்ட கட்டிடம் கட்ட, மதுரை கொடிக்குளத்தில் 84 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 2முக்கிய திட்டங்களும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி வாக்குறுதி அளித்து, அவரது முழு முயற்சியால் கிடைத்துள்ளது.
இந்த திட்டங்கள் துவக்க விழா பிப்.27 காலை 10 மணிக்கு மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள பழைய பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அடிக்கல் நாட்டுகிறார்.
இதே விழாவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை விரிவாக்கம் செய்து அண்ணா பஸ் நிலைய பகுதியில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனை பிரிவு கட்டிடத்தையும், மதுரை நகரில் குடிசையில் வாழ்வோருக்காக ராஜாக்கூரில் ரூ.48 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,566 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் மத்திய அமைச்சர் அழகிரி திறக்கிறார்.
இது தவிர அரசு அனுமதித்துள்ள புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளன. அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை கலெக்டர் காமராஜ் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment