தியாகிகள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை செய்ய தவறியதில்லை என, முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை, தியாகராயநகர் போக் ரோடு சந்திப்பில் உள்ள சிலம்புச் செல்வர் ம.பொ.சி. வெண்கலத்தாலான திருவுருவச்சிலையினை 09.02.2011 அன்று முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி,
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுக்குச் சிலை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் குறிப்பாக தி.மு. கழகத்தில் உள்ள எங்கள் அனைவருக்கும் இருந்து வந்தது என்றாலுங்கூட, இன்றைக்கு அந்தச் சிலையை அமைக்கின்ற அந்த வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்து அவருடைய குடும்பத்தாரும் நலமுடன் வாழ, மகிழ்வுடன் வாழ எங்களால் இயன்ற இந்த உதவியைச் செய்கின்ற வாய்ப்பையும் நாங்கள் பெற்றிருக்கிறோம்.
சிலம்புச் செல்வருடைய குடும்பத்தை நான் இன்று நேற்றல்ல; நீண்ட நாட்களாக அறிவேன். அவர் ஒரு இயக்கத்தின் தலைவராக, தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராக, போர்க்களம் பல கண்டவராக வாழ்ந்து மறைந்தவர். மறைந்தவர் என்று சொல்ல மாட்டேன் மறையாதவர். நம் மனங்களில் எல்லாம் நிறைந்திருப்பவர். அப்படிப்பட்ட சிலம்புச் செல்வரை இன்றைக்கு நாம் கொண்டாடுவது, அவரைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல. நம்மைப் போன்றவர்கள் தமிழைக் காக்க தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டை வளம் பெற்ற நாடாக ஆக்க நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள நம்முடைய தன்னலத்தின் காரணமாக, அவரை நாம் இன்றைக்கு நினைத்துப் போற்றுகிறோம், பாராட்டுகிறோம் என்று சொன்னால், அதை யாரும் மறுப்பதற்கில்லை.
நம்முடைய குமரி அனந்தன் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல, பள்ளிப் படிப்பு மூன்றாவது வகுப்பு வரை கூட எட்டாமல் இருந்து, மூன்றாவது வகுப்பு வரை எட்டாமல் இருந்தாலும், முத்தமிழைக் கற்று, அதனைப் பரப்புகின்ற அந்தப் பணியிலே ஈடுபட்டு தமிழகத்திலே ஈடு இணையற்ற தமிழ்ச் செம்மல்களில் ஒருவராகத் திகழ்ந்து இன்றளவும் நம்முடைய நெஞ்சில் நிலைபெற்று வாழ்கின்றார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்று சொன்னால், அது மிகையாகாது.
அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தது போர்க்களத்தில் தான் அதாவது, எங்கேயோ நடைபெற்ற போரில் எங்கேயோ நின்று கொண்டு வேடிக்கை பார்த்த நிலை அல்ல அவரும் நானும் போரிட்டுக் கொண்டு போர்க்களத்தில் தான் அவர் என்னைச் சந்தித்தார், நான் அவரைச் சந்தித்தேன். திராவிட இயக்கத்திற்கும், தமிழரசு கழகத்திற்கும் ஏற்பட்ட மோதுதல்கள் ஒன்றல்ல இரண்டல்ல. அந்த மோதுதல்கள் எல்லாம் இன்றைக்கு மறைந்து, அழிந்து, வீழ்ந்து மோதிக்கொண்டது, இரு கை அணைத்துக் கொள்ளத்தான் என்ற நிலையில், அவருடைய சிலையைத் திறக்கின்ற அந்த அரும்பணி எனக்குக் கிடைத்து உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களோடு அந்த பணியினை இன்றைக்கு நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன்.
ஏற்கனவே தமிழகத்திலே வாழ்ந்து மறைந்த பல பெரும்புலவர்கள், தமிழறிஞர்கள், தியாகச் செம்மல்கள் அவர்களையெல்லாம் மறவாமல், அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தாருக்கு நிதி உதவி, வாழ்வாதாரத்திற்கான பல உதவிகள் இவைகளையெல்லாம் செய்து கடமையாற்றி வருவது இந்த அரசு என்பதை நீங்கள் எல்லாம் நன்கறிவீர்கள். நான் சுய விளம்பரத்திற்காகச் சொல்லவில்லை. இதைச் சொல்வதின் மூலம் உங்களில் பலருக்கு எதிர்காலத்திலே தமிழகத் தலைவர்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை உணர்வு நினைவிற்கு வரும் என்பதற்காகச் சொல்லுகிறேன். உங்களுக்குத் தெரியும் சென்னை, பழைய கோட்டை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அதற்குப் பக்கத்தில் நாமக்கல்லார் பெயரில் நாமக்கல் கவிஞர் மாளிகை மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறதே, அது என்னுடைய தொண்டு. அது என்னால் கட்டப்பட்ட மாளிகை. நான் முன்பு ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது அந்த மாளிகை எழுப்பப்பட்டு, பத்து மாடி கொண்ட அந்த மாளிகை அரசுப் பணிகளை இன்னும் பல பேர் இருந்து ஆற்ற வேண்டிய வாய்ப்பும் வசதியும் இருந்திட வேண்டும் என்பதற்காக இன்றைக்குப் பயன்படுத்தப்படுகின்ற மாளிகையாக இருக்கிறது.
அந்தக் காரணத்தினாலேதான், நாமக்கல்லார் பெயரால் நாமக்கல் கவிஞர் மாளிகை”யை அங்கே எழுப்பினேன். ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். இவைகளையெல்லாம் சொல்லக் கூடாது. ஆனால் பொது வாழ்க்கையில் நாம் எப்படி பழக வேண்டும் என்பதற்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, நான் சொல்கின்ற நிகழ்ச்சி பயன்படும் என்பதால் சொல்ல விரும்புகிறேன்.
நாமக்கல்லார் மேலவையிலே உறுப்பினராக இருந்தார். அப்போது எனக்கொரு கடிதம் எழுதினார். மேலவை கலைக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி. மேலவை கலைக்கப்பட்டது நம்முடைய ஆட்சியிலே அல்ல, வேறொரு ஆட்சியிலே!
நாமக்கல் கவிஞர் மேலவை உறுப்பினராக இருந்து பதவிக் காலம் முடிந்த பிறகு அவருடைய நிலைமையை விளக்கி எனக்கொரு கடிதம் எழுதினார். நான் அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் அவருக்கு என்ன உதவி செய்யலாம் என்று எழுதினேன்.
அப்போதெல்லாம் நான் பதவிப் பொறுப்புக்கு வந்து விட்டேன். எனவே, அவருக்கு வாழ்நாள் முழுதும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் உதவித் தொகை தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என்றும், அந்த ஆணை 1967 ஆகஸ்ட் மாதம் முதலே அந்த உதவி நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தேன். இதை நான் அறிவித்த பிறகு, அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதற்கு அடையாளமாக அவர் எனக்கு எழுதிய பதில் கடிதத்தை உங்களுக்கு நான் படித்துக் காட்ட விரும்புகின்றேன்.
“மெய்யன்பரே, (இப்படித்தான் அப்போது அவர் என்னை அழைத்திருந்தார்)
அன்பு ததும்பும் தங்களுடைய கடிதம் வந்தது. அறிக்கையை தாங்கள் வெளியிட்ட அன்று மாலையிலேயே அது ரேடியோவில் சொல்லப்பட்டதைக் கேட்ட பல நண்பர்கள் என் வீட்டிற்கு ஓடி வந்து தங்களையும், என்னையும் வானளாவப் புகழ்ந்து பாராட்டினார்கள். நான் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தேன். தங்கள் அன்பே அன்பு. பெயர் அளவில் மட்டுமல்ல; தாங்கள் செயலிலும் கருணையின் நிதியே! தாங்கள் முதல் அமைச்சரானது முதல் கருணை மிக்க காரியங்களையே செய்திருக்கிறீர்கள். தங்களுடைய ஆட்சிக் காலம் சரித்திரத்தில் பொற்காலமாக விளங்கும். (பெரியவர்கள் வாக்கு பொய்க்காது என்பதை நீங்களும் இப்போது உணர்வீர்கள் என்று கருதுகிறேன்) நான் அதைக் கவிதையில் பாடுவேன். தாங்கள் அண்ணா அவர்களின் மேலான குறிக் கோள்களைச் செயலாக்கி வருவதை மனமார வாழ்த்துகிறேன். நீடூழி வாழ்க.
தங்கள் அன்புள்ள
வெ. ராமலிங்கம்.
என்று அவர் எனக்கு எழுதியிருந்தார்.
நாமக்கல் கவிஞருக்கு உதவிப் பணம் அளிக்க என்னுடைய அரசு முன்வந்த செய்தியைக் கண்ட அவருக்கு மிகவும் வேண்டிய நண்பரான அவ்வை டி.கே. சண்முகம் அவர்கள் எனக்கொரு கடிதம் எழுதினார்.
இது போன்ற உதவியை பாரதியாரின் நண்பர் பரலி சு. நெல்லையப்பருக்கும் வழங்கினால் நலமாக இருக்கும்
என்று எழுதியிருந்தார். அதனையொட்டி பரலி சு. நெல்லையப்பருக்கும் அவரது ஆயுள் காலம் முழுவதும் மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் அரசின் சார்பில் வழங்குவதென அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
100 ரூபாய், 200 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையா என்று எண்ணத் தோன்றும். ஆனால் அந்த 100 ரூபாய் அனுப்பியபோது, அதைப் பெற்றுக் கொண்டு பரலி சு. நெல்லையப்பர் எழுதிய கடிதம்
தமிழகத்தின் தலைமை அமைச்சர் பெருமானுக்கு, வணக்கம். எண்பது வயது கொண்ட எனக்கும், என்னிலும் ஒரு வயது மூத்தவரான நாமக்கல் கவிஞருக்கும் அன்பு கூர்ந்து உதவியளிக்க முன் வந்த தமிழக அரசினர்க்கு எனது மனமார்ந்த நன்றி. சிறப்பாகத் தங்கட்கும் ஏனைய அமைச்சர்கட்கும் எனது பெரு நன்றி. எனது கண்பார்வை சீர் கெட்டிருப்பதாலும், உடல் நலம் இன்மையாலும் நான் நேரில் வந்து என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்க இயலவில்லை. இங்ஙனம் நெல்லையப்பன்
என்று அவர் தனது நன்றி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையெல்லாம் நான் சொல்வதற்குக் காரணம், ஏதோ கருணாநிதி தியாகராய நகரில் சிலம்புச் செல்வர் சிலை திறப்பு விழா என்ற பெயரால், ஏதோ சில பொய்களை எல்லாம் அவிழ்த்துவிட்டுப் போனான் என்று நாளைக்கு அறிக்கை விடுவதற்குச் சில பேர் தயாராக இருப்பார்கள். ஏனென்றால், அதைத் தவிர வேறு வேலையில்லாதவர்கள், அதைச் செய்து கொண்டிருப்பார்கள். இந்தக் கடிதங்களை அவர்களுடைய கையெழுத்தோடு நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன். ஏனென்றால், பெரிய கவிஞர்களாக விளங்கிய இரண்டு பெரிய மனிதர்கள், தேச பக்தியோடு, மொழி பக்தியைக் கொண்டு வாழ்ந்தவர்கள் தேச விடுதலைப் போராட்டத்திலே பல்லாண்டுக் காலம் சிறையிலே இருந்தவர்கள் அவர்களுடைய முத்திரையைப் பெறுவது அவர்களுடைய அன்பைப் பெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல.
இன்னும் பல உதாரணங்களை இங்கே நம்முடைய இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் எடுத்துரைத்தார். அவர்களைப் போன்றவர்கள் நினைவூட்ட, நினைவூட்ட அத்தகைய காரியங்களை நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.
பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அதைப்போலவே, காங்கிரஸ் இயக்கத்தினுடைய பெரிய தலைவர்களுக்கு, விடுதலை வீரர்களுக்கு, கட்டபொம்மனைப் போன்றவர்களுக்கு, பூலித்தேவனைப் போன்றவர்களுக்கு, சிவகங்கை சீமையில் சின்னமருது, பெரிய மருது போன்றவர்களுக்கு இந்த இயக்கத்தின் சார்பாக மாத்திரமல்ல; இந்த இயக்கம் இன்றைக்கு அரசோச்சுகின்ற இடத்திலேயிருந்து தமிழக அரசிலேயிருந்து பல காரியங்களை நாங்கள் அவர்களை நினைப்பதற்கு ஏதுவாகச் செய்திருக்கின்றோம். இவைகளெல்லாம் எதிர்காலத் தலைமுறை வீரம் கொண்டும், விவேகம் கொண்டும், தாய்நாட்டுப் பற்றுக் கொண்டும், தமிழ் மொழியின் மீது காதல் கொண்டும் வாழ வேண்டுமென்பதற்காகச் செய்யப்பட்ட காரியங்கள். அப்படிப்பட்ட பணியை ஆற்றியமைக்காக நம்முடைய நண்பர்கள் எனக்கு அளித்துள்ள பெருமைக்கு இவைகள் என்றென்றும் நம்முடைய வாழ்க்கையிலே ஒரு ஏடாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு இந்த விழாவிலே நான் கலந்து கொண்டிருக்கின்றேன்.
இதிலே ம.பொ.சி. அவர்களுடைய குடும்பத்திற்கு தங்க வாள் தங்க மகுடம் எனக்குத் தரப்பட்டவைகளை பரிசாக வழங்கி அதை நிதியாக மாற்றி அவருடைய குடும்பத்திற்கு அதைப் பயன்படுத்த வேண்டுமென்று விரும்பி அதை இன்றைக்கு ஏலம் விட்டிருக்கிறோம். அதை 55 இலட்சம் ரூபாய்க்கு திரு. காமராஜ் என்ற இளைஞர் ஏலம் எடுத்திருக்கிறார்.
வேடிக்கை பாருங்கள் ம.பொ.சி. விழாவில் கருணாநிதி ஏலம் விட அதைக் காமராஜர் வாங்க இந்த அரசியல் ஒற்றுமை எதிர்காலத்திலே மாத்திரமல்ல நிகழ் காலத்திலும் நிலவிட வேண்டும் எதிர்காலத்திலும் வளர்ந்திட வேண்டும் என்கின்ற அந்தத் தணியாத ஆவலை இந்த அருமையான விழாவிலே வெளியிட்டு, ம.பொ.சி.யினுடைய புகழ் வாழ்க; அவருடைய வீரம் பரவிடுக; அவருடைய வரலாறு படித்து, எதிர்காலத்தில் இளைஞர்கள் எல்லாம் சிலம்புச் செல்வரைப் போலத் தாங்களும் திகழ்ந்திட வேண்டும் என்கின்ற எண்ணத்தைப் பெற்று வீறு கொண்டு எழுக! என்ற வாழ்த்தோடு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.
இங்கே ஏலத்தின் மூலமாகக் கிடைத்துள்ள 55 இலட்சம் ரூபாயை ம.பொ.சி. அவர்களுடைய குடும்பத்தினருக்குப் பகிர்ந்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். அவருடைய குடும்பத்திலே பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்தாலும்கூட, அவர்களை இந்த 55 இலட்சம் ரூபாய் பிரித்து விடுமோ? என்ற அந்த அச்சத்தின் காரணமாக, இப்போதே சொல்லி வைக்கிறேன் அந்தத் தொகையைப் பிரித்துக் கொடுக்கின்ற அந்தப் பணியை அரசின் சார்பாக இதை இங்கே வழங்கிய நிகழ்ச்சியை முன்னிட்டு நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
வருகிற 13ஆம் தேதி அன்று அந்தக் குடும்பத்தின் இரு பிரிவினரும் வருகை தந்து கோட்டைக்கு வருகை தந்து அவர்களுடைய பங்கினைப் பெற்றுக் கொண்டு செல்ல வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். (குறுக்கீடு) நண்பர் துரைமுருகனும், ஜெ. அன்பழகனும் இது கட்சியின் சார்பாகக் கொடுத்தது. ஆகவே, அண்ணா அறிவாலயத்திற்கு வந்து அங்கே தந்து விட்டுப் போங்கள் என்று சொல்கிறார்கள். அறிவாலயத்திற்கு வந்தால்கூட, அதற்கும்கூட குற்றம் குறை சொல்பவர்கள் நாட்டிலே இருப்பார்கள். ஆகவே, பொதுவாக, அரசாங்க மாளிகையிலேயே, அரசாங்கத்தின் சார்பிலேயே என்னுடைய முன்னிலையில் இரு சாராருக்கும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கலைஞருக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலமிட்டு ம.பொ.சி. குடும்பத்துக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி :
அந்த வீரவாளினையும், கிரீடத்தையும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை தியாகராய நகரில் நடைபெறும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலை திறப்பு விழாவின்போது ஏலமிட்டு அதில் இருந்து கிடைக்கும் மொத்த தொகையையும் சிலம்புச்செல்வரின் குடும்பத்துக்கு வழங்கிட முடிவு செய்துள்ளார் என்று தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி ம.பொ.சி.யின் திருவுருவச்சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலம் விட்டதில் ரூ.55 லட்சம் கிடைத்தது. அதனை ம.பொ.சி. குடும்பத்துக்கு நிதியுதவியாக வரும் 13ஆம் தேதி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment