மக்களின் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்யும் சமதர்ம - இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் க. அன்பழகன் இன்று தமிழ் நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.
ஆற்றிய உரை
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்
என்னும் அய்யன் வள்ளுவன் குறள்
மொழிக்கு ஏற்ப, ஏற்ற காலம் அறிந்து, உரிய இடத்தில் தகுந்த முயற்சி மேற்கொண்டு, அல்லும் பகலும் அயராது உழைத்து, தான் ஏற்றுள்ள பெரும் பொறுப் பிற்கேற்ற கடமையை நிறைவேற்றுவதில் வல்லவ ராகவும், நூலறிவுடன் மதிநுட்பம் வாய்ந்தவராகவும் விளங்கும் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களின் தலைமையில் 2006 ஆம் ஆண்டு மே திங்களில், ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு, இதுவரை தமிழக மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், வறியவர்கள் வாழ்வு பெறுவ தற்காகவும், தமிழக மக்கள் பசியும், பிணியும் நீங்கி, வசியும் வளனும் சுரக்கும் நலவாழ்வு பெறுவதற் காகவும், எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, முறையாகச் செயற்படுத்தி சாதனை பல படைத்து, அய்ந்தாண்டு காலத்தை நிறைவு செய்ய உள்ளது.
தமிழ் உண்டு தமிழ் மக்கள் உண்டு இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
என்னும் உணர்வுடன், பொதுவாழ்வில் அடி யெடுத்து வைத்து, முத்தமிழின் ஆக்கத்திற்கு அரும் பணியாற்றி வரும் கலைஞர், அய்ந்தாவது முறை யாக முதல்வராக விளங்கும் இந்தக் காலகட்டத் திலேயே, உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றாய், திராவிடக் குடும்ப மொழிகளின் தாய்மொழியாய், மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தொல்வரவான இலக்கியங்களுக்கு இலக்கணம் கண்ட மொழியாய், இயல், இசை, கூத்தென மலர்ந்து வழிவழி வளர்ந்து கலை மணம் பரப்பும் மொழியாய், தனித்தியங்கும் தகுதி தமிழுக்குண்டு என்னும் பெருமை கொண்ட தாய், மொழி இலக்கணத்தில் தேர்ந்த அறிஞர் பெருமக்கள், உயர்தனிச் செம்மொழியே தமிழ் என்று உரைத்திட்ட தகுதிச் சான்று பெற்றதாய் விளங்கும் நம் தாய்மொழியாம் தமிழ் ஒரு செம் மொழி (Classical Language) என்று, இன்றளவும் மைய அரசு ஏற்று அறிவிக்கவில்லையே என்னும் மனக்குறை நீங்கிடவும், செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று தமிழ் ஆர்வலர் ஆடிப்பாடவும் வழிசெய்த வித்தகராகவும், நம் தாய்மொழி தமிழின் பெரு மையை உலகம் உணர்ந்திடுமாறு, கோவை மாநக ரில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட் டினைக் கூட்டி, தமிழ் நெஞ்சமெல்லாம் பெருமிதம் கொள்ளச் செய்திட்ட விவேகியாகவும் திகழும், கலைஞர் தலைமையில், இந்த ஆட்சி நடைபெறு வதை எண்ணிடும் தமிழரெவரும் பெருமையும், பேருவைகையும் கொள்வர் என்பதில் அய்யமில்லை.
அத்தகு தகுதி உண்மையால் ஆட்சி உரிமை கொண்ட முதல்வர் கலைஞர் தலைமையில், கடந்த அய்ந்தாண்டுகளாக நிதி அமைச்சராகப் பணியாற்றும் கடமை எனக்கு வாய்த்ததை எண்ணி நான் இறும்பூது எய்துகின்றேன்.
ஜனநாயக மரபின்படி 2011-2012 ஆம் ஆண்டுக் கான முன்னளி மானிய அனுமதி கோரி, இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்ட அறிக்கை இந்தப் பேரவையின் முன் வைக்கப்படுகிறது. இதனால் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இதில் இல்லை என்றாலும், ஏற்கனவே அறிவித்துச் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை வகுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக 2006 பொதுத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, தமது வாய்மையை நிரூபித்திடும் வகையில்; விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை, 7 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து செய்தும், சத்துணவோடு வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை உயர்த்தியும், பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியின் விலையை வெகுவாகக் குறைத்தும் ஆணையிட்டதோடு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்; கலைஞர் வீடுவழங்கும் திட்டம் போன்ற தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங் களையும் நிறைவேற்றி;
கடந்த ஆளுநர் உரையில் அகழ்ந்தெடுத்த முத்துக்களாக அறிவிக்கப்பட்ட சிறப்புச் சுற்றுலாத் திட்டம், மெட்ரோ ரயில் மூன்று புதிய பாதைகள், வன உயிர்ப்பன்மைத் திட்டம், கிருஷ்ணகிரியில் புதிய தோட்டக்கலைப் பல்கலைக் கழகம், அறிவியல் பெருநகரம், புதிதாக அய்ந்து மருத்துவக் கல்லூரிகள், கன்னியாகுமரியில் சித்த ஆயுர்வேத பல்கலைக்கழகம், நகர்ப்புர வீட்டுவசதித் திட்டம் போன்ற திட்டங்களையும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தீட்டப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டப் பேரவை தேர்தலுக்குப்பின் புதிய சட்டப் பேரவை அமைக்கப்பட்டு ஆண்டின் முழு மையான வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப் படும்.
உபரி ரூபாய் 453 கோடி
தமிழ்நாட்டின் நிதிநிலையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்ததன் பயனாக 2005-2006 ஆம் ஆண்டில் ரூபாய் 1951 கோடியாக இருந்த வருவாய் உபரி, எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்திய நிலையிலும்கூட, 2007-2008 ஆம் ஆண்டில் வருவாய் உபரி, ரூபாய் 4,545 கோடியாக உயர்ந்தது. முன்பு குறிப்பிட்டதைப்போல் 2007-2008 ஆம் ஆண்டிலிருந்த உலகப் பொருளாதார மந்த நிலையின் காரணமாக, இந்தியாவில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டு, அரசின் வரி வருவாய் குறைந்ததால், 20082009 ஆம் ஆண்டில் வருவாய் உபரி ரூபாய் 1,452 கோடியாகக் குறைந்தது.
ஆறாவது சம்பளக் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தியதன் காரணமாக, 2009-2010 ஆம் ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. மாநிலங்களின் வரி வருவாய் பாதிக்கப்பட்ட நிலையில் புதிய சம்பள விகிதத்தைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு ஏற்பட்டதால், மத்திய நிதிக் குழுவும் 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலைப் பொறுப்பு டைமைச் சட்டத்தின் கீழ் 20102011 ஆம் ஆண்டுக்கு வரையறுக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறைக் குறியீடுகள் கடைப்பிடிக்கப் படுவதை தளர்த்தி உள்ளது.
எனவே, நடப்பு ஆண்டில் ரூபாய் 3 ஆயிரத்து 129 கோடி என்ற அளவில் வருவாய்ப் பற்றாக்குறை இருந்தாலும், 20112012 ஆம் ஆண்டில் மத்திய நிதிக்குழு வரையறுத்துள்ளவாறு தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை முழுவதும் நீக்கப்பட்டு, வருவாய் உபரி ரூபாய் 439 கோடியாக இருக்கும்.
ஆண்டுத் திட்டம்
பதினோராவது அய்ந்தாண்டுத் திட்ட காலமான, 2007-2008 ஆம் ஆண்டு முதல் 2011-2012 ஆம் ஆண்டுவரை, தமிழ்நாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட திட்ட ஒதுக்கீடு ரூபாய் 85,344 கோடியாகும். 2007-2008 முதல் 2010-2011 வரையிலான நான்கு ஆண்டுகளில், தமிழ்நாடு எய்திய திட்ட மதிப்பீடு ரூபாய் 68,403 கோடியாகும்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்குப்பின் 2011-2012ஆம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு, மத்திய திட்டக் குழுவுடன் கலந்தா லோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்ற போதிலும், 2011-2012 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டப்படி உத்தேச ஒதுக்கீடான ரூபாய் 22,000 கோடியையும் சேர்த்து பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், தமிழ்நாடு எய்த உள்ள திட்ட ஒதுக்கீடு ரூபாய் 90,403 கோடியாக இருக்கும். எனவே, பதினோ ராவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், திட்டப்பணி களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட ரூபாய் 5,059 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளோம்.
2010-2011 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட மதிப் பீட்டில் மூலதனச் செலவுத் திட்டங்களுக்கு, முன் எப்போதும் இல்லாத அளவாக ரூபாய் 13,575 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2001-2002 முதல் 2005-2006ஆம் ஆண்டு வரை செய்யப்பட்ட மூலதனச் செலவு ரூபாய் 15,614 கோடியாகும். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றபின் 2006-2007 முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரை ரூபாய் 44,667 கோடி மூலதனப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை இம்மாமன்றத்திற்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வெள்ள நிவாரண நடவடிக்கைகள்
2008-2009 ஆம் ஆண்டிலும், நடப்பாண்டிலும் தமிழ்நாடு வெள்ளச் சேதத்தைச் சந்திக்க நேரிட்டது. 2008-2009 ஆம் ஆண்டில் ரூபாய் 1,091 கோடி அளவில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழையினால் கடலோர மாவட்டங்களில், பெருத்த பயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன. இந்த அரசு உடனடி வெள்ள நிவாரணத்திற்காக ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொண்டது.
உயிர்ச் சேதத்திற்கும், பயிர்ச் சேதத் திற்கும், சேதமடைந்த வீடுகளுக்கும் ஏற்கனவே இருந்த நிவாரணத் தொகையின் அளவைக் கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது. நிரந்தர நிவாரணப் பணிகளுக்காக ரூபாய் 500 கோடி அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 1,832 கோடியை, கூடுதல் நிவாரண உதவியாக வழங்க மாநில அரசு கோரியதையடுத்து, மத்திய அரசின் ஆய்வுக்குழுவினர் வெள்ளம் பாதித்தப் பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். மத்திய அரசும் விரைவாக நிதியை விடுவிக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் கடந்த அய்ந்தாண்டுகளில் சாதிப் பூசல்களோ, மதப் பூசல்களோ, பயங்கரவாதமோ, நக்சலைட் தீவிரவாதமோ தலையெடுக்கா வண்ணம் இந்த அரசு விழிப்புடன் இருந்து செயல்பட்டுவருகிறது. சென்னை மாநகரக் காவல் துறையின் பணிச்சுமையைக் குறைக்கவும், காவல் பணியைச் செம்மையாக்கவும், சென்னைப் புறநகர் காவல் ஆணையரகம் 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இரண்டு புதிய காவல் மாவட்டங்கள், 76 காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 24,415 இரண்டாம் நிலைக் காவலர்களும், 2,048 உதவி ஆய்வாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைத் தீவிரவாதத்திலிருந்து காத்திட, ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவு பதிலடிக் குழுக்கள் (Quick Reacto Teams) நிறுவப்பட்டுள்ளன. காவல் துறைக்காக 2001-2002 ஆம் ஆண்டு முதல் 2005-2006ஆம் ஆண்டு வரை ரூபாய் 6,198 கோடியாக இருந்த மொத்த ஒதுக்கீடு, கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 11,416 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் காவல் துறைக்காக ரூபாய் 3,239 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறை
சிறைகளை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் நாகர் கோவில், விருதுநகர், இராமநாதபுரம், நாகப்பட்டினம், ஆத்தூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய கிளைச் சிறைகள் மாவட்ட சிறைச்சாலைகளாகத் தரம் உயர்த்தப் பட்டுள்ளன. திண்டுக்கல், நாகர்கோவில், விருதுநகர், ஆத்தூர் ஆகிய சிறைகளுக்கு ரூபாய் 11 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 500 பெண் சிறைக் கைதிகள் அனுமதிக்கப்படும் வகையில், ரூபாய் 10 கோடி செலவில், திருச்சியில் பெண்களுக்கென, தனிக் கிளைச்சிறை கட்டப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சிறைத் துறைக்காக ரூபாய் 140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
இந்த அரசு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினை நவீனப்படுத்தி, தொழில்நுட்பச் செயல் திறனை மேம்படுத்த கடந்த அய்ந்தாண்டுகளில் மட்டும் ரூபாய் 522 கோடி செலவிட்டுள்ளது. 2006-2007 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 18 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி புதிய நிலையங்களும், இந்த ஆண்டில் அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு, புறநகர் கோட்டமும் அமைக்கப்பட்டுள்ளன. இத் துறையில் அரசு எடுத்துவரும் சீரிய முயற்சிகளின் பயனாக 2006-2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை 38,775 பேர் உயிரிழப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ரூபாய் 1,362 கோடி பெறுமானமுள்ள சொத்துக்கள் சேதமடையாமல் மீட்கப்பட்டுள்ளன. இத்துறைக்கென இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 169 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு
இந்தியாவில் சாலைப் பாதுகாப்புக் கொள்கையை முதன் முதலாக வகுத்த மாநிலம் தமிழ்நாடாகும். இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சாலைப் பாதுகாப்புக் குழுக்களைத் தோற்றுவித்துள்ளது. சாலைப் பாதுகாப்பு நிதிக்கென நடப்பு நிதியாண்டில் ரூபாய் 40 கோடி வழங்கப்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு விபத்துக்களைக் குறைப்பதற்காக, நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்திலும் இந்த நிதிக்கு ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீதி நிருவாகம் நீதியரசர் பத்ம நாபன் கமிட்டி பரிந்துரையின்படி சார்பு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் இதர படிகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களின் கட்டமைப்புகளை வலுப்படுத்த கடந்த ஐந்தாண்டுகளில் 302 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. 119 புதிய நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பதின்மூன்றாவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி மாலை நேர நீதிமன்றங்கள் மற்றும் விடுமுறை நாள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, நிலுவையிலுள்ள வழக்குகளைக் கணிசமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக மாநிலத்தில் நீதி நிருவாகம் சிறப்பாகவும், நிருவாக அமைப்புகளுடன் சுமுகமான முறையில் இணைந்தும் செயல்பட்டு வருகிறது. நீதி நிருவாகத்திற்காக இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 633 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் நிருவாகம்
இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு நிலவரி வசூல் செய்யும் முறையை எளிமைப்படுத்தி தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, கூடுதல் தண்ணீர்த் தீர்வை மற்றும் பாசன மேம்பாட்டு வரி ஆகியவற்றை நீக்கி விவசாயிகளின் நில உடைமைக்குச் சான்றாக விளங்கத் தக்க வகையில் பெயரளவிற்கு மட்டுமே நிலவரி என்று வசூலிக்கப்படும் என ஆணையிட்டது.
இதன்படி நிலவரியாக நஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ஐந்துரூபாயும், புஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் 17.9.2006ல், திருவள்ளூர் மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, இதுவரை தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 976 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, 2 இலட்சத்து 12 ஆயிரத்து 946 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் மூலம், இந்த அரசு பொறுப்பேற்றபின் 8 இலட்சத்து 21 ஆயிரத்து 3 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூபாய் 3,716 கோடி செலவில் ஒரு கோடியே 62 இலட்சத்து 80 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கோடியே 58 இலட்சத்து 8 ஆயிரத்து 285 பெட்டிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூபாய் 249 கோடி மதிப்பீட்டில் 10 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி, இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டில் ரூபாய் 269 கோடி ஒதுக்கீட்டில் ஒரு கோடியே 59 இலட்சத்து 4 ஆயிரம் பயனாளிகளுக்கு சேலைகளும், ஒரு கோடியே 58 இலட்சத்து 19 ஆயிரம் பயனாளிகளுக்கு வேட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய சட்டமன்ற வளாகம் கால்நடை வளர்ப்பு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத் திட்டம், ரூபாய் 1,000 கோடி மூலதனச் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பயனாக அதன் காகித உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2.45 இலட்சம் டன்னிலிருந்து 4 இலட்சம் டன்னாக உயரும். இக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு முதலீட்டு மானியத்தைப் பெறுவதற்காகத் தற்போதுள்ள தொழில் நிறுவனங்களுடன் பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் ஆகிய தொழில் நிறுவனங்களையும் சேர்த்து ஆணையிடப்பட்டுள்ளது. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழ்நாட்டில் 100 தொழில்பேட்டைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை 92 தொழில் பேட்டைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ், ரூபாய் 227 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வரும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் இதற்காக ரூபாய் 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தற்போது 1,229 விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த ஆண்டு 84,886 மாணவ மாணவியர் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டில் விடுதிகளுக்குப் புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக ரூபாய் 30.62 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2006-2007 ஆண்டிலிருந்து இதுவரை, ரூபாய் 65.5 கோடி செலவில் 131 விடுதிகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளன. மாநிலப் பொருளாதாரம் மகளிர் நலனுக்கு ஊக்கம் 20062007 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 25 லட்சத்து 20 ஆயிரத்து 186 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூபாய் 1,470 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரிகள் இல்லாத பட்ஜெட் கடந்த அய்ந்தாண்டுகளில் பல திட்டங்களை இந்த அரசு புதிதாக அறிவித்து செயல்படுத்தி வந்தாலும் மக்களுக்குக் கூடுதல் வரிச் சுமை எதையும் ஏற்படுத்தி விடாமல் முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான இந்த அரசு கவனமாகச் செயல்பட்டுள்ளது என்பதை மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நான் நினைவுகூர விரும்புகிறேன். விரைவில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலின் காரணமாக 2011-2012 ஆம் ஆண்டுக்கு இடைக்கால வரவுசெலவுத் திட்டமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதால் புதிய வரிகள் விதிப்பது பற்றியோ, வரி விலக்குகள் அறிவிப்பது பற்றியோ அறிவிப்புகள் ஏதும் செய்யப்படவில்லை. எனவே, தற்போதைய வரிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த நிதிநிலை கணிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டப் பேரவை, சட்ட மேலவை மற்றும் தலைமைச் செயலகத்தைப் பொலிவாக உருவாக்க, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூபாய் 1,092 கோடி மதிப்பீட்டில் சட்டமன்ற வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற வளாகம் மாண்புமிகு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால், திருமதி சோனியா காந்தி அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 13.3.2010 அன்று திறந்துவைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் 2010 மார்ச் திங்கள் முதல் சட்டப் பேரவை நடந்து வருகிறது. சட்ட மேலவை அமைக்கும் பணிகளும் தலைமைச் செயலகக் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகளும், கலைவாணர் அரங்கம் கட்டும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 244 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் நலன்
தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த அரசால் ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூபாய் 30 கோடிக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான பணிகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம், மூவலூர் இராமாமிருதம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களும், இந்த முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரூபாய் 40 கோடிக்கான நிவாரணப் பொருட்களை இந்த அரசு வழங்கியது.
மத்திய அரசும் இலங்கைத் தமிழர் நிவாரணப் பணிகளுக்காக, ரூபாய் 500 கோடியை வழங்கியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். வேளாண்மை 2010-2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பளவு 60 இலட்சம் ஹெக்டேர் அளவு இருக்கும். இது சென்ற ஆண்டின் சாகுபடி பரப்பளவான, 58 இலட்சம் ஹெக்டேரை விட 3.44 சதவீதம் கூடுதல் ஆகும். சென்ற ஆண்டைக் காட்டிலும் நெல் சாகுபடிப் பரப்பளவு, இதுவரை இரண்டரை இலட்சம் ஏக்கரும், பயறு வகைகள் சாகுபடி இரண்டரை இலட்சம் ஏக்கரும், எண்ணை வித்துக்கள் ஒரு இலட்சம் ஏக்கரும் கூடுதலாகியுள்ளது.
இந்த ஆண்டின் உணவு உற்பத்தி 90 இலட்சம் டன் அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், பயறு வகைகள் மற்றும் எண்ணை வித்துக்கள் உற்பத்தித் திட்டம் போன்றவை தமிழ்நாட்டில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2007-2008 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை 679 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 174 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயரிய தொழில் நுட்பத்தை விரிவுபடுத்துதல், தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்குதல், தட்டுப் பாடின்றி உரம் போன்ற இடுபொருட்கள் விவசாயி களுக்குக் கிடைக்க வழிவகை செய்தல் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக, நெல் முதலான முக்கியப் பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்து வருகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் 59,560 ஹெக்டேரில் சொட்டுநீர்ப் பாசன முறை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நெல் உற்பத்தித் திறனை அதிகரிக்க இராஜராஜன் 1000 சாகுபடி முறை, 2010-2011 ஆம் ஆண்டில் 7.1 இலட்சம் ஹெக்டேரில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. துல்லிய பண்ணைத் திட்டம், பசுமைக் குடில் போன்ற நவீன சாகுபடி முறைகளைப் பின்பற்றி காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், 2005-2006 ஆம் ஆண்டு 63 இலட்சம் டன்னாக இருந்த காய்கறி உற்பத்தி 2009-2010ல் 87 இலட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. 2005-2006 ஆம் ஆண்டில் சாதாரண ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூபாய் 570 ஆகவும், சன்ன ரக நெல்லுக்கு ரூபாய் 600 ஆகவும் வழங்கப்பட்ட கொள்முதல் விலை, படிப்படியாக உயர்த்தப்பட்டு நடப்பு ஆண்டில் சாதாரண ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூபாய் 1,050 ஆகவும், சன்ன ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூபாய் 1,100 ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் கரும்புக்கான கொள்முதல் விலை 2005-2006ல் ரூபாய் 1,014 என்றிருந்ததை, போக்குவரத்துக் கட்டணத்துடன் சேர்த்து 2010-2011ல் ரூபாய் 2,000 ஆகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. துவரையின் கொள்முதல் விலை குவின்டாலுக்கு ரூபாய் 3,000 ஆகவும், பச்சைப் பயிறு குவின்டாலுக்கு ரூபாய் 3,170 ஆகவும் உளுத்தம் பயிறு குவின்டாலுக்கு ரூபாய் 2,900 ஆகவும், தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் இத்தகைய பயிர்களைச் சாகுபடி செய்வதைப் பாதுகாப்பாகக் கருதிப் பயிரிடுவதால், இவற்றின் உற்பத்தி அதிகரிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு
கூட்டுறவு அமைப்புகளைச் சீரமைக்க, பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று கூட்டுறவுக் கடன் அமைப்புகள் இந்த அரசினால் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மத்திய அரசிடமிருந்து ரூபாய் 1,080 கோடியும் மாநில அரசின் பங்காக ரூபாய் 231 கோடியும் சேர்த்து, மொத்தம் ரூபாய் 1,311 கோடி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அளிக்கப்பட்டு, அச்சங்கங்கள் சிறப்பான பணியை ஆற்றி வருகின்றன. மொத்தமுள்ள 4,522 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களில் 2005-2006 ஆம் ஆண்டில் 652 சங்கங்களே இலாபம் ஈட்டியதற்கு மாறாக, இந்தப் புனரமைப்பு நடவடிக்கைகளின் பயனாக 2009-2010 ஆம் ஆண்டில் 3,696 சங்கங்கள் இலாபம் ஈட்டியுள்ளன. மத்தியக் கூட்டுறவு வங்கிகளையும், மாநிலக் கூட்டுறவு வங்கியையும் புனரமைக்க தணிக்கைப் பணிகள் நடந்து வருகின்றன.
வேளாண்மை வளர்ச்சி
இந்த அரசு பொறுப்பேற்றவுடன் நிலுவையிலிருந்த விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான நிதி உதவியைக் கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்கியுள்ளது. விவசாயிகளின் துயர்துடைக்க 20062007 முதல் குறைந்த வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. உரிய காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கும் திட்டம், 2009-2010 ஆம் ஆண்டு முதல் இந்த அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 20062007 ஆம் ஆண்டு முதல் இதுவரை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ரூபாய் 9,000 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான வட்டி இழப்பை ஈடு செய்ய, இந்த அரசு ரூபாய் 220 கோடி விடுவித்துள்ளது. வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்குவதால் ஏற்படும் இழப்பினை ஈடு செய்ய, 2011-2012 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்பு
மேற்பரப்பு நீராதாரத்தில் ஏற்கனவே 95 சதவீதம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நிலத்தடி நீரையும் மேற்பரப்பு நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளைப் பரவலாக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. வாய்ப்புள்ள இடங்களில் சிறு அணைகள் கட்டுதல், தடுப்பணைகள், நீர் சேமிப்பு அமைப்புகளைப் பலப்படுத்துதல் போன்றவற்றால், நிலத்தடி நீராதாரத் தைப் பெருக்குதல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
2011-2012ஆம் ஆண்டில் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு, ரூபாய் 745 கோடி மதிப்பில் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் 104 அணைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதல் ஆண்டில், ஏழு மாவட்டங்களில் உள்ள நீர்வள ஆதாரத் துறையின் 12 அணைகளிலும், மூன்று மாவட்டங்களில் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அணைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்ற நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ள பாதிப்பைத் தடுத்து, கடலில் விரயமாகும் நீரைச் சேமித்துப் பயன்படுத்த, ஏழு சிறப்பு வெள்ள மேலாண்மைத் திட்டங்களை இந்த அரசு ரூபாய் 652 கோடி மதிப்பில் செயல்படுத்தி வருகிறது. இப்பணிகளில் தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில் - கொள்ளிடம் ஆற்றில், வெள்ளத் தடுப்புப் பணிகள், ரூபாய் 376 கோடி செலவிலும், திருவள்ளூர் ஆரணியாற்றின் குறுக்கே ஏ.என்.குப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு வெள்ளத் தடுப்பு பணிகள் ரூபாய் 12 கோடி மதிப்பிலும் தொடங்கப்பட்டுள்ளன.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ளாறு, மணிமுக்தா ஆறு நதிகளில் ரூபாய் 164 கோடி மதிப் பீட்டிலும், பெண்ணையாறு, கெடிலம், உப்பனாறு, பரவனாறு ஆகியவற்றில் ரூபாய் 68 கோடி மதிப் பீட்டிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்த் தலையாறு ஆற்றில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டிலும் வெள்ளத் தடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது தவிர, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூபாய் 1,448 கோடி செலவில், வெள்ளநீர் வடிவதற்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் பாலாறு போன்ற பன்மாநில நதிநீர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தமிழக அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு குழுவை உச்சநீதி மன்றம் அமைத்துள்ளது. இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஏ.ஆர். இலட்சுமணன் அவர்கள் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இக்குழு முல்லைப் பெரியாறு அணை யைக் கடந்த டிசம்பர் மாதம் பார்வையிட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது குறித்து அதிகாரம் பெற்ற குழுவின் முன், விவாதம் நடைபெற உள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் 2006 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அதனை அடுத்து மத்திய நீர்வளக் குழுமம் பாலாறு படுகையில் கிடைக்கும் நீர்வளம் மற்றும் நீர் உபயோகம் பற்றி, ஒரு ஆய்வறிக்கையைத் தயாரித்து இரு மாநில பொறியாளர்களுடனும் விவாதித்து ஒரு சுமுகமான தீர்வுகாண முயன்று வருகிறது.
இந்த அரசு பாலுக்கான கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 10.50 லிருந்து ரூபாய் 16.64 ஆகவும் எருமைப் பாலுக்கு லிட்டருக்கு ரூபாய் 12.50 லிருந்து ரூபாய் 25.20 ஆகவும் 2006-2007லிருந்து படிப்படியாக உயர்த்தி வழங்கியுள்ளது.
கால்நடைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்தாண்டுகளில் 23,683 முகாம்கள் நடத்தப்பட்டு 2.90 கோடி கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கால்நடைகளின் தேவைக்குத் தக்கவாறு தீவன உற்பத்தியை அதிகப்படுத்த தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 20,540 ஏக்கர் தனியார் நிலங்கள் தீவனப் பயிர் சாகுபடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் இத்துறைக்கென ரூபாய் 414 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மீன் வளத் துறை
மீனவர் வாழ்வில் நலம் சேர்க்கும் திட்டங்கள் பலவற்றை இந்த அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. குளச்சல் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ரூபாய் 27 கோடியும், தேங்காய்ப் பட்டினம் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ரூபாய் 40 கோடியும் அனுமதிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 2011-2012 ஆம் ஆண்டுக்கு மீன் வளத் துறைக்கென ரூபாய் 222 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விபத்துக்கள் நிறைந்த நிலையில் தங்கள் வாழ்க்கையினைத் தொடர்ந்து நடத்தித் தீரவேண்டிய கட்டாயத்தில், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைச் சிங்கள ராணுவம் தொடர்ந்து வேட்டையாடும் நிலையினைக் கண்டு, தமிழக அரசின் சார்பாகப் பல முறை கடிதங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் மத்திய அரசுக்குக் கோரிக்கைகளை வைத்து, மத்திய அரசும் நமது வேதனையிலே பங்கு கொண்டு, இலங்கை அரசுக்கு எடுத்துக்கூறிய போதிலும், சிங்களக் கடற்படையினர், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து மனிதாபிமானமற்ற செயலிலே ஈடுபட்டு, நமது மீனவர்களைக் கொன்று வருவதை நிறுத்தியபாடில்லை. இதற்கொரு முற்றுப் புள்ளி வைக்கப்படாமல், தமிழக மீனவர்கள் இனியும் கொல்லப்படும் நிலை வராமல் இருக்க இறுதி முடிவினை மத்திய அரசு எடுத்தே தீர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தி வருகிறோம்.
வனவளம் மற்றும் சுற்றுச்சூழல்
தமிழ்நாடு வனத்துறை ரூபாய் 686 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன் தமிழ்நாடு உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தினை 2011-2012 ஆம் ஆண்டு முதல் 2018-2019 ஆம் ஆண்டு முடிய செயல்படுத்த உள்ளது. இதற்காக 2011-2012 ஆம் ஆண்டில் ரூ.38.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டம்
2006 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே இந்த அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியின் விற்பனை விலையை, கிலோ ரூ.3.50 லிருந்து கிலோ ரூ.2 ஆகக் குறைத்து ஆணையிட்டது. அதன்பின், 2008ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியின் விலையை, மேலும் குறைத்து ஒரு கிலோ ஒரு ரூபாய் என அறிவித்து செயல்படுத்தி வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டைத் தமிழ் மக்கள் சிறப்பாகக் கொண்டாட அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசப் பொங்கல் பை வழங்கப்பட்டது.
2007ஆம் ஆண்டு முதல் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, செறிவூட்டப்பட்ட பாமாயில் போன்ற பொருள்களையும், அதைத் தொடர்ந்து 10 மளிகை பொருட்கள் அடங்கிய பொட்டலத்தையும், மானிய விலையில் வழங்கும் திட்டத்தை இந்த அரசு தொடங்கிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை நியாயவிலைக் கடையில் விற்பனை செய்யப்பட்ட, துவரம் பருப்பின் அளவு 3 இலட்சத்து 32 ஆயிரம் டன், உளுத்தம் பருப்பின் அளவு ஒரு இலட்சத்து 74 ஆயிரம் டன், பாமாயில் அளவு 3 இலட்சத்து 62 ஆயிரம் இலட்சம் கிலோ லிட்டர். இவ்வாறு பொதுவிநியோகத் திட்டம் முறை யாகச் செயல்படுத்தப்படுவதால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத் தில், உணவு மானியத்திற்காக ரூபாய் 4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விலைவாசி
உலக மயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்தபின், உலக அளவில் ஏற்படும் உற்பத்தி மற்றும் பொருட்களின் தேவை நிலவரத்தையொட்டி, இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் விலைவாசியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் விலைவாசி ஏற்றத்திற்கு, வளர்ந்துவரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதும், அதற்கேற்ப உள்நாட்டில் உற்பத்தி கூடுதலாக இல்லை என்பதும், அவ்வப்போது இந்தியாவிலும் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பிறநாடுகளிலும், பருவநிலை மாற்றத் தால் பயிர் இழப்பு ஏற்படுவதால் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்படுவதும், சந்தை கட்டமைப்புகளில் ஒருங்கிணைப்பு இல்லாமையும் போன்ற பல்வேறு காரணங்களால், விலைவாசியில் ஒரு நிலையற்ற போக்கு ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
2007-2008ஆம் ஆண்டில் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தபொழுது, சமையல் எண்ணெய் மற்றும் உணவு தானியங்களின் விலையும் உயர்ந்தது. தமிழக அரசு ஏழை மக்களை இதன் தாக்கத்திலிருந்து காக்க, பாமாயில் இறக்குமதி செய்து குறைந்த விலையில் பொது விநியோகத் திட்டத்தில் விற்பனை செய்தது. 2009ஆம் ஆண்டு உலக அளவில் பயறு வகைகளின் விலையேற்றம் ஏற்பட்ட பொழுது, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை உள்ளூரில் வாங்கியும், இறக்குமதி செய்தும் குறைந்த விலையில் விற்பனை செய்ததுடன், தமிழ்நாட்டில் பயிறு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக 2010-2011 ஆம் ஆண்டில், பயிறு வகைகளின் சாகுபடி பரப்பு 36 சதவீதம் உயர்ந்துள்ளது.
டிசம்பர் 2010 நிலவரப்படி பணவீக்கம் 8.7 சதவீதம் உள்ளது. தற்போதைய உணவுப் பொருட்களின் பண வீக்கம் 17.05 சதவீதமாக உள்ளது. பருவம் தவறி பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர்ச் சேதம், வெங்காயம், காய்கறிகள் போன்ற பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
எனினும், உடனடியாக அரசு தலையிட்டு, கூட்டுறவு அமைப்புகள் மூலம் வெங்காயத்தைப் பிற மாநிலங்களிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து சென்னை மற்றும் பிற நகரங்களில் விற்பனை செய்து வருகிறது. கடந்த 14.01.2011 அன்று மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில், விலைவாசி ஏற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத் திட்டங்களாக, உழவர் சந்தைகளை வலுப்படுத்து தல், நகர்ப்புரங்களில் கூட்டுறவு அமைப்புகள் மூலம், காய்கறியை விற்பனை செய்தல் போன்ற திட்டங்களுடன் நீண்ட காலத் திட்டங்களாக விவசாய உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விலை ஏற்றத்திலிருந்து ஏழை எளிய மக்களைக் காத்திட நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலை கிலோ ஒன்றுக்கு, ரூபாய் 40லிருந்து 30 ஆகவும், பாமாயில் லிட்டர் ரூபாய் 30லிருந்து ரூபாய் 25ஆகவும் மேலும் குறைத்து 1.2.2011 முதல் விற்பனை செய்து வருகிறது.
தமிழ் வளர்ச்சி
தமிழ் அறிஞர்களின் கருத்தின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து, தைத்திங்கள் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துக் கொண்டாடி வருகிறோம். உலகத் தமிழ்ச் செம்மொழி முதல் மாநாடு கோயம்புத்தூரில் 2010 ஜூன் திங்கள் 23 முதல் 27ஆம் நாள் வரை சிறப்பாக நடைபெற்றது.
2010-2011 ஆம் நிதியாண்டில் இதுவரை 28 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு ரூபாய் 194 இலட்சம் பரிவுத் தொகை அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. புலவர் சோ.கோ. சோமசுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் கீழ், திட்டமிடப்பட்ட 31 தொகுதிகளில் இதுவரை 30 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை
2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ரூபாய் 523 கோடி செலவில் ஆலயத் திருப்பணிகளும், கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4,724 திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு, குடமுழுக்குவிழா நடத்தப்பட்டுள்ளது. திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் பழைமையான ஆழித் தேரினைச் சீரமைக்க ரூபாய் 2.6 கோடி அளிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதிதிராவிடர் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 6,000 திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு, ரூபாய் 15 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு ரூபாய் 277 இலட்சம் மதிப்பீட்டில், 10 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 2011-2012 ஆம் ஆண்டில் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் திருக்கோயில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட உள்ளன.
கலை மற்றும் பண்பாடு
சோழ மாமன்னன் இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா 2010 செப்டம்பர் 22ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதிவரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாத்து அந்தக் கலைஞர்களின் வாழ்விற்கு ஒரு புத்துயிர் அளிக்கும் வகையில், 2007 முதல் சென்னை சங்கமம் விழா நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்விழாவில் தமிழ் கிராமிய மற்றும் நடன கலைஞர் களை ஒருங்கிணைத்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு வகையான நாட்டுப்புற மற்றும் கிராமியக் கலைகளும், கலைஞர்களும் நலிவிலிருந்து பாதுகாக் கப்பட்டு, அவர்தம் வாழ்வில் ஒரு புத்துயிர் அளிக்கப் பட்டுள்ளது.
சுற்றுலா
சுற்றுலா வளர்ச்சிக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கி வரும் இந்த அரசு, கடந்த ஐந்தாண்டுகளில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்ற விழாக்களில் விளம்பரக் காட்சி அரங்குகளைத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தியது. அதிகப் பிரபலமாகாத 32 சுற்றுலாத் தலங்கள் கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் ரூபாய் 94 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பட்டாம்பூச்சி பூங்கா ரூபாய் 5 கோடி செலவில் ஏற்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. இந்த அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக, தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2005-2006இல் இந்திய அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 7.7 சதவீதமாக இருந்து 2009-2010இல் 12.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2011-2012 ஆம் ஆண்டு இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூபாய் 61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஐந்தாண்டுகளில் 439 விளையாட்டு வீரர்களுக்கு ரூபாய் 6 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் 125 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக, இந்த அரசு ரூபாய் 8 கோடியை அனுமதித்துள்ளது. வளரும் தலைமுறையின் உடல் நலத்தில் அக்கறை கொண்ட இந்த அரசு அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இதற்கென ரூபாய் 132 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி
அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாகக் கற்பிக்க தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006; பள்ளிக் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டம் 2009; அனைவருக்கும் சமச்சீர் கல்வி வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் 2010 ஆகிய சட்டங்கள் இந்த அரசினால் பெரும் வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வி 2010-2011 ஆம் ஆண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சமச்சீர் கல்விமுறை 2011-2012 ஆம் ஆண்டு முதல், மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
அனைவருக்கும் கல்வி என்னும் இலக்கை எய்திட, மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷ அபியான்) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷ அபியான்) போன்ற கல்வித் திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் களுக்குப் பயிற்சி போன்ற பல்வேறு பணிகள் அனை வருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் செயல்படுத் தப்பட்டுள்ளன.
2009-2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூபாய் 216 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 18 பின்தங்கிய வட்டங்களில் 18 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப் பட்டுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் 569 புதிய தொடக்கப் பள்ளிகள் இந்த அரசினால் தொடங்கப்பட்டுள்ளன.
2,626 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 645 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 570 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 30,068 புதிய வகுப்பறைகளும், நபார்டு திட்டத்தில் 16,980 வகுப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. 2010-2011 ஆண்டில் மட்டும் 259 பள்ளிகளில், ரூபாய் 230 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக் கல்வித் துறையில், இதுவரை 36,979 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தொடக்கக் கல்வித் துறையில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 29,410 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 21,681 ஆசிரியர்களும் ஆகமொத்தம் 51,091 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியமும் வழங்கி பணியமர்த்தப்பட்டுள்ளனர். 26,655 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களின் கல்வி பயிற்றுவிக்கும் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத் திட்டங்களை அமல் படுத்தவும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம், 2008 ஆம் ஆண்டு இந்த அரசால் தொடங்கப் பட்டுச் செயல்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித் துறைக்கு மாநில அரசின் ஒதுக்கீடு கணிசமாக உயர்ந்துள்ளது. 2005-2006 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்விக்கென செய்யப்பட்ட ஒதுக்கீடு ரூபாய் 4,110 கோடியாகும். கடந்த ஐந்தாண்டுகளில் செய்யப்பட்ட ஒதுக்கீடு ரூபாய் 39,405 கோடி. பள்ளிக் கல்வித் துறைக்காக இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 12,674 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வி
ஏழை எளிய மாணவர்களும் உயர் கல்வியைத் தடையின்றிப் பெறச் செய்யும் நோக்குடன் 2007-2008 ஆம் ஆண்டு முதல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் 14 இலட்சத்து 59 ஆயிரத்து 990 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். 2008-2009 ஆண்டு முதல் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் 63,192 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, 2010-2011 ஆம் ஆண்டிலிருந்து, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு 12,784 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒரு முக்கிய திட்டமாக, அரசு மற்றும் தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒற்றைச் சாளர முறையில் ஒதுக்கீடு பெற்று, தொழிற்கல்வி பயிலும் பட்டதாரியல்லாத குடும்பங்களைச் சார்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு எந்த வகுப்புப் பாகுபாடும் கருதாது, வருமான வரம்பும் இன்றித் தொழிற்கல்வி பயில செலுத்தும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற ஆணையின் பயனாக இந்த ஆண்டு 78,904 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு உதவும் இத்திட்டத்திற்காக, இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் கல்லூரிகளில் 2,594 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூபாய் 64.58 கோடி செலவில், 1,142 வகுப்பறைகள், பல்வேறு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ரூபாய் 93 கோடி செலவில் நிரந்தரக் கட்டடங்கள் எனப் பல்வேறு வசதிகள், உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகளின் காரணமாக 2005-2006 ஆம் ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2,82,802 லிருந்து 2010-2011 ஆம் ஆண்டில் 6,09,421 ஆக உயர்ந்துள்ளது. இந்த அரசு உயர் கல்விக்கெனக் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 6,414 கோடி செலவிட்டுள்ளது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 2,135 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
நூலகங்கள்
புத்தகம் மற்றும் ஏடுகள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்திட கிராமம் தோறும் நூலகம் அமைப்பதைக் கொள்கையாகக் கொண்டு இந்த அரசு செயல்பட்டு, 2006-2007 முதல் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலமாக, இதுவரை ரூபாய் 314 கோடி செலவில் 12,618 கிராம ஊராட்சிகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் மிக்க அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சென்னை - கோட்டூர்புரத்தில் 3.75 இலட்சம் சதுர அடியில் ரூபாய் 179 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு அமைத்துள்ளது. அன்றாடம் நூலகம் வந்து வாசிப்பவர்களுக்கும், ஆராய்ச்சி வல்லுநர்களுக்கும் ஏற்ற 12 இலட்சம் நூல்களுடன் மின் புத்தகங்கள் மற்றும் மின் இதழ்களுடன் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் நடைபெற்று வந்த கூடத்தில் பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தை இந்த அரசு நிறுவியுள்ளது.
மக்கள் நல்வாழ்வு
பொதுமக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை நல்கிட, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த அலுவலர் பணியிடங்களை நிரப்பவும் சீரிய முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 6,978 மருத்துவர்கள், 7,242 செவிலியர்கள், 1,710 கிராமச் சுகாதார செவிலியர்கள், 659 மருந்தாளுநர்கள், 592 ஆய்வக தொழில் நுட்பனர்கள் இந்த அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசின் சிறப்புத் திட்டமான, உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், இதுவரை 2 இலட்சத்து 70 ஆயிரத்து 265 பயனாளிகள் ரூபாய் 702 கோடி செலவில் சிகிச்சையைப் பெற்றுள்ளனர். கிராமப்புரங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெற, கலைஞர் கண்ணொளி காக்கும் திட்டம், பள்ளிச் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம், 3 முதல் 8ஆம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு பற்கள் நலப் பாதுகாப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காகச் சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கிவரும் இருதய சிகிச்சைப் பிரிவை, நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறப்பு மையமாக ரூபாய் 25 கோடியில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலக வங்கி உதவியுடன் ரூபாய் 628 கோடி மதிப்பீட்டில் 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப் படும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் மூலம் வட்ட மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2013 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமப்புரங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதியுதவியுடன் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 168 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
127 ஆரம்ப சுகாதார நிலையங்களின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் 30 படுக்கைகள் கொண்ட நிலையங்களாக அவைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 2010-2011இல் மேலும் 26 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பங்கேற்புடன் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்ட, 108 அவசரகால மருத்துவ ஊர்தி இலவசச் சேவைத் திட்டம் 385 ஊராட்சி ஒன்றியங் களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு கூடு தலாக 200 ஊர்திகள் வாங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இந்த ஊர்திச் சேவையில் இதுவரை 8 இலட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயனடைந்துள்ளனர். 42 ஆயிரத்து 232 நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த அரசால் செயல்படுத்தப்படும் வருமுன் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 18 ஆயிரத்து 742 முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடியே 77 இலட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் பயனடைந்துள்ளனர்.
தொற்றுநோய் அல்லாத நோய்களான இதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உடற்பரிசோதனை செய்யும் நலமான தமிழகம் திட்டம் 26.11.2010 அன்று இந்த அரசால் தொடங்கப்பட்டுள்ளது. ரூபாய் 8 கோடி செலவில் 89 புதிய ஊர்திகளை வாங்கி, ஏற்கனவே உள்ள அமரர் ஊர்திகளையும் பயன்படுத்தி இலவச அமரர் ஊர்தி சேவைத் திட்டம் இந்த அரசால் தொடங்கப்பட உள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென இந்த அரசு செய்துவரும் நிதி ஒதுக்கீடு கடந்த சில ஆண்டுகளாகக் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2005-2006ஆம் ஆண்டில் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 1,733 கோடி. கடந்த ஐந்தாண்டுகளாக இந்த அரசு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்த ரூபாய் 15,592 கோடி. 2011-2012 ஆம் ஆண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென அரசு ஒதுக்கியுள்ள நிதி ரூபாய் 4,554 கோடியாகும்.
தொழில் வளர்ச்சி
தமிழ்நாட்டில் 2006-2007 ஆம் ஆண்டு முதல் 2009-2010 ஆம் ஆண்டு வரை தொழில் துறையில், உற்பத்தித் துறையின் வளர்ச்சி மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 8.4 சதவீதமாக இருந்து வந்துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உற்பத்தித் துறையின் வளர்ச்சி 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளின் வளர்ச்சி, தமிழகத்தில் மிகச் சிறப்பாக உள்ளது.
முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து பின்பற்றிவரும் முற்போக்கு தொழில் வளர்ச்சிக் கொள்கையின் காரணமாகப் பல முன்னணித் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ரூபாய் 52,195 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளன என்பதைப் பெருமிதத்துடன் இம்மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் வளர்ச்சிக்கு இந்த அரசு கடந்த ஐந்தாண்டுகளாக வழங்கி உள்ள வரிச்சலுகை, ரூபாய் 1,377 கோடி. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான வரிச் சலுகையாக ரூபாய் 1,525 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் தொழில் பூங்காக்களையும், சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. தூத்துக்குடியில் 1,034 ஹெக்டேரிலும், செய்யாறில் 931 ஹெக்டேரிலும், திருபெரும்புதூர் அருகே வடகாலில் 720 ஹெக்டேரிலும், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 598 ஹெக்டேரிலும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 291 ஹெக்டேரிலும் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருப்பெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெற கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த மேம்பாட்டாளர் என்ற விருதினை, திருப்பெரும்புதூரில் உள்ள உயர் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக சிப்காட் நிறுவனம் பெற்றுள்ளது. மத்திய அரசு, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்துடன் இணைந்து தானியங்கி உற்பத்தி, சோதனை, ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு மையத்தை சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் 304 ஏக்கரில் அமைத்து வருகிறது.
ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ், குமாரபாளையம், மதுரை, கரூர், கடலூர் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில், உயர் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிகள் ரூபாய் 814.50 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் ஒப்புதலுடன் தொடங்கப்பட்டுள்ளன. குமாரபாளையம் மற்றும் மதுரை ஜவுளிப் பூங்காக்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2010-2011 ஆண்டில், தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தி 15.79 லட்சம் டன்னாக இருக்கும். பல ஆண்டுகளாக மூடிக்கிடந்த மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்த அரசின் முயற்சியால் புத்துயிர் ஊட்டப்பட்டு, மார்ச் 2011இல் சோதனை அரைவையைத் தொடங்க உள்ளது. சிறுதொழில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான புதிய கொள்கை 2008 ஆம் ஆண்டு இந்த அரசால் வெளியிடப்பட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலீட்டு மானியம், குறைந்த அழுத்த மின் மானியம், மதிப்புக்கூட்டு வரி மானியம் ஆகியவை மூலம், 1,590 நிறுவனங்களுக்கு ரூபாய் 78 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பம்
டெல் கம்ப்யூட்டர்ஸ், நோக்கியா-சீமன்ஸ், சாம்சங், மோசர் பேயர் போன்ற பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி உள்ளதால், கணினி மற்றும் மின்னணு வன்பொருள் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அதுபோல், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மென்பொருள் உற்பத்தியில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. தகவல் தொழில்நுட்ப முதலீடு மற்றும் உற்பத்தியில், இந்திய அளவில் 11 சதவீத பங்கினைத் தற்போது தமிழ்நாடு பெற்றுள்ளது.
2013ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப உற்பத்தியில் 25 சதவீத பங்கினை எட்டும் நோக்குடன் பல்வேறு செயல் திட்டங்களை இந்த அரசு வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக 2005-2006 ஆம் ஆண்டில் ரூபாய் 13,586 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 20092010 ஆம் ஆண்டில் ரூபாய் 36,766 கோடியை எட்டியுள்ளது.
சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில், உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்காக ரூபாய் 338 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 17 லட்சம் சதுர அடிப்பரப்பளவில் கோவை டைடல் பூங்காவும், 50 ஆயிரம் சதுர அடிப்பரப்பளவில் திருச்சி தொழில்நுட்பப் பூங்காவும் செயல்படத் தொடங்கியுள்ளன. மதுரை மற்றும் திருநெல்வேலி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
வேலைவாய்ப்பு
போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, அத்தகைய வேலைகளுக்குரிய தகுதிகளை இளைஞர்களிடம் வளர்த்தெடுத்தால் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த வாய்ப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் தொழில் வளர்ச்சியின் காரணமாக உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறைகளில் கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பைப் பெறத்தக்க வகையில் பல்வேறு திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டங்களைப் பல்வேறு துறைகள் மூலமாக அரசு நடத்தி வருகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுதொழில் துறை போன்ற பல்வேறு துறைகள் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில், திறன் வளர் பயிற்சிக்காக ரூபாய் 153 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2011-2012 ஆம் ஆண்டு இத்தகைய பயிற்சிகளை வழங்க பல்வேறு துறைகளுக்கும் ரூபாய் 77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன் தனியார் துறையின் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்படும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அரசு அறிவித்து முதல் கட்டமாக பத்து மாவட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 26 ஆயிரத்து 557 பேர் பயிற்சி மற்றும் பணி நியமனத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டந்தோறும் இத்தகைய முகாம்கள் நடத்தி இந்த ஆண்டின் இலக்கை எய்துவதுடன், இத்திட்டத்தை மாநிலத் திறன் வளர்ப்பு இயக்கமாகக் காலப்போக்கில் நடத்த இதற்கெனத் தனியே ஒரு திறன் வளர்ப்புச் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்
நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள 61,674 கிலோ மீட்டர் சாலைகளில், கடந்த 2006 முதல் 2010 வரை ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் மட்டும் 4,945 கிலோமீட்டர் ஒருவழித்தடச் சாலைகள் இடைவெளி தடங்களாகவும், 2,611 கிலோமீட்டர் ஒருவழித்தடச் சாலைகள் இருவழித் தடங்களாகவும், 168 கிலோமீட்டர் நீள இருவழித்தடச் சாலைகள் பலவழித் தடங்களாகவும் ஆக்கப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைகளில் அகலப்படுத்த இயலாத 32 கிலோமீட்டர் தவிர, ஒருவழித்தடச் சாலைகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர, 11,219 கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2011-2012ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1,450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் புறவழிச் சாலை அமைக்கும் பணியின் கீழ் 64 புறவழிச் சாலைகள் அமைக்க அரசு முடிவெடுத்து 7 புறவழிச் சாலைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 19 நகரங்களில் புறவழிச் சாலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நபார்டு வங்கியின் உதவியுடன் நடைபெறும் ஊரகச் சாலை மேம்பாட்டுப் பணிகளின் கீழ் 2006-2007ஆம் ஆண்டு முதல் 2009-2010ஆம் ஆண்டு வரை ரூபாய் 574 கோடி செலவில், 5,403 கிலோமீட்டர் சாலைகளும், ரூபாய் 265 கோடி செலவில் 392 பாலங்களும் அமைக்கப் பட்டுள்ளன.
2010-2011ஆம் ஆண்டில் ரூபாய் 143.68 கோடி செலவில் 280 கிலோமீட்டர் சாலைப் பணிகளும் ரூபாய் 124 கோடி செலவில் 56 பாலப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நாகப்பட்டி னம் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ள காவிரி; கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை; தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி ஆகியவை உட்பட மொத்தம் 22 சிறுதுறைமுகங்கள் உள்ளன. காட்டுப் பள்ளி சிறு துறைமுகம் ரூபாய் 3,375 கோடி முதலீட்டில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தால் மேம்படுத்தப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சிறு துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டதன் பலனாக, இவற்றின் மூலம் 2009-2010ஆம் ஆண்டில் 11.74 இலட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டில் கையாளப்பட்ட 8.98 இலட்சம் டன் சரக்குகளைவிட 31 விழுக்காடு அதிகமாகும்.
நெடுஞ்சாலைத் துறைக்கென 2005-2006 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 2,381 கோடி. இந்த அரசு பொறுப்பேற்றபின் கடந்த ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 17,627 கோடி. நெடுஞ்சாலைப் பணிகளுக்கென ரூபாய் 5,143 கோடி இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக 2005-2006ஆம் ஆண்டில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை 16,982. 2010ஆம் ஆண்டின் இறுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் பேருந்து களின் எண்ணிக்கை 20,840 ஆக உயர்ந்துள்ளது. தனியார் போக்குவரத்துக் கழகங்கள் இயக்க முன்வராத பல வழித்தடங்களிலும் பொதுமக்களின் நலன் கருதி, அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குவதால் 2005-2006ஆம் ஆண்டில் 24,071 லட்சம் கிலோ மீட்டராக இருந்த அதன் இயக்க தூரம் 2010 மார்ச் இறுதியில் 31,099 இலட்சம் கிலோமீட்டராக உயர்ந் துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பலமுறை டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும், போக்குவரத்துக் கட்டணத்தை இந்த அரசு பொதுமக்களின் நலன் கருதி உயர்த்தவில்லை. பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு கடந்த ஐந்தாண்டுகளில் 4 மண்டல அலுவலகங்களும் 17 வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் புதிதாக 35,804 ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றுள் சென்னை பெருநகர பகுதியில் இயங்கும் 16,380 ஆட்டோ ரிக்ஷாக்கள் திரவ எரிவாயுவில் இயங்குகின்றன. சென்னை மெட்ரோ ரெயில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான மொத்த மதிப் பீடான ரூபாய் 14,600 கோடியில் இதுவரை ரூபாய் 1,452 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பணிகள் திட்டமிட்ட படி விரைவாக நடைபெற்று வருகின்றன. 20112012ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்கென ரூபாய் 750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம்
தமிழ்நாட்டில் பெருகிவரும் மின்சாரத் தேவையை கருத்தில் கொண்டு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நீண்டகாலத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், தற்போதைய மின் பற்றாக்குறையை ஈடுசெய்ய, அவ்வப்போது வெளிச் சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்து விநியோ கிக்கப்பட்டு வருகிறது.
மின் பற்றாக்குறையினால் தொழில் வளர்ச்சி பாதிக்காமல் இருக்க, தொழிற் சாலைகளுக்கான மின் தட்டுப்பாடு நீக்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து மின்சாரம் பெறுவதற்குத் தேவை யான கூடுதல் மின்சாரத்தை வெளிச்சந்தையில் பெற்று தொழிற்சாலைகளுக்கு வழங்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு, நாள் ஒன்றுக்குச் சுமார் 600 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக வாங்கிப் பயன்படுத்தப் படுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் என மூன்று கழகங்களாக 2010 நவம்பர் முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. விரைவுபடுத்தப்பட்ட மின்சக்தி வளர்ச்சிச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ், அடிப்படை மின் கட்டமைப்புத் தகவல் அமைப்பை நிறுவுவது, மின்சாரக் கணக்கீடு, தணிக்கை மற்றும் மின் நுகர்வோர் சேவையை மேம்படுத்தி, கணினி மயமாக்குவது, மின் தொடரமைப்பு மற்றும் பகிர்மானக் கட்டமைப்புகளை வலுவூட்டுதல், போன்ற பணிகளை நிறைவேற்ற திட்டமிடப் பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூபாய் 3,847 கோடி ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள 110 நகரங்களிலும், 2013ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு, மின்இழப்பை 15 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
வீட்டு வசதி
மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டமான குடிசைகளற்ற கிராமங்களை உருவாக்கச் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு 2011-2012 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 2,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள சுமார் இரண்டரை இலட்சம் குடிசைகளையும், கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தினைச் செயல்படுத்த 2011-2012 ஆம் ஆண்டு இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 375 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிசைகளற்ற கிராமங்களை உருவாக்குவதுபோல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளையும் குடிசைப் பகுதிகளற்ற நகரங்களாக மாற்ற கலைஞர் தலைமை யிலான இந்த அரசால் முடிவு செய்யப்பட்டு அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் ரூபாய் 2,846 கோடி செலவில், 78,249 குடியிருப்புகள் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 856 கோடி செலவில் 24,571 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு 15,996 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும், நகர்ப்புர ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளுக்கான திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வீட்டு வசதித் திட்டம் ஆகிய துணைத் திட்டங்களில், கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 2,843 கோடி மதிப்பீட்டில், 1,28,906 அலகுகள் கொண்ட குடியிருப்புகள் கட்டவும், குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரங்களில் குடிசைப்பகுதி மேம்பாட்டிற்காக, பதின்மூன்றாவது நிதிக்குழு ஒதுக்கியுள்ள ரூபாய் 300 கோடியிலிருந்து, 2011-2012 ஆம் ஆண்டில் தொடங்கி, 8,462 அலகுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், பழுதடைந்த குடியிருப்பு களை அகற்றி அவ்விடத்தில் 435 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளும் செயல்படுத்தப்படும்.
ஊரக வளர்ச்சி
உள்ளாட்சிகளின் நிதிநிலையினை மேம்படுத்துவ தற்காக இந்த அரசு, மாநிலத்தின் சொந்த வருவாய் ஆதாரத்திலிருந்து, 2005-2006 ஆம் நிதியாண்டில் வழங்கப் பட்ட 8 சதவீத மாநில நிதிப் பகிர்வு வருவாயினைப் படிப்படியாக உயர்த்தி, 2010-2011 ஆம் நிதியாண்டில் 10 சதவீதமாக வழங்கியுள்ளது. இதன்மூலம் 2006-2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு ரூபாய் 7,788 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் இதற்கென ரூபாய் 2,079 கோடி நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்துக் கிராமங்களிலும் அடிப்படை வசதி களை மேம்படுத்த அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2006-2007 முதல் ரூபாய் 2,549 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் இந்த ஐந்தாண்டுகளில் இதுவரை, ரூபாய் 5,237 கோடி செலவில் 66.48 கோடி மனித நாட்களுக்கான வேலைவாய்ப்பு இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலைநாட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை, இந்த அரசு அமைத்து வருகிறது. 2008-2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை 95 சமத்துவபுரங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 411 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2001-2002 முதல் 2005-2006 ஆம் ஆண்டு வரை ஊரக வளர்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை ரூபாய் 10,139 கோடி. ஆனால் 2006-2007 முதல் இந்த ஐந்தாண்டுகளில் இந்த அரசு ஒதுக்கீடு செய்த தொகை ரூபாய் 27,353 கோடி. 2011-2012 ஆம் ஆண்டிற்கு ஊரக வளர்ச்சிக்கென ரூபாய் 8,812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்கல்
இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட் டங்களில் வாழும் 15.75 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், ரூபாய் 616 கோடி செலவில் நிறைவேற்றப் பட்ட இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முழுமைக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூபாய் 1,929 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவை இந்த அரசின் தலையாய சாதனைகளாகும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத் திற்காக, இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆட்சிக் காலத்தில் மட்டும் தனி மின்விசை குடிநீர்த் திட்டம் மூலமாக 34,212 ஊரகக் குடியிருப்புகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 16 நகராட்சிகள், 85 பேரூராட்சிகள் மற்றும் 13,030 ஊரகக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், ரூபாய் 1,727 கோடி மதிப்பீட்டில் 199 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களும் செயல்படுத்தப் பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் மதுரை, கோயம்புத்தூர், விருதுநகர், நாகப்பட்டினம், வேலூர், சேலம் மாவட்டங்களில் வாழும் சுமார் 73.28 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 3,277 கோடி மதிப்பீட்டிலான 8 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தேவைத் திட்டத்தில் தற்போது ரூபாய் 454 கோடியாக உள்ள நிதி ஒதுக்கீடு, இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 845 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிருவாகம்
கடந்த அய்ந்தாண்டுகளில் மாநில நிதிக்குழு பகிர்வு அடிப்படையில் ரூபாய் 6,822 கோடி நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 2,198 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 420 பேரூராட்சிகளில், ரூபாய் 236 கோடி அளவில் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் எஞ்சிய 139 பேரூராட்சிகளிலும், ரூபாய் 88 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக தமிழகத்திலுள்ள அனைத்துப் பேரூராட்சிகளுக்கும் சமுதாயக்கூடங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல் நீர்நிலைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் கீழ், சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநக ராட்சிகள், அதைச் சுற்றியுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல், மழைநீர் வடிகால் வசதி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் வீட்டுவசதி போன்ற திட்டங்களுக்கு 2012 ஆம் ஆண்டு வரை, ரூபாய் 2,952 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்ஐஐஐன் கீழ், ரூபாய் 1,414 கோடி அளவிற்கு 84 நகராட்சிகளில் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சமூகப் பாதுகாப்பு
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாநில முதியோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் 9,98,187 நபர்கள், 93,470 ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள், 1,13,945 ஆதரவற்ற பெண்கள், 3,70,425 ஆதரவற்ற விதவைகள், 3,00,007 ஆதரவற்ற விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த தலா 400 ரூபாய் உதவித் தொகை 1.12.2010 முதல் 500 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 50 வயதைக் கடந்தும் திருமண மாகாத, உழைக்க முடியாத 14,270 பெண்களுக்கும் மாதம் ரூபாய் 500 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆட்சிக் காலத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கென இதுவரை ரூபாய் 4,251 கோடி செலவிடப்பட்டுள்ளது. 20102011 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு, ரூபாய் 1,002 கோடி அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் முன் எப்போதுமில்லாத அளவாக ரூபாய் 1,421 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலன்
ஆதிதிராவிட வகுப்பினர் ஏனைய சமுதாயங்களைச் சார்ந்த மக்களுக்கு இணையாக முன்னேற்றம் அடைந்திட பட்டியல் வகுப்பினருக்கான துணைத் திட்டம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆதிதிரா விட மக்கள் தொகையின் விகிதாச்சாரத்திற்கேற்ப, 20102011 வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 3,828 கோடி தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங் களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும், கண்காணிப் பதற்கும் தலைமைச் செயலாளர் தலைமையில், மாநில அளவிலான ஒரு கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.
தமிழகச் சட்டப் பேரவையில் இந்த ஆண்டு ஆளுநர் உரையில், பஞ்சமி நிலங்களை, பஞ்சமர்களுக்கே திரும்ப ஒப்படைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்படுமென அறிவித்ததை ஒட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.மு. மருதமுத்து அவர்கள் தலைமையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திரு.ஐ.வி.மணிவண்ணன், திரு.வி.கருப்பன், நிலநிர்வாக ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்றை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
ஆதிதிராவிட வகுப்பினரில் தொழில் முனை வோருக்கு உதவும் வகையில் தாட்கோ மூலம், 1980 முதல் வழங்கப்பட்டு நிலுவையிலிருந்த, பண்ணை சாரா தொழில் கடனை இவ்வரசு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் 53,524 நபர்களுக்கு ரூபாய் 83 கோடி, அசல் மற்றும் வட்டித் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளது. ஆதிதிராவிட வகுப்பினர் குடியிருப்புகளை இணைக் கும் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2006-2007 முதல் 2,911 கிலோமீட்டர் சாலைகள் ரூபாய் 412 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 44,518 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பல்வேறு திட்டங்களின் கீழ் ஆதிதிராவிட வகுப்பினருக்குச் செலவிடப்பட்ட மொத்த தொகை ரூபாய் 2,102 கோடி என்பதற்கு மாறாக 2006-2007 முதல் இந்த ஐந்தாண்டு காலத்தில் செலவிடப்பட்ட தொகை ரூபாய் 12,400 கோடி.
பழங்குடியினர் நலன்
பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் 16 மாவட் டங்களில், இம்மக்களின் சமூகப் பொருளாதார நிலை யினை உயர்த்துவதற்காக, பல சிறப்புத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பட்டியல் வகுப்பினருக்குச் செயல்படுத்தப்படும் சிறப்புக் கூறுகள் துணைத் திட்டத்தைப் போல பழங்குடியினர் நலனுக்காகப் பழங்குடியினர் துணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் உள்ள பழங்குடியினருக்கு 20102011 ஆம் ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில் ரூபாய் 217 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 242 கோடி பழங்குடியினர் நலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவியர், எவ்விதப் பொருளாதார சிரமமும் இன்றித் தங்கள் கல்வியைத் தொடர ஏதுவாக இலவச உண்டு, உறைவிட வசதியுடன் கூடிய 1,238 நல விடுதிகள் மூலம் இந்த ஆண்டு 74,302 மாணவ மாணவியர் பயனடைந்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் ரூபாய் 14 கோடி செலவில் 25 விடுதி களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வரு கின்றன. 2006-2007 ஆண்டு முதல், இதுவரை ரூபாய் 71.59 கோடி செலவில் 125 விடுதிகள் கட்ட அனுமதிக்கப் பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலன்
சிறுபான்மையினரின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு நலத்திட்டங்கள் செம்மையாகச் சென்றடைவதை உறுதி செய்யவும், இந்த அரசால் 2007 ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் தொடங்கிச் செயல்படுத்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோரின் 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கென தனியே 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 15.9.2007 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, பௌத்த மற்றும் பார்சி இனங்களைச் சார்ந்த மாணவ மாணவியருக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளின் நிதியுதவியுடன் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் ரூபாய் 32 கோடி செலவில், 1,71,643 மாணவ மாணவியர் கல்வி உதவித் தொகை பெற்றுள்ளனர். வரும் நிதியாண்டிலும் இந்த கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்குவதற்காக இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 40 கோடியே 68 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலன்
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை வழங்கிய போது மாற்றுத் திறனாளிகளுக்கெனத் தனித்துறை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவீர்கள். இந்த அறிவிப்பின்படி, சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறையிலிருந்து பிரித்து, மாற்றுத் திறனாளி கள் நலத் துறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 20112012 ஆம் ஆண்டிற்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூபாய் 221 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நெசவாளர் நலன்
கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், இவ்வரசால் 2006ல் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத் தின் கீழ் 1.56 இலட்சம் கைத்தறி நெசவாளர் குடும்பங் களுக்கு தலா 100 யூனிட் வரையிலும், 1.17 இலட்சம் விசைத்தறி நெசவாளர் தொழிற் கூடங்களுக்கு தலா 500 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்காக இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி ஆடைகள் விற்பனையை ஊக்குவித்திட ஆண்டு முழுவதும் 20 சதவீதம் தள்ளுபடியும், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 15 முதல் ஜனவரி 31ம் தேதி வரை 30 சதவீதம் தள்ளுபடியும் அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், 2006-2007 முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரை ரூபாய் 719 கோடி அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக் கால வரவுசெலவுத் திட்டத்தில் விற்பனை மானியமாக ரூபாய் 156 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வோதயா சங்கங்களுக்கு கதர் துணிகளின் விற்பனைக்காக அரசு அளித்துவரும் தள்ளுபடி மானியத்தின் உச்ச வரம்பு ரூபாய் 5 கோடியிலிருந்து ரூபாய் 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் நலன்
பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூபாய் 4,000லிருந்து ரூபாய் 5,000ஆக உயர்த்தியும் அவர்களின் குடும்ப ஓய்வூதியத்தை ரூபாய் 2,000லிருந்து ரூபாய் 2,500ஆக உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. இந்த அரசால் பத்திரிகையாளர் நல நிதியத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியதாரர் நலன்
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, திருத்திய ஊதிய விகிதங்களை இந்த அரசு செயல்படுத்தி யுள்ளது. மேலும், ஒருநபர் குழுவின் பரிந்துரைகளையும் ஏற்று சம்பள முரண்பாடுகள் களையப்பட்டுள்ளன. 80 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிதாரர்களுக்கு, அவர்களின் வயதிற்கு ஏற்ப மத்திய அரசில் உள்ளதைப் போல் அடிப்படை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த நிதிநிலை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 20112012 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டம் இம்மாமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய் வரவு ரூபாய் 79,413 கோடி என்றும் மொத்த வருவாய் செலவு ரூபாய் 78,974 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக 20112012 ஆம் நிதியாண்டின் இறுதியில் வருவாய்ப் பற்றாக்குறை நீங்கி ரூபாய் 439 கோடி அளவிற்கு வருவாய் உபரி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவது ஊதியக் குழுவின் இறுதித் தவணையினை 20112012 ஆம் ஆண்டில் வழங்கவேண்டியுள்ளதால் கூடுதல் வருவாய் உபரி ஏற்பட வாய்ப்பில்லை. 20112012 ஆம் ஆண்டில் தற்போதைய கணிப்பின்படி நிதிப் பற்றாக்குறை ரூபாய் 13,507 கோடி இருக்கும்.
இந்த நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.32 சதவீதம் மட்டுமே இருக்கும். இது பதின்மூன்றாவது நிதிக் குழு வரையறுத்துள்ள அளவான 3 சதவீதத்தை விடக் குறைவானதாக இருக்கும். நிதிப் பற்றாக்குறை குறித்து பதின்மூன்றாவது நிதிக் குழு அறிவித்துள்ள அனைத்து இலக்குகளுக்கும் உட்பட்டதாக இந்த நிதிநிலை குறியீட்டு அளவுகள் இருக்கும் என்பதை மாண்புமிகு உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்ட உரையின் இணைப்பில், இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டத்தின் விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் படிக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
கடந்த ஐந்தாண்டுகளும் இவ்வரசின் அனைத்து வரவு-செலவுத் திட்டங்களைத் தயாரிப்பதிலும் உரிய வழி காட்டுதல்களை நல்கி, ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சமுதாய நலன் பெருக்கும் நிதிநிலை அறிக்கையை உருவாக்கிடச் செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில் பெரிதும் உதவிய நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. க. சண்முகம் இ.ஆ.ப., அவர்களுக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய துறை சார்ந்த அலுவலர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
இத்துடன், 2011-2012 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிற்குச் சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று நிதி அமைச்சர் இடைக்கால நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையை நிறைவு செய்தார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உறுதியான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் காரணமாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளது.
நிலையான விலை விகிதத்தின் அடிப்படையில், 2006-2007 ஆம் ஆண்டில் விவசாயத் துறையின் வளர்ச்சி 12.64 சதவீதமாகவும், தொழில் துறையின் வளர்ச்சி 12.91 சதவீதமாகவும், சேவைத் துறையின் வளர்ச்சி 16.33 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 14.85 சதவீதமாகவும் இருந்தது.
2007-2008 மற்றும் 2008-2009 ஆம் ஆண்டுகளில் புயல் வெள்ளம் காரணமாக விவசாயத் துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையின் காரணமாகத் தொழில் மற்றும் சேவைத் துறை ஆகியவற்றின் வளர்ச்சியும் வெகுவாகக் குறைந்தது.
பொருளாதார நிலை சீரடைந்ததன் காரணமாக 2009-2010 ஆம் ஆண்டு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.96 சதவீதமாக உயர்ந்தது. 2010-2011 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பயனாக 2005-2006 ஆம் ஆண்டில் 39 ஆயிரத்து 692 ரூபாயாக இருந்த தனி நபர் வருமானம் 2009-2010 ஆம் ஆண்டில் 69 ஆயிரத்து 377 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த அரசு ஏழைகளுக்கு உதவிடும் வகையில் செயல்படுத்திவரும் எண்ணற்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயனாக, இந்தப் பொருளாதார வளர்ச்சியின் விளைவு பரவலாக, பலதரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள 54,439 ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி மையங்கள் மூலம், 24.54 இலட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். இம்மையங் களின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த இந்த ஆட்சிக் காலத்தில் ரூபாய் 231 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் பயனாக, குழந்தைகளின் உணவில் ஊட்டச்சத்து நிலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. 2006ல் 61.64 சதவீதமாக இருந்த ஆரோக்கியமான குழந்தைகளின் எண்ணிக்கை, தற்போது 64.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வந்தது, தற்போது அய்ந்து முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. வளரிளம் பெண்களுக்கு ஊட்டச் சத்து வழங்கும் திட்டத்தின் மூலம், ஐந்து ஆண்டுகளில் 2,89,153 பெண்கள் பயனடைந்துள்ளனர்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூபாய் 10,000 ஆக வழங்கப்பட்ட உதவித் தொகை ரூபாய் 25,000 ஆக உயர்த்தப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 922 கோடியில் 4.71 இலட்சம் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், இந்தத் திருமண உதவித் திட்டங்களுக்கு ரூபாய் 337 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, இலவச சத்துணவு வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழ்நாட்டில் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை இத்திட்டத்தில் 21 லட்சத்து 96 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் மையங்களில் 5 இலட்சத்து 38 ஆயிரம் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குக் கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உணவு உட்கொள்ளவும், கருவுற்றிருக்கும் காலத்தில் பணிக்குச் செல்லாமையினால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்டவும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூபாய் 6,000 வழங்கப்படுகிறது.
இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, மத்திய அரசின் முடிவுகளுக்கேற்ப மற்ற மாநிலங்களைப் பின்பற்றி, பொது விற்பனை வரிக்கு பதிலாக மதிப்புக் கூட்டு வரியை ஜனவரி 2007 முதல் அமல்படுத்தியது. இதனால் ஏற்பட்ட வரியிழப்பை ஈடுசெய்ய, 2006-2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூபாய் 3,040 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது. மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வரியினை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைத்ததால் ஏற்பட்ட வரியிழப்பை ஈடுசெய்ய, மத்திய அரசு இதுவரை ரூபாய் 2,456 கோடி அளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் விற்பனை வரிகள் மூலம் ரூபாய் 30,371 கோடி வருவாய் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டிற்கு இந்த வருவாய் ரூபாய் 33,394 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டிற்கு மாநில ஆயத்தீர்வை வருவாய் ரூபாய் 8,935 கோடியாகவும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் வருவாய் ரூபாய் 5,856 கோடியாகவும், வாகனங்களின் மீதான வரி வருவாய் ரூபாய் 3,033 கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
2011-2012 ஆம் ஆண்டிற்கு மேற்கண்ட வரிகளை உள்ளடக்கிய, மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூபாய் 53,783 கோடியாகவும், வரி அல்லாத வருவாய் ரூபாய் 4,811 கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வரிப் பகிர்வு நிதி ரூபாய் 13,375 கோடியாகவும், உதவி மானியங்கள் ரூபாய் 7,445 கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment