தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. மீது திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேப்பர் மில் அபகரிப்பு புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கடந்த 29 ந்தேதி ஜெ.அன்பழகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைந்தனர்.
அவர் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து ஜெ.அன்பழகன் 09.08.2011 அன்று கோவை ஜெயிலில் இருந்து புழல் சிறைக்கு போலீஸ் வேனில் அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார். 10.08.2011 அன்று காலை அவரை புழல் சிறையில் இருந்து போலீஸ் வேனில் ஏற்றி சட்டசபைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு பாதுகாப்பாக 10 போலீசார் வந்தனர்.
சட்டசபை வளாகத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அறைக்கு சென்றார். அங்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.வ.வேலு, டி.ஆர்.பி. ராஜா மற்றும் கட்சி பிரமுகர்கள் இருந்தனர். அவர்கள் ஜெ.அன்பழகனை வரவேற்றனர்.
சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்த பின்பு சட்டசபை லாபிக்கு சென்று வருகை பதிவேட்டில் ஜெ.அன்பழகன் கையெழுத்திட்டார். அவருடன் ஏ.வ. வேலு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோரும் சென்று கையெழுத்திட்டனர். அதன் பிறகு மீண்டும் வந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அறையில் ஜெ.அன்பழகன் அமர்ந்திருந்தார். அவருடன் ரிவால்வருடன் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் உளவு பிரிவு போலீசாரும் கூடவே இருந்தனர்.
சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரே இடத்தில் இடம் ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. சட்டசபை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. இன்று 3 வது நாளாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. இதனால் ஜெ.அன்பழகனும் சபை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எம்.எல்.ஏ.க்கள் அறையில் இருந்தார்.
சட்டசபை லாபியில் கையெழுத்து போட்டு திரும்பிய போது 4 ம் எண் நுழைவு வாயிலில் அவரை நிருபர்கள் பேட்டி காண முயன்றனர். போலீசார் பேட்டி கொடுக்ககூடாது என்று தெரிவித்தனர். இதனால் நிருபர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மதியம் வரை ஜெ.அன்பழகன் எம்.எ.ல்.ஏ.க்கள் அறையிலேயே இருந்தார். பிற்பகலில் அவரை போலீஸ் வேனில் எற்றி புழல் சிறையில் அடைத்தனர்
சட்டசபை லாபியில் கையெழுத்து போட்டு திரும்பிய பின்னர் ஜெ.அன்பழகன் கூறியதாவது:
என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது. தற்போது கோர்ட்டு என்னை சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்துள்ளது. அதை ஏற்று நான் சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டேன்.
சட்ட சபையில் தி.மு.க.வுக்கு ஒரே வரிசையில் இடம் ஒதுக்காததால் எங்கள் கட்சி சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளது. எனவே சட்டசபைக்கு உள்ளே செல்லாமல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டேன். என் மீது வழக்கு நடப்பதால் புகார் தொடர்பாக எதுவும் சொல்ல விரும்பவில்லை.
என் மீது பொய்ப்புகார் செய்த உடுமலைப்பேட்டை சீனிவாசனைப் பற்றி விவரமாக நான் பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளேன். அவர் மீது என்னென்ன புகார்கள் உள்ளன. என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டு அடக்கு முறை நடக்கிறது.
இதை சட்டப்படி சந்திப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளனர். கட்சி கட்டளைப்படி நான் வழக்குகளை சந்திப்பேன். இன்று என் மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் கிடைத்தால் தினமும் சட்ட சபைக்கு வருவேன்.
தற்போது கோர்ட்டு உத்தரவுப்படி நான் சட்டசபையில் கலந்த கொள்ளலாம் என்று உள்ளது. சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி கட்சி எடுக்கும் முடிவுப்படி நடப்பேன். என் மீது குற்றம் சாட்டியவர் எப்படிப்பட்டவர், அவர் யார் என்பது குறித்து பத்திரிகையில் வந்த செய்தியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் (பத்திரிகை ஜெராக்ஸ் நகல்கள் அடங்கிய குறிப்பை நிருபர்களிடம் கொடுத்தார்).
இவ்வாறு ஜெ.அன்பழகன் கூறினார்.
11 நாள் சிறை வாசத்துக்கு பிறகு திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் :
No comments:
Post a Comment