ஆவடி நகர தி.மு.க. சார்பில், 13 .08 .2011 அன்று பொதுக்குழு விளக்க தீர்மான பொதுக் கூட்டம் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
1977ம் ஆண்டு தேர்தலில் தோற்ற தி.மு.க. 13 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிற்கே வர முடியவில்லை. அதன்பின்னர் 1989 ம் ஆண்டு மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையிலே ஆட்சிக்கு வந்தோம். 2 ஆண்டுகளிலேயே நம்மீது அபாண்ட குற்றச்சாட்டை சொல்லி ஆட்சியை கலைத்தார்கள். அடுத்து வந்த தேர்தலில் நம்மீது அபாண்டமான கொலைப் பழி சுமத்தப்பட்டு அந்த தேர்தலில் தலைவர் கருணாநிதியை தவிர அனைவரும் தோற்று மோசமான தோல்வியை சந்தித்தோம். அதிலும், கருணாநிதிக்கு ஒரு பெருமை உண்டு. இதுவரையில் தேர்தலில் நின்று தோற்ற வரலாறே அவருக்கு கிடையாது.
அதற்கு பிறகு 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையா? அதற்கு பிறகு 2001 ல் தோற்றோம். மீண்டும் 2006 ல் ஆட்சிக்கு வந்தோம். இப்போது 2011 ல் தோற்று இருக்கிறோம். மீண்டும் 2016 ல் தேர்தல் வரும், ஏன் அதற்கு முன்பே கூட தேர்தல் வரலாம். நாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்று அலையவில்லை. அது பதவிக்காக அல்ல. மக்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டிற்காக. இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் தி.மு.க. எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்தது உண்டு. வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதி உழைத்து கொண்டிருக்கக் கூடிய ஒரே இயக்கம் தான் தி.மு.க.
இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்கள்? முதன்முதலில், சமச்சீர் கல்வி ரத்து என்பதைத்தான் கொண்டு வந்தார்கள். அதை உச்சநீதிமன்றமே தவறு என்று தீர்ப்பளித்து, இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுபோல, மற்றொரு காரியம் மக்கள் வரிப்பணத்திலே கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மூடியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவோம் என்றார்கள். ஆனால், இன்றைக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு இல்லாமல் செய்தியே கிடையாது.
தி.மு.கவினர் மீது பல வழக்குகள் போடப்படுகின்றன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், சிவாஜி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம். என்.கே.கே.பி.ராஜா என பலர் மீது வழக்கு போடுகிறார்கள். பூண்டி கலைவாணன் மீது என்ன வழக்கு? பள்ளிக்குச் சென்ற ஒரு மாணவனை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து, பாடங்களை படிக்க விடாமல் செய்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. கலைவாணன் அந்த வழக்கிலிருந்து ஜாமீன் பெற்று, பாளைச் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவர் மீது இன்னொரு வழக்கைப் போட்டு உள்ளே தள்ளுகிறார்கள். ஆட்சிக்கு வந்த 3 மாதத்திலேயே இத்தனை அராஜகங்கள், அக்கிரமங்கள் நடக்கிறதென்றால் அதற்கெல்லாம் பதில் சொல்ல, பாடம் புகட்ட நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் நாம் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுகின்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, மக்கள் மன்றம் இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொண்டாற்றக்கூடிய உணர்வோடு தொடர்ந்து பாடுபடுவோம்.
தேர்தலில் தோற்றதால் நாம் மூலை முடுக்கில் சுருண்டு கிடக்கவில்லை. இங்குள்ள கூட்டத்தை பார்த்தால் நாம் தோற்கவில்லை. சமச்சீர் கல்வி அமல்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது அதிமுக அரசுக்கு பெரிய அடி. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் புதிய தலைமைச் செயலகத்தை மூடியது. அந்த கட்டிடம் அண்ணா அறிவாலயமோ அல்லது திமுக கட்டிடமோ இல்லை. அரசின் சொந்த கட்டிடம். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடம். மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலக கட்டிடத்தை இழுத்து மூட வேண்டிய அவசியம் ஏன்?
கடந்த 2002 அ.தி.மு.க. ஆட்சியின் போது புதிய தலைமை செயலகத்தை கட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசு. இதைத் தொடர்ந்து மகாபலிபுரம் ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் இடம் பார்த்தனர். முடிவில் அண்ணா பல்கலைக்கழக வாளகத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட பூமி பூஜையும் போட்டனர். அதன் பிறகு பல காரணங்களால் அவர்களால் தலைமை செயலகத்தை கட்ட முடியவில்லை.
பின்னர் 2006 ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமை செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டினோம். இது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. கலைஞரின் முயற்சியால் நவீன வசதிகளுடன் இந்த தலைமை செயலகம் உருவாகி உள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. அரசு பதவிக்கு வந்ததும் புதிய தலைமை செயலகத்தை உபயோகப்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டனர்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா நிராகரிப்பது நியாயம் தானா? இது அண்ணா அறிவாலயத்தின் கிளை அல்ல. மக்கள் வரிப்பணத்தில் உருவானது தானே? 1949 ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க. பல வெற்றி களையும் தோல்விகளையும் சந்தித்துள்ளது.
கடந்த தேர்தலின் போது தி.மு.க. தோற்றாலும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தோற்க வில்லை. கடந்த 3 மாதகால அ.தி.மு.க. ஆட்சி செயல்பாடுகளினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சமச்சீர் கல்வி விஷயத்தில் அ.தி.மு.க. அரசு வீண் பிடிவாதம் பிடித்து 3 மாதமாக மாணவர்கள் படிப்பில் விளையாடி விட்டது.
சமச்சீர் கல்வியை கலைஞர் தனிப்பட்ட முறையில் கொண்டு வரவில்லை. கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் பல துறை வல்லுனர்களை கொண்டு பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் மாணவர்களின் விஷயத்தில் அக்கறை இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து கொண்டது. தோல்வி கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், அதன்படி நடக்காமல் மேல்முறையீடு செய்தனர். அங்கும் அவர்களுக்கு தோல்விதான் கிடைத்துள்ளது.
இது தி.மு.க.வின் பொதுக்குழு தீர்மான கூட்டம் அல்ல. சமச்சீர் கல்வியின் வெற்றி கூட்டமாக அமைந்துள்ளது. அ.தி.மு.க. அரசின் முதல் கொள்கை முடிவே ரத்தாகி உள்ளது. இதுவே தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும். இன்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வுக்கு எதிராக நில அபகரிப்பு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெ.அன்பழகன் எம்.எ.ல்.ஏ. மீதும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இ.ஏ.பி. சிவாஜி, ரங்கநாதன் உள்பட பலர் மீது பொய் வழக்குகளை அ.தி.மு.க. அரசு தொடர்ந்துள்ளது.
இந்த பொய் வழக்குகளை நீதிமன்றங்கள் மூலம் நாங்கள் சந்திப்போம். வெற்றி பெறுவோம். தேர்தல் தோல்வியால் தி.மு.க. துவண்டு விட வில்லை. இன்னும் எழுச்சியாகத்தான் தி.மு.க. வினர் உள்ளனர். இளைஞரணியினர் தோல்வியை கண்டுபயப்படாமல் மிகவும் எழுச்சியாக செயல்படுகின்றனர். இந்த ஆட்சியின் சவால்களை துணிவுடன் எதிர்கொள்வோம். அடுத்த ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்பது உறுதி.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment