ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை விற்கவோ, ஏலம் விடவோ வேண்டாமென பிரதமரும், அப்போதைய நிதியமைச்சரும்தான் முடிவெடுத்தனர் என்று சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியின் வக்கீல் சுஷில்குமார் வாதாடினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்பட பலர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கில் ஒவ்வொருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான வாதங்கள் நடைபெற்று வருகிறது. கனிமொழி எம்.பி. சார்பில் சீனியர் வக்கீல் சுஷில் குமார் 23.08.2011 அன்று வாதாடினார். அவர் கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை விற்கவோ, ஏலம் விடவோ வேண்டாம் என்று பிரதமர், அப்போதைய நிதியமைச்சர், தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆகியோர் கூட்டாக முடிவெடுத்தனர். அந்த கூட்டத்தின் குறிப்புகளை(மினிட்ஸ்) நான் காட்டுகிறேன்.
மத்திய தணிக்கைக் குழு யூகத்தின் அடிப்படையில் அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையை இன்னும் நாடாளுமன்றம் ஏற்கவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு எதுவும் இல்லை என்பதற்கு பிரதமர், அப்போதைய நிதியமைச்சர், இப்போதுள்ள தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆகியோரே சரியான சாட்சிகள். அவர்கள் நாடாளுமன்றத்தில் அதை உறுதி செய்துள்ளனர். இழப்பு இல்லை என்று முடிவாகி விட்டால், மோசடி குற்றச்சாட்டு அடிபட்டு போகும். எனவே, மனுதாரரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு வக்கீல் சுஷில்குமார் வாதாடினார்.
No comments:
Post a Comment