சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சரும், திருச்சுழி எம்.எல்.ஏ.வுமான (தி.மு.க.) தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கனவாகும். 13.3.10 அன்று அந்த கனவு நனவானது. இதை கட்டுவதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தார். போதிய வசதிகள் இருந்ததால், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டசபையும், தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது.
புதிய சட்டசபையில் நடந்த கூட்டத்தொடர்களில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பழைய அரசின் கொள்கை முடிவுகளை மாற்றினார். பழைய தலைமைச் செயலகத்தை புதுப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தமாட்டேன் என்று பதவி ஏற்பதற்கு முன்பாகவே ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
அதற்கான கட்டுமானத்தில் முறைகேடு நடைபெற்றதா? என்பதை எந்த வித நிர்வாக ரீதியான விசாரணையும் மேற்கொள்ளாமல், நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்கு மேற்கொண்டு நடக்க வேண்டிய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், தி.மு.க.வினரை பழிவாங்கும் எண்ணத்தினாலும் அதிகார வரம்புகளை மீறி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி தங்கராஜபும் பல வகைகளில் தி.மு.க.வுக்கு எதிரானவர்.
அவர் நடுநிலையோடு விசாரணை நடத்துவாரா? என்பதில் எங்களுக்கு பலத்த சந்தேகங்கள் உண்டு. ஓய்வுபெற்ற மற்ற நீதிபதிகளை தவிர்த்துவிட்டு, தங்கராஜை நியமித்துள்ளனர். எனவே நீதிபதி தங்கராஜை விசாரணை கமிஷனில் நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசீதரன் முன்னிலையில் 12.08.2011 அன்று விசாரணைக்கு வந்தது. தங்கம் தென்னரசு தரப்பில் மூத்த வக்கீல் விடுதலை ஆஜரானார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:
நீதிபதி டி.முருகேசன்: இந்த வழக்கில் முதல் அமைச்சரை ஏன் பிரதிவாதியாக சேர்த்துள்ளீர்கள்?
விடுதலை: இந்த விவகாரத்தில் அவர்தான் முடிவு எடுத்தார். அதனால் அவரை வழக்கில் சேர்த்திருக்கிறோம்.
நீதிபதி: ஒருவர் தனியாக எடுக்கும் முடிவின் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்க முடியாது. அமைச்சரவை போன்று கூட்டாக சேர்ந்து எடுத்து முடிவெடுத்த பிறகுதான் அரசாணை பிறப்பிப்பார்கள்.
விடுதலை: ஆனால் இந்த விஷயத்தில் அப்படி நடக்கவில்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.
நீதிபதி: நானும் உங்கள் மனுவை படித்துப் பார்த்தேன். ஆனால் முதல் அமைச்சரைப் பற்றி இதுபோல் எந்த குற்றச்சாட்டும் அதில் இல்லை. பொதுவாக முதல் அமைச்சர், அமைச்சர்களை வழக்கில் சேர்ப்பது சரியாக தெரியவில்லை. அது ஒரு நல்ல நடைமுறையல்ல.
எனவே இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர் ஆகியோருக்காக அட்வகேட் ஜெனரல் நோட்டீசு பெற்றுக்கொள்வார். விசாரணை கமிஷனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மற்ற வழக்குகள் தொடர்பான விசாரணை 17 ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment