பொய் வழக்கில் ஒருவரை கைது செய்தால், ஓராயிரம் திமுகவினர் தோன்றுவார்கள். திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக பிரமுகர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்ஸார் கோபி, குடமுருட்டி சேகர், மாமுண்டி, ஷெரிப் ஆகியோரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர், நிருபர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு திமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தலைவர் கருணாநிதி சொன்னதுபோல் இது ஒரு அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி காலமாக உள்ளது. ஜெயலலிதா சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். 2006 முதல் 2011 வரை என காலக்குறியீடு நிர்ணயித்து நில அபகரிப்புக்கென தனி போலீஸ் பிரிவு ஒன்றை தொடங்கி, அதன்மூலம் பொய் வழக்கு போட்டு திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
நேற்று கூட முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியினரை எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கைது செய்து நீதிபதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கான வாரன்ட் இல்லாததால் சிறைக்கு அனுப்ப முடியாது என நீதிபதி கூறிவிட்டதால், அதன்பின் போலீசார் அங்கேயே அவசரம் அவசரமாக வாரன்ட் தயாரித்து அதன்மூலம் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதை நாங்கள் சட்டப்படி கோர்ட்டில் சந்திப்போம். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் அங்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.
ஆளுங்கட்சியான அதிமுகவினர் மீது அக்கட்சியினரே நில அபகரிப்பு புகார் அளிப்பதாக தினந்தோறும் செய்திகள் வெளியாகிறது. உதாரணமாக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் எம்எல்ஏ சோமசுந்தரம் உள்ளிட்டோர் மீது அந்த கட்சியை சேர்ந்தவர்களே உண்மையான புகார்களை கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து எந்த வகையிலும் திமுகவின் பணிகளை முடக்கி விடமுடியாது. ஒரு நேருவையோ, ஒரு அனிதா ராதாகிருஷ்ணனையோ, ஒரு வீரபாண்டி ஆறுமுகத்தையோ கைது செய்தால் அதற்கு பதில் ஆயிரமாயிரம் நேரு, ராதாகிருஷ்ணன், வீரபாண்டி ஆறுமுகம் தோன்றி கட்சி பணிகளை மேற்கொள்வர். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment