திமுக தலைவர் கலைஞர் 12.08.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் ஒன்றின் மீது பேசிய ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்ற பேரவையில் தீர்மானம், மனித சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, இறுதி எச்சரிக்கை என்பவையெல்லாம் கண்துடைப்பு நாடகங்கள் என்று கூறியுள்ளார்.
இதில் கண் துடைப்பு நாடகங்கள் என்ற அவருடைய பாணி வசனத்தை விலக்கி விட்டுப் பார்த்தால் இதன் மூலம் திமுக ஆட்சியில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை ஜெயலலிதா, அவரையும் அறியாமல் பட்டியலிட்டுக் காட்டியிருப்பதாக நன்றி கூறுகிறேன்.
வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு - இங்கிருந்த கழக ஆட்சி இலங்கைத் தமிழர்களுக்காக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை - இனியாவது புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இது என்று கருதி மகிழ்ச்சியடைகிறேன்.
ஜெயலலிதா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து கோத்தபய ராஜபக்சே கருத்து தெரிவித்து, அந்த கருத்துக்கு எதிராக ஜெயலலிதா பதில் சொல்லும்போது, தேவையில்லாமல் நான் எங்கே வந்தேன்?
இலங்கைத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக, இலங்கையிலே தமிழீழப் போராளிகளுக்கு எதிராக, விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு எதிராக இதே சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றிய அந்நாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இப்போது கோத்தபய ராஜபக்சே கூறிய வார்த்தைகள் சாத்தான் வேதம் ஓதுவது போல் இருப்பதாகத் தெரிகிறது.
கோத்தபயவின் கூற்றினை தி.மு.க. கூர்மையாக எதிர்க்கிற அதே நேரத்தில் சாத்தான் வேதம் ஓதுவதா? என்ற வாசகத்தை இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்து பேசுகிற ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிற கடமை நம்மைப் போன்ற உண்மைத் தமிழர்களுக்கெல்லாம் இருக்கிறது அல்லவா?
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment