நில அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்க தனி போலீஸ் பிரிவு அமைத்து அரசு பிறப்பித்த அரசாணை சட்ட விரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. தாமரைச்செல்வன், திமுக சட்டப்பிரிவு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு தொடர்பாக வரும் புகார்களை பதிவு செய்து விசாரணை நடத்த தனி போலீஸ் பிரிவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. அரசியல் உள்நோக்கத்துடன் திமுகவினர் மீது ஏராளமானோர் பொய் புகார்களை கொடுத்து வருகின்றனர். இதை போலீசார் பெற்று, பழிவாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்களையும், கட்சி நிர்வாகிகளையும் கைது செய்து வருகின்றனர்.
இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.களை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக, நீதிமன்றங்களில் தீர்த்து வைக்கப்பட்ட நில பிரச்னைகளை எல்லாம் நில அபகரிப்பு வழக்காக மாற்றி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மீதான வழக்குகள் எல்லாம் நீதிமன்றத்தில் தீர்த்து வைக்கப்பட்டவை.
இதுபோன்ற நில அபகரிப்பு வழக்குகளில் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய தடை விதிக்க வேண்டும். பழிவாங்கும் நோக்கத்துடன் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும்.
நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு செயல்பட ரூ.71 கோடியே 11 லட்சத்து 671 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 36 இடங்களில் இந்த போலீஸ் தனிப்பிரிவு செயல்படும் என்றும், இதற்காக 410 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், அரசு உத்தரவில் கூறியுள்ளது. புகார்கள் அடிப்படையில் விசாரணை எதுவும் நடத்தாமல் தி.மு.க.வினரை இரவு நேரங்களில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இது, இந்திய தண்டனை சட்டம், இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. சிவில் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தை போலீசார் எடுத்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. எனவே, இது தொடர்பான அரசாரணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு பொதுநல வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை தி.மு.க. வக்கீல்கள் கிரிராஜன், அசன் முகமது ஜின்னா, பரந்தாமன், வி.மனோகர் ஆகியோர் தாக்கல் செய்தனர். தி.மு.க. சார்பில் வக்கீல் என்.ஜோதி ஆஜராகி வாதாடுகிறார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment