முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறியதால் நீதிபதி வேதனை அடைந்து வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார்.
நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட முன் னாள் அமைச்சர் என்.கே. கே.பி. ராஜா உள்பட 5 பேர், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்பு 12.08.2011 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதம்:
வக்கீல் என்.ஜோதி:
பழிவாங்கும் நோக்கத்துடன் தி.மு.க.வினர் மீது மட்டும் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கில் என்.கே.கே.பி.ராஜா மீதும் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் கேன்சர் வியாதியால் அவதிப்படுகிறார். அதற்கு சிகிச்சையும் பெற்று வருகிறார். அவரை சிறையில் அடைத்துள்ளனர். எனவே இதை முக்கிய வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்.
அட்வகேட் ஜெனரல்:
என்.கே.கே.பி.ராஜா மீது பல புகார்கள் உள்ளன. அப்படி பட்டவரின் வழக்கை நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பது தவறானது.
நீதிபதி:
இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
என்.ஜோதி:
வரிசைப்படிதான் இந்த வழக்கு வந்துள்ளது. முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறியது வேதனை அளிக்கிறது.
அட்வகேட் ஜெனரல்:
இந்த வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று தெரியவில்லை.
நீதிபதி:
முதலில் மனுதாரர் தரப்பில் வாதாடட்டும். அதன்பிறகு போலீஸ் தரப்பில் வாதாடலாம் .
அட்வகேட் ஜெனரல்:
இதை அனுமதிக்க முடியாது. இந்த நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. வழக்கில் தற்போது விசாரணை நடத்தக்கூடாது. தள்ளிவைக்க வேண்டும்.
நீதிபதி:
இப்படி நீதிமன்றத்தில் பேசுவது வேதனை அளிக்கிறது. நீங்கள் சப்தமாக பேசினால் நானும் உரக்க பேச நேரிடும்.
(அப்போது வக்கீல் ஜோதி குறுக்கிட்டு பேசியதற்கு அதிமுக வக்கீல்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர்)
நீதிபதி:
இப்படி நீதிமன்றத்தில் கோஷமிட்டால் கிரிமினல் நடைமுறை சட்டப்படி நீதிமன்ற பணியில் குறுக்கீடுவதாக கூறி நடவடிக்கை எடுக்க நேரிடும். அனைவரும் வெளியே செல்லுங்கள். இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறுவது வேதனை அளிக்கிறது. எனவே இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை. இதை வேறு நீதிபதி விசாரணைக்கு அனுப்பி வைக்கிறேன்.
என்.ஜோதி:
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் இப்படி நீதிமன்றத்தில் நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. வருத்தம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க தவறிவிட்டார்.
இவ்வாறு வாதம் நடந்தது.
No comments:
Post a Comment