பெரியாரை ஒரு கன்னடர் என்று இப்போதும் வாய் கூசாமல் சொல்லும் மனிதர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். அவர் கர்நாடகத்திற்குச் சென்றதெல்லாம் பெல்லாரிச் சிறையில் கல்லுடைப்பதற்காகத் தான். பள்ளிக் கூடங்களில் இந்திப் பாடம் திணிக்கப்படுவதை எதிர்த்து, தமிழுக்காகப் போராடி அவர் சிறை சென்றார். தண்டனைக்கும் மேலே தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கடும் வெயில் அடிக்கும் பெல்லாரிச் சிறைக்கு ஒரு கோடையில் அரசு அவரை அனுப்பி வைத்தது.
ஐயாவை ஏன் பெல்லாரிக்கு அனுப்பி வைத்தீர்கள், அங்கு அவருக்குப் பேச்சுத்துணை கூட இருக்காதே என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய சர்.ஏ.டி. பன்னீர்ச் செல்வத்திற்கு விடையளித்த அன்றைய முதலமைச்சர் ராஜாஜி, அவருக்குக் கன்னடம்தானே தாய்மொழி, நாயக்கருக்கு அங்குப் பேச்சுத்துணை இல்லாமலா போய்விடும் என்று கிண்டலடித்தார். ராஜாஜிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
1938, 39களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தந்தை பெரியார், 06.12.38 அன்று நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம், ஒரு வரலாற்று ஆவணம். அந்த ஆவணத்திலிருந்து இதோ சில பகுதிகள்:
"இந்தக் கோர்ட்டு காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது. தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந் தவர்கள். இவை தவிர இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதிதீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விசயத்தில் நியாயம் அநியாயம் பார்க்க வேண்டிய தில்லை என்றும் கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து ஒழிக்க வேண்டும் என்றும் ...(கருதிக்கொண்டிருக்கிறார்கள்). எனவே இந்தி எதிர்ப்பு விசயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது எனது கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.
ஆதலால் இந்தக் கோர்ட்டு நியாயத்தில், இந்த வழக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை... பொதுமக்கள் தவறுதலாய்க் கருதாமல் இருப்பதற்கும்... நான் நிரபராதி என்பதை எடுத்துக்காட்டுவதற்கும் ஓர் அறிக்கை எழுத்து மூலமாய்ச் சமர்ப்பிக்கிறேன்.(மற்றபடி) இந்த வழக்கு விசாரணைச் சடங்கில் நான் கலந்து கொள்ளவில்லை வக்கீல் வைக்கவும் இல்லை "
இப்படிச் சொல்லிவிட்டுத்தான், தன் பக்கத்து நியாயங்களை மக்கள் மன்றத்திற்காக அவர் எடுத்து வைக்கின்றார். 6மாதக் கடுங்காவல் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகின்றது. பணத்தைக் கட்டாத காரணத்தால், 1939 பிப்ரவரி 26ஆம் தேதி, பெரியாரின் காரை அரசு பறிமுதல் செய்து விடுகிறது. எதற்கும் கவலைப்படாத பெரியார் சிறை வாழ்க்கையைத் தொடர்கின்றார்.
அவரிடம் எப்படிக் கலக்கத்தை உருவாக்கலாம் என்று கருதிய அரசு, அதே மாதம் அவரை கர்நாடகத்திலுள்ள பெல்லாரி சிறைக்கு மாற்றுகிறது. புதிதாகத் தைக்கப்பட்ட சிறை உடைகளை எல்லாம் மறக்காமல் எடுத்துக் கொண்டு, பெல்லாரிக்கு ஐயா புறப்படுகின்றார். சிறை மாற்றத்தைக்கூட அரசு ரகசியமாக வைத்திருந்தது. எப்படியோ அதனைத் தெரிந்து கொண்ட கட்சித் தோழர்கள், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் நோக்கி ஓடிவருகின்றனர். அதனால் இரவு ஒன்பதரை மணிக்குப் புறப்பட வேண்டிய பம்பாய் மெயிலுக்குப் பதிலாக, மூன்றரை மணிக்குப் புறப்பட்ட ரேணிகுண்டா பாசஞ்சரில் சாதாரண வகுப்பில் அவரை அழைத்துச் செல்கின்றனர். எல்லாவற்றிற்கும் பெரியார் ஒத்துழைப்புக் கொடுக்கின்றார்.
பெல்லாரி சிறை மாற்றத்தைப் பன்னீர்ச் செல்வம், அரக்கோணம் சஞ்சீவி நாயுடு, ஆர். நாராயணி அம்மாள், டி.ஏ.வி. நாதன் உள்ளிட்ட பலர் கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்களுள் சிலர் மறியல் செய்து கைதும் ஆகின்றனர்.
கல்லுடைக்கும் பணி அங்கு ஐயாவுக்குக் கொடுக்கப்படுகின்றது. அதில் அவர் சோர்ந்து போய்விடுவார் என்பது அரசின் எண்ணம். ஆனால் அவரோ தொடர்ந்து கல் உடைத்ததோடு அல்லாமல், அதிகாரிகளைப் பார்த்து, 'ஐயா, இன்னிக்கு இது போதுங்களா' என்று கேட்டிருக்கிறார். அவர்களே பல நேரங்களில் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.
எனினும் பெல்லாரியின் கொடும்வெயில் அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. வழக்கமான வயிற்றுவலி மேலும் பன்மடங்கு கூடிவிட்ட காரணத்தால் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார். அவரைச் சிறையில் சந்தித்த, சிறைத் துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயன், அவர் நிலை கண்டு வருந்தி, உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உங்களால் உதவி செய்ய முடியுமென்றால், என் உடல் நிலை பற்றி நன்கறிந்த டாக்டர் குருசாமி முதலியார் அவர்களை இங்கு வந்து என்னைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் கூறியிருக்கிறார்.
பெரியார் தமது கொடிய அரசியல் எதிரியானாலும், அவர் தமது ஆப்த நண்பர் என்றும், அவரது வியத்தில் தமக்கும் கவலை உண்டென்றும், முதலமைச்சர் ராஜாஜி சட்டமன்றத்தில் கூறியபோதும், அவர் செய்த ஒரே உதவி, மருத்துவர் குருசாமி முதலியார் சிறைக்குச் சென்று பெரியாரைச் சோதிக்க உதவியதுதான், ஆனாலும், பெல்லாரி வெயில் கொடுமையால், எந்த சிகிச்சையும் பயனளிக்கவில்லை.
பெல்லாரி சிறையில் உள்ள மருத்துவமனையிலாவது அவரை அனுமதித்துக் குணப்படுத்த வேண்டும் என்று சிறைத்துறைத் தலைவருக்கு (ஐ.ஜி) அளித்த விண்ணப்பமும் பயனற்றுப் போய்விட்டது.
13.05.1939 அன்று, வேறு வழியின்றி, கோவைச் சிறைக்கு ஐயாவை அரசு மாற்றியது. இறுதியில், 168 நாள் சிறைவாசம் முடிந்து, மே 21ஆம் தேதி, கோவைச் சிறையிலிருந்து அவர் விடுதலையானார்.
அந்தக் காலகட்டத்தில்தான் மாவீரர்கள் நடராசனும், தாலமுத்துவும் சிறையில் காலமானார்கள். 1939 ஜனவரி 15 - கட்டாய இந்திக்கு முதற்பலியான வீரர் நடராசன். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அவர் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். உடல்நிலை நலியத் தொடங்கிய நேரத்தில், 'மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விடுதலை பெற்றுச் சென்று விடு' என்று பலரும் தூண்டினர். 'நான் பெரியாரின் தொண்டன். இறந்தாலும் சிறையிலேயே இறப்பேனே அல்லாமல், மன்னிப்புக் கேட்டு வெளியேற மாட்டேன்' என்று உறுதிகாட்டியவர் அவர். அதானல்தான், "நடராசனின் தமிழ் வீரச் செய்கையை, பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டும்" என்று எழுதினார் அண்ணா.
நடராசனைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் மாதம் தோழர் தாலமுத்துவும் சிறையில் மறைந்தார்.
அந்த வரிசையில், தந்தை பெரியாரும் நின்று கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை. ஆனால் உயிர் பிழைத்து வெளியில் வந்த அவர், அதன் பிறகும் 34 ஆண்டுகள் தமிழ் இனத்திற்காக உழைத்தார்.
தன் வாழ்நாள் முழுவதும் தமிழர்களுக்காகவே உழைத்த அவரைக் கன்னடர் என்று கூறி, அந்நியப்படுத்த நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு செய்தி -
அவர் தமிழர் இல்லையயன்றால், இங்கே எவன் ஒருவனும் தமிழன் இல்லை !
(சான்று: புலவர் நன்னன் எழுதிய 'இவர்தாம் பெரியார் ‡ 4.இந்தி' மற்றும் புலவர் இளஞ்செழியன் எழுதிய 'தமிழர் தொடுத்த முதல்போர்' )
- சுப.வீரபாண்டியன்
நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்
No comments:
Post a Comment