புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனை ஆக்குவதில் அதிருப்தி ஒன்றும் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் மயிலை மாங்கொல்லையில் 19.08.2011 அன்று நடந்தது.கூட்டத்துக்கு மயிலை பகுதி செயலாளர் த.வேலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் முன்னிலை வகித்தார். பூவை ஜெரால்டு, வி.எஸ்.ராஜ் வரவேற்று பேசினர். கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
சிறை சென்று நிபந்தனை அடிப்படையில் நம்மிடையே வந்த ஜெ.அன்பழகனின் அரியதொரு உரையை கேட்டேன். அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. பரவாயில்லை சிறைச்சாலையில் ஒருவாரம் அவரை வைத்தது நமக்கு ஆதாயம் தான் என்ற மனநிறைவோடு அவரை கைது செய்தவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவரது உரையை கேட்டபோது, சிறைச்சாலை என்னென்ன செய்யும் என்பதையும், அங்கு சிந்தித்த சிந்தனை முத்துக்களை எல்லாம் மக்களுக்கு தந்த அன்பழகனின் பேச்சை கேட்ட போது நான் உணர்ந்து கொண்டேன்.
சுப.வீரபாண்டியன் என்னுடன் வரும் போது தேர்தலுக்கு பிறகு சென்னையில் பேசும் முதல் கூட்டம் தானே என்று கேட்டார். ஆமாம் என்றேன். தேர்தல் சமயத்தில் மட்டும் ஒரே மாதத்தில் திருவாரூரில் 3 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளேன். முதல் கூட்டம் வேண்டுகோள் விடுக்கும் கூட்டம், இதையடுத்து, தேர்தலில் ஏற்பட்ட தோல்வி எனக்கல்ல. எனது தலைமையிலான கழகம் வெற்றி பெறாததால் எனது வெற்றியையும் தோல்வியாக கருதி நடந்த 2வது கூட்டம். இந்த 2 கட்டத்துக்கும் பிறகு மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை கண்டித்து நடந்த 3வது பொதுக்கூட்டம். முதல் கூட்டத்தை விட அடுத்த கூட்டத்தில் மக்கள் எண்ணிக்கை பெருகியது. இப்படி கூட்டத்துக்கு கூட்டம் மக்கள் பெரு கியதை கண்ட போதெல்லாம் எனக்கு ஆறுதல் சொல்ல அல்ல. அவர்கள் செய்த தவறுக்காக பிராயசித்தம் தேட வந்துள்ளார்கள் என எண்ணினேன்.
இப்போது ஆயிரக்கணக்கில் சேர்ந்துள்ள நீங்கள் தவறாமல் வாக்களித்திருந்தீர்கள் என்றால் சென்னையில் எத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்கும். என்னை தொடர்ந்து ஏமாற்றமாட்டீர்கள். திமுகவை ஏமாற்றுவீர்கள் என்றால் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்வது போலாகும் என்பதை சிந்தனையில் பதிய வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இங்கு பேசியவர்கள் எல்லாம் நமக்கு கிடைத்த வெற்றி என்றனர். ஆனால் இது சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றி. எதிர்கால சமுதாயத்தினர் நன்கு நடமாடவும், வாழவும், வளர்ந்திடவும் தங்களுடைய ஒழுங்கான பாதையில் செல்லவும் அவர்களுக்கு காட்டப்பட்ட வழி இது. எனவே வெற்றி என்று சொல்ல மாட்டேன். உச்சநீதிமன்றம் வரை சென்று பெற வேண்டிய ஒன்றாகிவிட்டது.
சமச்சீர் கல்வியை நிறுத்தும் இந்த ஆட்சியாளர்களுக்கு சமம், சமத்துவம் என்கின்ற இந்த வார்த்தைகள் பிடிக்காது. திமுக ஆட்சியில், தந்தை பெரியார் பெயரில் நூற்றுக்கணக்கான சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு, அந்த வீடுகளில் பிராமணர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என சமமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆட்சியில் எங்காவது சமத்துவபுரம் திறக்கப்பட்டிருக்கிறதா?. இல்லை. அடிக்கல்லாவது நாட்டியிருப்பார்களா? இல்லை. ஏனென்றால் சமத்துவம் அவர்களுக்கு பிடிக்காது. எனவே தான் சமச்சீர் கல்வியும் அவர்களுக்கு பிடிக்கவில்லை.
இதற்காக சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தி வரவு&செலவு திட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, நான் மட்டுமல்ல தனித்தனி குழுக்களும், தலைசிறந்த கல்வியாளர்களை பயன்படுத்தி அவர்கள் கருத்துக்களை அறிந்து, அதை ஆய்ந்து தெளிவாக்கி தேர்வு செய்து வெளியிடப்பட்டது தான் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு. அந்த அறிவிப்பு வந்த உடன் யாரை நம்பியிருந்தீர்களோ அதற்கு காரணமான என்னை நட்டாற்றில் விட்ட காரணத்தால் சமச்சீர் கல்வியை இழக்க நேரிட்டது. ஒரு கோடி மாணவர்கள் படிக்க புத்தகம் இல்லாமல் பரிதவித்தார்கள். தரமான கல்வி என்று கூறியவர்களே ஆட்சி மாறிய பின்பு தரமில்லாத கல்வி சமச்சீர் கல்வி என்று கூறினர்.
சமச்சீர் கல்வி புத்தகத்தில் நான் எழுதிய கவிதைகளை அடித்தும், கிழித்தும் ஸ்டிக்கர் கொண்டு ஒட்டியும், அந்த புத்தகங்கள் இப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நமது மாணவர்களின் கெட்டிக்காரத்தனம் எனக்கு தெரியும். எதை ஒட்டியிருக்கிறார்களோ அதை கிழித்து பார்க்கத் தான் போகிறார்கள்.
புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்தை தமிழக அரசு என்ன செய்யப்போகிறதோ என்ற பதிலுக்காகக் காத்திருந்தேன். கடைசியில் மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்ற பதில் கிடைத்துள்ளது.
மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை: இதற்கும் நானே வழி காட்டியிருக்கிறேன். என் ஆயுள் காலத்திற்குப் பிறகு கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.
அதேசமயம் 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட கட்டடம் அது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் நேரில் சென்று பார்த்து, முதல்வர் நூறாவது முறையாக வருகிறார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்.
அது என் சொந்தக் கட்டடமா மக்களுக்குச் சொந்தமான கட்டடம். அது அழகுறவும், பயனுறவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசையோடு கட்டிய கட்டடம். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காங்கிரஸ் கட்சியினரே மறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் அந்த இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என்று பெயரிட்டேன். அவர் ஆண்டதின் நினைவாகத்தான் அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது.
தாராளமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் புழங்கும் வகையில் விஸ்தாரமாக கட்டப்பட்ட கட்டடத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு நாங்கள் குருவிக் கூட்டில்தான் இருப்போம் என்றால் அது உங்கள் பாடு, உங்களை நம்பி வந்தவர்கள் பாடு.
தமிழ்நாட்டில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் துக்ளக் சோவை நான் சொல்லவில்லை. அந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. அது நீடிக்கவும் கூடாது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டே இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு கலைஞர் பேசினார்..
கூட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், திமுக நிர்வாகிகள் கோ.அன்பு, கபாலி, ஜி.மணி, சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment