இலங்கை தமிழர் பிரச்னையை மக்களவையில் விவாதிக்க பா.ஜனதா எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை 23.08.2011 அன்று காலை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு ஊழல் பிரச்னை பற்றி விவாதம் நடத்துமாறு பா.ஜ.வினர் கோஷமிட்டனர். கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுத்த சபாநாயகர் மீராகுமார், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். முதலில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அடுக்கடுக்காக ஊழல் புகார்களை கூறினார். இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பா.ஜ.வினரும், காங்கிரசாரும் கோஷமிட்டதால் அமளி ஏற்பட்டது. இதனால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியதும் இலங்கை தமிழர் பிரச்னை மீதான விவாதம் தொடங்கியது. முதலில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவை பேச சபாநாயகர் அழைத்தார். அப்போது, பா.ஜ. உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி அவையின் மைய பகுதிக்கு ஓடிவந்தனர். ஊழல் பற்றிய சிறப்பு விவாதத்தை மீண்டும் தொடங்க வேண்டும், இலங்கை தமிழர் பிரச்னை பற்றி பேச அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அதற்கு, இலங்கை தமிழர் பிரச்னை பற்றிய விவாதம் முடிந்தபிறகு, அதை எடுத்து கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் பதிலளித்தார்.
இதை ஏற்க மறுத்த பா.ஜவினர் ரகளை செய்தனர். இதனால், ஊழல் பற்றிய விவாதம் தொடரும் என்று மீராகுமார் அறிவித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த திமுக எம்.பி.க்கள், இலங்கை தமிழர் பிரச்னை பற்றிய விவாதம்தான் நடக்க வேண்டும் என்று அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். தொடர்ந்து அமளி நிலவியதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியபோது இலங்கை பிரச்னை பற்றிய விவாதத்தில் பேச டி.ஆர்.பாலு முயற்சித்தார். அப்போதும் பா.ஜ.வினர் அமளியில் ஈடுபட்டனர். முரளி மனோகர் ஜோஷியை பேச அனுமதிக்குமாறு அவர்கள் கோஷமிட்டனர். இதை எதிர்த்து திமுகவினர் கோஷமிட்டனர். அமளி நிலவியதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளி
மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு ஊழல் பிரச்னை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பா.ஜ., கம்யூனிஸ்ட்கள், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரினர். கூச்சல், குழப்பம் நிலவியதால் அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார். அவை மீண்டும் கூடியபோது, பிற்பகல் 2 மணிக்கு ஊழல் பிரச்னை பற்றி விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். ஆனால், உடனடியாக விவாதம் நடத்த வற்புறுத்தி பா.ஜவினர் கோஷம் போட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சியினரும் கோஷமிட்டதால் பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திபோடப்பட்டது.
பிற்பகலில் அவை கூடியதும், விவாதத்துக்கு அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சுக்லா, நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், ஊழல் பிரச்னை பற்றி பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பா.ஜ.வினர் கோஷமிட தொடங்கினர். இதனால், மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment