ராஜிவ் கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி ஆகியோர் கடந்த 25ம் தேதி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 29.08.2011 அன்று காலை கடலூர் வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சிறையில் உள்ள நேரு, அன்பில் பெரியசாமி ஆகியோரை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் சென்றனர்.
பின்னர் நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
திமுகவினர் மீது ஜெயலலிதா தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருகிறார். அதனை திமுக சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும். உள்ளாட்சி தேர்தல் மற்றும் திருச்சி இடைதேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்து பயந்துபோன ஜெயலலிதா, இதுபோன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த ஜெயலலிதா தூக்கு தண்டனையை குறைப்பதற்கு தன்னிடம் அதிகாரம் இல்லையென தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதை போல தூக்கு தண்டனையை நீக்ககோரி தீர்மானம் நிறைவேற்றலாம், பரிந்துரை செய்யலாம். இதற்கு எந்த சட்டமும், அதிகாரமும் தேவையில்லை.
சட்டமன்றத்தில் இன்று ஜெயலலிதா அறிவித்துள்ள அறிக்கை, அவரது நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் கலந்து பேசி போராட்டம் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். காவல் துறையால் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள் இன்று அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் உள்ளனர். இதுதொடர்பாக திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலின் வருகையையொட்டி சிறை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். சிறைக்குள் ஸ்டாலின் உட்பட 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment