நில அபகரிப்பு புகார் தொடர்பாக கோவை மாநகர திமுக செயலாளர் வீரகோபால் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பொய் வழக்கு போடுவதாக திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
கோவை வடவள்ளி ஸ்ரீசக்தி நகரை சேர்ந்தவர் ரத்தினம் (70). இவர், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், விளாங்குறிச்சி ராகவி கார்டனில் எங்களது குடும்பத்தினர் 3 பேருக்கு சொந்தமான 2.45 ஏக்கர் நிலம் உள்ளது. இதை கோவை மாநகர திமுக செயலாளர் வீரகோபால் (43), கோவை ராஜவீதி சொர்ண மஹாலை சேர்ந்த சாந்தலிங்கம் (65) ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அன்னூர் டிஎஸ்பி சக்திவேல் தலைமையில், கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் (பொறுப்பு) இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 120 (பி), 465, 467, 420, 506 (2) ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். 25.08.2011 அன்று அதிகாலை 4 மணிக்கு போலீஸ் படை கோவை பாப்பநாயக்கன்பாளையம் ரயில்வே கேட் அருகேயுள்ள உள்ள வீரகோபால் வீட்டுக்கு சென்றது. தூங்கிக்கொண்டிருந்த அவரை தட்டி எழுப்பி கைதுசெய்தனர். பின்னர், ராஜவீதிக்கு சென்று சாந்தலிங்கத்தையும் கைதுசெய்தனர். இதேபோல், கணபதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் தன்னிடமிருந்து 1.98 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக அளித்த புகாரின்பேரில், பவானிசாகர் ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமலிங்கம் (40) என்பவரையும் கைதுசெய்தனர். மூவரையும் வேனில் கோவில்பாளையம் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். காலை 9.45 மணிக்கு ரேஸ்கோர்ஸ் அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் செல்லபாண்டியன் வீட்டுக்கு அழைத்து சென்று, அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவர், மூவரிடமும், உங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு என்ன? தெரியுமா? உங்களை ஏன் கைது செய்துள்ளார்கள்? தெரியுமா? எனக்கேட்டார். அதற்கு மூவரும் தெரியாது என்றனர்.
அவர், போலீசார் சமர்ப்பித்த ஆவணங்களை படித்துக்கூறினார். பின்னர், மூவரையும் செப்டம்பர் 8ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரும் மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும் மாநகர மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள் சுமார் 300 பேர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் குவிந்தனர். மாஜிஸ்திரேட் வீட்டுக்கு செல்லும் வழியில் மெயின்ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனை சூழ்ந்து போடாதே... போடாதே... பொய் வழக்கு போடாதே... என பலத்த கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில், மூவர் சார்பிலும் திமுக முன்னணி வழக்கறிஞர்களும், முன்னாள் அரசு வக்கீல்களுமான கே.எம்.தண்டபாணி, அருள்மொழி தலைமையிலான வழக்கறிஞர் குழுவினர் ஜே.எம்.2 கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment