ஜனநாயக கடமை ஆற்றி எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று இளைஞரணி அமைப்பாளர் சிவா கூறினார்.
புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் மறைமலையடிகள் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடந்தது. மாநில இளைஞரணி அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சிபி.திருநாவுக்கரசு, துணை அமைப்பாளர் எஸ்பி.சிவகுமார் முன்னிலை வகித்தனர்.
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து , தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இளைஞரணி அமைப்பாளர் சிவா பேசியதாவது:
கடந்த இரண்டரை வருட ஆட்சியின் அவலம் பற்றி வாய் திறக்காமல் இருந்ததால்தான் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது. முதியோர் பென்சன் ரூ.1000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் ரங்கசாமி, தொகுதியில் 500 பேரை நீக்கிவிட்டுத்தான் இதனை செய்துள்ளார்.
வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்ற சொன்ன அவர், 5,454 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளார். உருளையன்பேட்டை தொகுதியில் கூட 75 பேர் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டவர்கள் எல்லாம் சேலத்துக்கு சென்று அப்பா பைத்தியசாமியிடமா நியாயம் கேட்க முடியும்?
25 கிலோ அரிசி, கல்வி உதவி, முதியோர் பென்சன் என அறிவித்த திட்டங்களை முதல்வர் ரங்கசாமி சரிவர நிறைவேற்ற வேண்டும். யாருக்கும் பயப்படும் இயக்கம் திமுக அல்ல. மக்களுக்காக திமுக வீரத்தோடு எதிர்த்து போராடும். வரும் காலங்களில் ஜனநாயக கடமையை ஆற்றி முழுமையான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்றார்.
மாநில அமைப்பாளர் ஜானகிராமன், துணை அமைப்பாளர் ராஜாராமன், பொருளாளர் அனிபால் கென்னடி, தொண்டரணி அமைப்பாளர் நந்தா சரவணன் எம்எல்ஏ, தலைமை மகளிரணி பிரச்சார செயலாளர் நளினி சாரங்கன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்ஏஎஸ்.சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் தைரியநாதன், மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உருளையன்பேட்டை தொகுதி இளைஞரணி அமைப்பாளர் ஈசாக் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment