தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை நடத்திக் காட்டுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி 25.08.2011 அன்று காலை 10.40 மணியளவில் கோட் டைக்கு வந்தார். அவருடன் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஜெ.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் வந்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் கருணாநிதியை முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, மைதீன்கான் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வரவேற்றனர். 2வது நுழைவாயில் வழியாக உள்ளே வந்த கருணாநிதி, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
பின்னர் வெளியே வந்த அவர், நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்:
கே: சட்டப்பேரவை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்வதில், ஏற்கனவே உள்ள முடிவில் ஏதாவது மாற்றம் இருக்குமா?
பேரவையில் எனக்காக ஒதுக்கித் தரப்பட்டுள்ள இடத்தில், நான் இந்த சக்கர நாற்காலியில் இருந்தவாறு சென்று அமருகின்ற வாய்ப்பில்லை. இடவசதி இருந்தால் தானே போவதற்கு.
கே: உங்கள் கட்சியின் மற்ற உறுப்பினர்கள், பேரவை கூட்டத்தில் இனிமேல் கலந்து கொள்வார்களா?
திமுக கலந்து கொள்ளாமல் இருந்தால் நல்லது என்றுதானே ஆளுங்கட்சியினர் எண்ணுகின்றனர்.
கே: காவல்துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் ஜெயலலிதா பேசியபிறகு, திமுகவினர் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளதே, இன்று கூட முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டுள்ளாரே?
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலையை நடத்திக் காட்டுகிறார்கள்.
கே: கைது நடவடிக்கையை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் எதுவும் நடத்தப்படுமா?
அதைப்பற்றி நான் மட்டும் முடிவெடுத்து சொல்ல முடியாது. பொதுக்குழு, செயற்குழு மற்றும் அடுத்தகட்ட தலைவர்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் கலந்து கொண்டுதான் இதற்கு பதில் சொல்ல முடியும்.
கே: விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளதால், திமுகவை ஒடுக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறதே?
ப: நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.
No comments:
Post a Comment