கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 13, 2011

சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? - கலைஞர் விளக்கம்


திமுக தலைவர் கருணாநிதி 12.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கேற்ப, தமிழக அரசு அதனை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கல்வித்துறை சார்பில் நீக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளவற்றில் என்னென்ன உள்ளன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.
பொதுவாக எல்லா வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள செம்மொழி வாழ்த்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டுமாம். அதிலே உள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று ஆரம்பித்து, வாழிய வாழியவே என்று முடியும் இந்த வார்த்தைகளில் மாணவர்கள் படிக்கக் கூடாத, வார்த்தை ஏதாவது ஒன்று இருக்கிறதா? ஒரே குற்றம், இந்தச் செம்மொழி வாழ்த்துப் பாடலை எழுதியது நான் என்பது தான்.
முதல் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 69, 70, 79, 80 ஆகிய நான்கு முழுப் பக்கங்களையும் நீக்க வேண்டுமாம் அந்தப் பக்கங்களில் என்ன உள்ளது தெரியுமா? 69ம் பக்கத்தில் வண்ணம் தீட்டுவேன் என்ற தலைப்பில் ஒரு ஆப்பிள் படம் போடப்பட்டுள்ளது. அதில் பாதிப் பகுதிக்கு சிகப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.
மீதிப் பகுதிக்கு மாணவன் வண்ணம் தீட்ட வேண்டும். இந்தத் தாளினையே நீக்க வேண்டுமாம். என்ன காரணம் என்றால், கறுப்பு சிகப்பு தி.மு. கழகத்தின் வண்ணமாம். 70ம் பக்கத்தில் ஔவை, கௌதாரி, பௌர்ணமி, வௌவால் படங்கள் உள்ளன. அவற்றில் ஒருவேளை இவர்கள் யாருடைய படமாவது இருக்கிறதோ என்று தெரியவில்லை. 80ம் பக்கத்தில் தமிழ் மாதங்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அந்த மாதங்கள் தை மாதம் முதல் தொடங்கியிருப்பதால் அந்த முழுப் பக்கத்தையும் கிழிக்கச் சொல்லிவிட்டார்கள்.
3வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 67ம் பக்கத்தில் 2 படங்கள் மற்றும் ஜூன் 23 & 27, 2010ல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கலைநிகழ்ச்சி, ஊர்வலக் காட்சி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தகத்தில் 26ம் பக்கத்தில், உலகத் தமிழ் மாநாடு 2010 ஜூன் மாதம் 23ந்தேதி முதல் 27ந்தேதி வரை கோவையில் நடைபெற்றது என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம்.
4ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 74ம் பக்கத்தில், செம்மொழி மாநாட்டுப் படங்கள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள் மறைக்கப்பட வேண்டும். கவி பாரதி இடம் பெற்ற படம்தான் அந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை மறைக்க வேண்டுமென்கிறார்கள்.
75ம் பக்கத்தில், முதல் பத்தி நீக்கப்பட வேண்டும். அதாவது செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ் மொழி என்று தொடங்கும் அந்தப் பத்தி முழுவதும் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் இது சுற்றறிக்கை.
4ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111ம் பக்கத்தில் சென்னை சங்கமம் பற்றிய பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். அதாவது நாட்டுப் புறக் கலைகள் மக்களுக்கு புத்துணர்ச்சி அளித்து கலை உணர்ச்சிக்கு விருந்தளிக்கின்றன.
5ம் வகுப்பு சமூக அறிவியலில் 80ம் பக்கத்தில் 3வது படம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 6ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பக்கம் 56ல் அப்துல் ரகுமானின் புதுக்கவிதை தாகம் முழு பக்கமும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்கிறது அரசு உத்தரவு.
அடுத்து 130ம் பக்கத்தில் இலவசப் பயண அட்டை விண்ணப்பப் படிவம் என்ற தலைப்பில் மாணவன் பெயர், பள்ளியின் பெயர், புறப்படும் இடம், சேரும் இடம் என்ற விவரங்களைப் பூர்த்தி செய்யும் படிவம் உள்ளது. அந்தப் பக்கத்தையே முழுவதுமாக நீக்க வேண்டுமென்று எதற்காகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை.
6ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் பக்கம் 53ல் இரண்டாவது பத்தியில் உள்ள தப்பாட்டம் என்ற பகுதியை முழுவதுமாக நீக்க வேண்டுமாம். அந்தப் பத்தியின் இறுதியில் பொங்கல் விழாவின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தப்பாட்டம் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறீர்களா? என்று ஒரு வாக்கியம் இடம் பெற்றது தான் காரணம்.
6ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் 81ம் பக்கத்தில் உள்ள சட்டக்காந்தம் படம் மறைக்கப்படவேண்டுமாம். காரணம் அந்தப் படத்தின் வண்ணம் கறுப்பு, சிகப்பு போல இருக்கிறதாம். 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் பக்கம் 11ல் அண்மையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் உயிர்க் காப்பீட்டுத் திட்ட நிதி உதவியால் எங்குமுள்ள வசதியற்ற மக்களும் செலவு மிகுதியாகக் கூடிய உயர்ந்த மருத்துவ மனையில் தரமான சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவேண்டுமாம்.
பக்கம் 35ல் சூரிய கிரகணம் குறித்த படமும், பகல் இரவு படமும் வெளிவந்துள்ளன. சூரிய கிரகணம் படத்தை முழுவதுமாக அழிக்க வேண்டுமாம்.
7ம் வகுப்பில் 98ம் பக்கத்தில் தொ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், கந்தசாமி, என்.எஸ். கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, டி.கே.எஸ். சகோதரர்கள், ஆர்.எஸ். மனோகர் முதலியோர் இவர்தம் அடியொற்றி நாடகக் கலை வளர உறுதுணை புரிந்தோராவர் என்ற பகுதி அடிக்கப்பட வேண்டுமாம்.
அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டுள்ள ஆட்சியிலே ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடா அல்லவா?
9ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பக்கம் 203ல் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கவிழா என்ற தொடரை அடிக்க வேண்டும் என்கிறது சுற்றறிக்கை.
10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இரண்டு இடங்களில் தி.மு.க. அரசு என்ற வார்த்தைகள் இடம் பெற்ற காரணத்தால், அதனை அழிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த அரசு மற்றப் பாடப் புத்தகங்களில் நீக்கியுள்ள பகுதிகள் எல்லாம் எத்தகையது என்பதை நீங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment