தி.மு.க.வினர் மீதான நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 4 நீதிபதிகளை நியமித்து தலைமை நீதிபதி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்குகளை போலீசார் பதிவு செய்து வருகிறார்கள். இதில் முன் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, எம்.எல்.ஏ. அன்பழகன் உள்பட தி.மு.க.வினர் பலர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு முன்ஜாமீன் வழங்கினார். பின்னர் என்.கே.கே.பி.ராஜா வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரிக்கும்போது, அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் நீதிமன்றத்தில் கூறினார். இதனால் தி.மு.க.வினர் வழக்கை விசாரிக்க நீதிபதி ராஜசூர்யா மறுத்து விட்டார்.
இதனால் வேறு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க. வக்கீல் என்.ஜோதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். தி.மு.க.வினர் வழக்கை விசாரிக்க நீதிபதி சுதந்திரம் மட்டும் நியமிக்கப்பட்டார். அவரிடம் அதிகமான வழக்குகள் பதிவாவதால், வழக்கு விசாரணையில் கால தாமதம் ஏற்பட்டது. இதுபற்றி வக்கீல் ஜோதி மீண்டும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி வழக்குகள் கால தாமதம் பற்றி குறிப்பிட்டார். இதனால் தலைமை நீதிபதி, நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க.வினர் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் கே.என்.பாஷா, வாசுகி, மதிவாணன், சுதந்திரம் ஆகிய 4 பேரை நியமித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து ஒரு வாராமாக விசாரணைக்கு வராமல் இருந்தது.
தற்போது 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், பொங்கலூர் பழனிச்சாமி மனு நீதிபதி மதிவாணன் முன் 29.08.2011 அன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி பாஷா தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த பெஞ்ச் 29.08.2011 அன்று விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசாரணைக்கு வரவில்லை.
நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் முன் ஜாமீன் மனுக்களை விசாரிக்க, 4 நீதிபதிகளை நியமித்துள்ளது உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை என்று வக்கீல் வி.மனோகர் கூறினார்.
No comments:
Post a Comment