�ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விரைவுபடுத்தும்படி நீதிமன்றத்தின் உதவியை நாட, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு உரிமை உண்டு. இந்த வழக்கில் அரசால் நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாதிட முடியும்� என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்களிடம் மேல்விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா. சசிகலா, சுதாகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் புதிய வக்கீலும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அதில், �ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்களிடம் மேல் விசாரணை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது.
வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்� என கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெகன்னாதன், 19.08.2011 அன்று மாலை அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
விசாரணை அதிகாரிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் மறைமுகமாக கைகோர்த்து சொத்து குவிப்பு வழக்கை முறியடிக்க முயற்சிக்கலாம் என கருதியே தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, இந்த வழக்கை விரைவுபடுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாட, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு முழு உரிமை உள்ளது. அவர் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால் மட்டுமே இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய உரிமையில்லை என கருதக் கூடாது. அவர் இந்த வழக்கில் முதலில் இருந்தே தொடர்புடையவர்.
இந்த வழக்கை பொறுத்த வரை, அரசு தரப்பு வக்கீலாக யாரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. விசாரணை அதிகாரிகள் தரப்பில் தனியாக வக்கீல்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றால், அவர் இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 24(1)ன் கீழ் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டு வாதாட முடியும். வேறு யாராலும் வாதாட முடியாது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என்பதை காண முடியவில்லை. அவரிடம் குறைகளை சுட்டிக்காட்டவோ, குற்றம் கண்டுபிடிக்கவோ விசாரணை அதிகாரிகளுக்கு உரிமையில்லை. விசாரணை அதிகாரிகள் அவருக்கு உதவியாக மட்டுமே இருக்க வேண்டும்.
மேலும், 173(8)ன்படி. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்விசாரணை நடத்த முடியுமா என்பது குறித்து விசாரித்து முடிவு எடுக்க செப்டம்பர் 12ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்கிறேன். அதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்விசாரணை எதையும் நடத்தக் கூடாது.
இவ்வாறு நீதிபதி ஜெகன்னாதன் தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக வக்கீல்கள் ராஜீவ் தவானும், நானையாவும் கூறினர்.
No comments:
Post a Comment