தூத்துக்குடியில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது மேலும் 2 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். கடந்த 21.5.2011ல் ஆறுமுகநேரி நகர திமுக அலுவலகத்தை சிலர் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பாக ஆல்நாத் என்பவர் மீதும், அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் ஒரு வழக்கும், அதே நாள் ஆறுமுகநேரியில் சுரேஷ் தம்பி ராஜேஷ் என்பவர் நடத்தி வந்த டாஸ்மாக் பார் மீது வெடிகுண்டு வீசியது தொடர்பாக மற்றொரு வழக்கையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், 11.08.2011 அன்று மதியம் 2 மணியளவில் தூத்துக்குடி கந்தன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், வீமராஜ், சப்&இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் சோதனை நடத்த அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், போலீசார் தங்களுக்கு அதற்கான அதிகாரம் உள்ளதாக கூறி வீட்டுக்குள் சென்று சோதனையிட்டனர். வீட்டில் உரிமம் பெற்று வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியையும், 100 தோட்டாக்கள் இருந்ததை பார்த்தனர்.
சோதனை முடிந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் அன்னராஜ் செல்போனில் உயர் அதிகாரிகளிடம் பேசினார். பின்னர் மீண்டும் வீட்டுக்குள் சென்று துப்பாக்கியையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்வதாக தெரிவித்தார். போலீஸ் நிலையத்தில் வந்து தகுந்த ஆவணங்களை காட்டி கைத்துப்பாக்கியை பெற்றுச்செல்லுமாறு குடும்பத்தினரிடம் கூறினார். தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள அவரது அலுவலகத்திலும் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், அங்கு எதுவும் சிக்காததால் போலீசார் திரும்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment