ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சீமான். இவர் சென்னையில் வசித்து வருகிறார். அங்கு சீமான் டுட்டோரியல் கல்லூரி நடத்தி வருகிறார். ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதாவை எதிர்த்து, திமுக சார்பில் சீமான் போட்டியிட்டார். இத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். தேர்தல் வாக்குப்பதிவு 2006 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி நடந்தது.
வாக்குப்பதிவின் போது 137 வது வாக்குச்சாவடியான கண்டமனு�ர் அருகேயுள்ள ராமச்சந்திராபுரம் வாக்குச்சாவடியில் புகுந்து வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தகராறு செய்ததாகவும், வாக்குப்பதிவிற்கு இடையூறு செய்ததாகவும், படிவங்களை கிழித்ததாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் வாக்குச்சாவடி அலுவலர் கொடுத்த புகாரின்படி கண்டமனு�ர் காவல் நிலையத்தில் 448, 353, 506(1), 132, 136, ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சீமான் மற்றம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த பாண்டி ஆகிய இருவர் மீது வழக்கு ஆண்டிபட்டி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் பாண்டி வழக்கில் ஆஜராகி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வழக்கிற்கு சீமான் ஆஜராகவில்லை.
இதையடுத்து மாஜிஸ்திரேட் சுந்தரராஜன் சீமானுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார். 11ம் தேதி ஆண்டிபட்டி நீதி மன்றத்தில் ஆஜர் செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை சென்ற போலீசார் சீமானை கைது செய்து ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். சீமானுக்காக வழக்கறிஞர்கள் சுப்பிரமணி, ஆசையன், சுகுமார், மகேந்திரன், தெய்வேந்திரன், அம்சமணி, பாலமுருகன் ஆகியோர் ஆஜராயினர். சீமானை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி சுந்தரராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து சீமான் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment