பணம் தர மறுத்த வங்கி மீட்பு பிரிவு ஏஜென்டை தாக்கியதாக திமுக பகுதிச் செயலாளர் ஒச்சுபாலுவை போலீசார் 06.08.2011 அன்று கைது செய்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்னையில் கோர்ட் உத்தரவில் 06.08.2011 அன்று போலீசார் இவரை வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர்.
மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் புறா மோகன் என்ற மோகன்தாஸ் காந்தி. தனியார் வங்கி மீட்பு பிரிவு ஏஜென்ட். கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஒச்சுபாலு(50). திமுக பகுதிச் செயலாளர். கடந்த 2010ஜன.21ல் மோகன்தாஸ் காந்தி வீட்டிற்கு ஒச்சுபாலு தலைமையில் ஒரு கும்பல் சென்று, மத்திய அமைச்சர் முக அழகிரி பிறந்தநாள் செலவுக்காக 50ஆயிரம் ரூபாய் கேட்டதாக தெரிகிறது. மோகன்தாஸ் காந்தி பணம் தர மறுத்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் மறுநாள் 22ம்தேதி இரவில் புட்டுத்தோப்பில் உள்ள திருமணமகாலில் மோகன்தாஸ் காந்தியின் நண்பர் பிரவீன்குமார் இல்லத் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்காக அப்பகுதியில் பத்தாயிரம் ரூபாய் செலவில் மோகன்தாஸ் காந்தி மிகப்பெரிய பேனர் வைத்துள்ளார். இதைக் கண்ட ஒச்சுபாலு உள்ளிட்டோர், ‘அமைச்சரின் பிறந்தநாளுக்கு 50ஆயிரம் இல்லையென்று சொன்னாய், ஆனால் நண்பன் வீட்டு திருமணத்திற்கு மட்டும் பேனர் வைக்க காசு எப்படி வந்தது’ என்று சண்டையிட்டனர்.
மேலும் ஒச்சுபாலு, இவரது நண்பர்கள் சேட்சிவா, கார்த்திக், தங்கையா என்ற பிரபாகரன், விவேக், சிங்கி சரவணன், குருவி விஜய், தனியமலை, காந்தி செல்லப்பாண்டி, ஆரோக்கியம், அழகுராஜா என 11பேர் சேர்ந்து மோகன்தாஸ் காந்தியை தூக்கிச் சென்று பொன்னகரத்தில் உள்ள ஒச்சுபாலு கார் ஷெட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மோகன்தாஸ் காந்தி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் கரிமேடு போலீசார் ஒச்சுபாலு தவிர மற்ற 10பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் குற்றவாளியாக இல்லாமல் ஒச்சுபாலுவை போலீசார் சாட்சியாக சேர்த்ததாக தெரிகிறது. வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் பின்னர் முன் ஜாமீன் பெற்றனர்.
இதுபற்றி அறிந்த மோகன்தாஸ் காந்தி மதுரை ஐகோர்ட் கிளையில், ‘திமுக கட்சிப் பொறுப்பில் இருந்ததால் ஒச்சுபாலு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், சாட்சியாக்கி இருப்பதாகவும். ஒச்சுபாலுவையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமெனவும்’ புகார் தெரிவித்தார். கோர்ட் உத்தரவில் மதுரை கரிமேடு போலீசார் இவ்வழக்கில் ஒச்சுபாலுவையும் குற்றவாளியாகச் சேர்த்தனர். மேலும் இவர் மீது 147, 148, 365, 342, 323, 324, 506(1) ஆகிய 7பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை ஒச்சுபாலுவை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஒச்சுபாலு ரிமாண்ட் செய்யப்பட்டார்.
சுற்றி வளைத்த போலீஸ்!
மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே பகல் 12மணியளவில் ஒச்சுபாலு திமுகவினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வைகை தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். மற்றவர்களை போகச் சொல்லிவிட்டு, ஒச்சுபாலுவை மட்டும் கமிஷனர் விசாரணைக்கு அழைத்து வரச்சொன்னதாகக் கூறி வேனில் ஏற்றிச் சென்றனர். புகார் குறித்து ஒச்சுபாலு கேட்டபோது போலீசார் எதுவும் கூறவில்லை. திடீர்நகர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஒச்சுபாலுவை இரவு வரை வைத்திருந்தனர். திமுக நிர்வாகிகளிடமும் ஒச்சுபாலு மீதான புகார் குறித்து ஏதும் சொல்லவில்லை. இரவில் அவர் மீது 2010 ஜனவரியில் நடந்த பிரச்னையில், கோர்ட் உத்தரவுப்படி வழக்கில் சேர்த்து தற்போது கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment