நில அபகரிப்பு வழக்கில் திமுக கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் வாசுகி முருகேசனின் கணவர், தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் அருகே உள்ள தளவாபாளையத்தை சேர்ந்த மணி என்பவரின் மனைவி பார்வதி (42). இவருக்கு சொந்தமான நிலத்தை வாங்கிக்கொண்டு அதற்கான தொகைக்கு பதிலாக குறைந்த தொகைய தந்து ஏமாற்றியதாக திமுக கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் வாசுகி முருகேசனின் கணவர், தம்பி ஆகியோர் ஏமாற்றிவிட்டதாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பார்வதி புகார் அளித்தார். புகாரில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 71 சென்ட் நிலத்தை கரூர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வாசுகி முருகேசனின் கணவர் முருகேசன், அவரது தம்பியும் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ரவிக்குமார் ஆகியோர் வாங்கியதாகவும், அதற்கு கடந்த 2007 ஜூலை 16ம் தேதி ரூ.1.24 லட்சம் மட்டும் கொடுத்ததாகவும், மீதிப்பணத்தை கேட்டபோது தர மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் முருகேசன், ரவிக்குமார் ஆ�கியோர் மீது வழக்குப்பதிவு செய்து 08.08.2011 அன்று கைது செய்தனர். வழக்கில் சட்டவிரோதமாக கூடுவது, வழிமறித்து, ஆயுதத்துடன் மிரட்டல் விடுத்தல், மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளை குறிப்பிட்டிருந்தனர்.
முருகேசனையும், ரவிக்குமாரையும் கரூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி அனுராதா முன் ஆஜர்படுத்தினார்கள். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கறிஞர்கள் குணசேகரன், மணிராஜ், ராஜேந்திரன், சோமசுந்தரம், செந்தில்குமார், பிரகாஷ், மணிவாசகம், பிரபாகரன், லட்சுமணன் உள்ளிட்டோர் முருகேசன் மற்றும் ரவிக்குமாருக்கு ஜாமீன் கேட்டு கரூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் 08.08.2011 அன்று மனு தாக்கல் செய்தனர்.
பொய்வழக்கு
கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கொண்டுவந்த போது, நிருபர்களிடம் ரவிக்குமார் கூறுகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொய்யான வழக்கினை போலீசார் தொடர்ந்துள்ளனர். அரசியல் உள்நோக்கத்தோடும், கட்சியை களங்கப்படுத்தி விடலாம் என்று நினைத்தும் தொடரப்பட்ட வழக்கு இது என்றார்.
இருவரும் கைது செய்யப்பட்டதை அறிந்து மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் பிரபு, பாலகுரு, ராமசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு, ஒன்றிய செயலாளர்கள் ரகுநாதன், கந்தசாமி, நகர செயலாளர்கள் கனகராஜ், கந்தசாமி, மகளிர் அணி அமைப்பாளர் மகேஸ்வரி, சாமிநாதன், கோவிந்தராஜ், மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கோர்ட் முன் திரண்டனர்.
No comments:
Post a Comment