வாய்தா மேல் வாய்தா வாங்காமல் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க ஜெயலலிதா தயாராக உள்ளாரா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் நகர, ஒன்றிய திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு, திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் 30.01.2011 அன்று இரவு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு தலைமை வகித்தார். நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி, மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் மதிவாணன், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநில விவசாய அணி இணை செயலாளர் கோட்டூர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இன்று (நேற்று) காலை திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்துள்ளனர். பஸ்சில் படியில் பயணம் செய்து விபத்துக்குள்ளாகி காயமடைந்த பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்க பூண்டி கலைவாணன் முயற்சி மேற்கொண்டார். சிகிச்சை பலனின்றி இறந்த மாணவனின் உடலை பெற்று அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மாணவனின் சாவுக்கு இவர் மீது காரணம் கற்பித்து கைது செய்துள்ளனர். வேண்டுமென்றால் நேற்று (நேற்று முன்தினம்) என்னை வரவேற்க திருச்சி ஏர்போர்ட்டுக்கு அவர் வந்த போது கைது செய்திருக்கலாம். அல்லது இன்று (நேற்று) தஞ்சையில் இருந்து என்னை வரவேற்று அழைத்து செல்ல வந்த போது கைது செய்திருக்கலாம். அதை விடுத்து செல்லும் வழியில் தடுத்து கைது செய்ய போலீசார் முயன்றனர்.
மாணவன் சாவு தொடர்பாக பூண்டி கலைவாணன் மீது புகார் கொடுக்க, இறந்தவரின் குடும்பத்தாரோ, உறவினர்களோ, அதிகாரிகளோ முன்வராத நிலையில் கலெக்டரிடம் இருந்து புகாரை பெற்று கைது செய்ய வந்தனர். வாகனத்தை தடுத்து நிறுத்தி, வழிமறித்து போலீஸ் வாகனங்களை சாலையை மறித்து நிறுத்தி அவரை கைது செய்ய வந்தனர். வாரன்ட் உள்ளதா அல்லது எழுதிக்கொடுத்துவிட்டு அழைத்து செல்லுங்கள் என்றோம். அவரை கைது செய்வதென்றால் எங்களையும் அழைத்து செல்லுங்கள் என்று கூறி மறியல் செய்தோம்.
மறியல் செய்ததற்காக கைது செய்வதென்றால் முதலில், சாலையை மறித்து வாகனங்களை நிறுத்திய போலீசாரைத்தான் கைது செய்ய வேண்டும்.
ஆனால் எங்களை கைது செய்தனர். எந்தவொரு தொண்டனுக்கு துன்பம் வந்தாலும் உடனே ஓடிவந்து உதவுகிற கட்சி திமுக. புகார்கள் கிடைக்காமல் கலெக்டரை புகார்தாரர் ஆக்கியுள்ளனர். இன்னும்கூட நேரம் அதிகமாகி விடவில்லை. தெரியாமல் புகார் கூறிவிட்டேன் என்றால் அவர் தப்பித்துக்கொள்ளலாம்.
திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவந்த திட்டம் என்பதால், ஆட்சிப்பொறுப்பேற்ற உடனே சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றினர். ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தோம். இப்போது பலரும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்துகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கை சீர்செய்கிறோம் என்றனர். ஆனால் கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. நில அபகரிப்புக்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தி 2006 முதல் 2011 வரை நடந்த நில அபகரிப்பு வழக்குகளை கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர். உதாரணமாக 2007ல் அப்போதைய மார்க்கெட் விலைக்கு நிலத்தை விற்ற ஒருவர், இப்போது விற்றால் அதிக லாபம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் புகார் கொடுக்க முன்வரலாம். அதிலும் திமுகவினர் நிலம் வாங்கியது தொடர்பாக மட்டுமே குறி வைத்து புகார்கள் பெறப்பட்டு வழக்கு பதியப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை தருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் 2001 முதல் 2006 வரை அதற்கு முன் நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ள நில அபகரிப்பு புகார்கள் பற்றி கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்காதது ஏன். அப்படி எடுத்தால் சிறுதாவூர், கொடநாடு வழக்குகளில் அதிமுகவினர் வந்துவிடுவார்கள் என்று இப்படி செய்கிறார்களா.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா இதுவரை 108 முறை வாய்தா வாங்கியுள்ளார். 2010ல் 30க்கும் மேற்பட்ட முறை வாய்தா வாங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே வாய்தா வாங்க வேண்டும். ஆனால் இவர்களோ மொழிபெயர்த்து தரவேண்டும், மொழிபெயர்ப்பாளரை விசாரிக்க வேண்டும் போன்ற எண்ணற்ற காரணங்களை கூறி வாய்தா வாங்கியுள்ளனர்.
நீதிமன்றம் சென்று வழக்கை சந்திக்க தெம்பும், யோக்கியதையும் இல்லாத ஜெயலலிதா நில அபகரிப்பு வழக்கில் திமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இத்தகைய கைது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். வாய்தா வாங்காமல் நீதிமன்ற விசாரணைக்கு நியாயமாக ஒத்துழைக்க ஜெயலலிதா தயாரா.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment