கோவையில் சிறையில் உள்ள எம்எல்ஏ ஜெ.அன்பழகனை சென்னைக்கு அழைத்து வந்து தினமும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். சபை முடிந்ததும் புழல் சிறையில் அடைக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேப்பாக்கம்& திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஜெ.அன்பழகனை நில அபகரிப்பு வழக்கில், திருப்பூர் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஜெ.அன்பழகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி ராஜசூர்யா 08.08.2011 அன்று விசாரித்தார். மனுதாரர் சார்பாக வக்கீல் என்.ஜோதி ஆஜராகி, “மனுதாரர் மீது பொய் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதற்காக அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்து வைத்துள்ளனர், சிறையில் உள்ள அவர் தொகுதி மக்களுக்காக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும், இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்றார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான பப்ளிக் பிராசிகியூட்டர் ஐ.சுப்பிரமணியம் பதில் அளிக்கும் போது, “சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தி.மு.க. அறிவித்துள்ளது. எனவே இதை நீதிமன்றம் ஏற்க கூடாது, இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும்” என்றார்.
இரு தரப்பு வாதத்திற்கு பின்னர், “கோவை சிறையில் உள்ள மனுதாரர் அன்பழகனை சென்னைக்கு அழைத்து வர வேண்டும். தினமும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். கூட்டம் முடிந்ததும் மாலையில் அவரை புழல் சிறையில் அடைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். விசாரணையை 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment