கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 11, 2011

வென்றது சமச்சீர் கல்வி : தமிழக அரசின் பிடிவாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் சூடு



சமச்சீர் கல்வியை 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. �அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது� என்று தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. பல தரப்பினரும் நடத்திய அமைதி போராட்டத்துக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம், அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடதிட்டம் அமலாகிறது. முதல்வர் ஜெயலலிதாவும், சமச்சீர் கல்வி தீர்ப்பை உடனே ஏற்பதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை நிறுத்த சட்ட திருத்தம் கொண்டு வந்து, பழைய பாடத்திட்டத்தை அமல்படுத்த அதிமுக அரசு முயற்சித்தது. இதை எதிர்த்து 10 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 18ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், �உடனடியாக பாடபுத்தகங்களை வழங்க ஆரம்பிக்க வேண்டும். வரும் 22ம் தேதிக்குள் அந்த பணியை முடிக்க வேண்டும்� என்று தீர்ப்பு கூறியது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டிலும் அரசு கோரிய தடையை வழங்க முடியாது என்றும், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுவின் மீது 26ம் தேதி முதல் விசாரணை நடந்து முடிந்தது. இதற்கிடையே பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் அச்சிடும் பணியை அரசு ஒரு புறம் மேற்கொண்டு வந்தது.
ஆனால், நீதிமன்றம் கூறிய தீர்ப்பின்படி நடந்து கொள்ளாத தமிழக அரசு, பாடப்புத்தகங்களை வழங்காமலே காலம் கடத்தி வந்தது. உயர் நீதிமன்றம்
சொன்னபடி ஜூலை 22ம் தேதிக்குள்ளும் கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி ஆகஸ்ட் 2ம் தேதிக்குள்ளும் புத்தகம் வழங்கவில்லை. ஆனால், ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் கொடுத்து விடுவோம் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதன்படியும் புத்தகம் கொடுக்கவில்லை. இதற்கிடையே பழைய பாடப்புத்தகங்களை அச்சிட்டு மாவட்டங்களில் இருப்பு வைக்கும் பணியை மட்டுமே பள்ளிக் கல்வித் துறை செய்து வந்தது.
இதற்காக ஸீ200கோடி செலவாகியுள்ளது. 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட புத்தகங்கள் என்பதால் அதை ஆசிரியர்கள் நடத்தி வந்தனர். மற்ற வகுப்புகளுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் வழங்காமல் உள்ளதால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தகம் வழங்க வேண்டும் என்று பள்ளிகளில் முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நடந்த விசாரணையின்போது, �இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பழைய பாடப்புத்தகங்களை வழங்க உள்ளது� என்று அரசு தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டது.
மேலும் பாடப்புத்தகங்களை 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அடுத்த கட்ட கெடுவையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும் தமிழக அரசு புத்தகங்களை வழங்காமல் இருந்தது.
இந்நிலையில் 09.08.2011 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், சவுகான், தீபக்வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினர். 3 நீதிபதிகளும் சமச்சீர் கல்வி குறித்து ஒருமித்த கருத்தையே தெரிவித்து இருந்தனர். 09.08.2011 அன்று காலை 10.34 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு மற்றும் பொது மக்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துகளில் 25 காரணங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. வரும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர். இது தவிர தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

25 காரணங்கள் என்னென்ன? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம் :
சமச்சீர் கல்வி வழக்கில் 09.08.2011 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர் . நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று 25 காரணங்களை கூறிய தீர்ப்பு அளிக்கிறோம்.
அவை வருமாறு:‘
1. தமிழகத்தில் தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.
2. கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.
3. சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
4. கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.
5. கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.
6. புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது.
7. தமிழக அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
8. தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
9. சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
10. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.
11. கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
12. தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடி ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.
13. தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.
14. சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.
15. பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.
16. ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும்.
17. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
18. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.
19. கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
20. சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.
21. ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.
22. தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.
23. சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.
24. ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.
25. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.
சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும்.
ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது. அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.

அரசின் கையில் தேர்வுத்தாள், மார்க்ஷீட்

சமச்சீர் கல்வியை வரும் 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறைகளை உருவாக்கும் பணிகள் தொடங்கும். குறிப்பாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு தாள்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. இதற்கென தனி ஆணை வழங்க வேண்டும்.
ஏற்கெனவே அனைத்து பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. அதாவது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்கள் 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சமச்சீர் கல்வியின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என தெரிகிறது.

4 பாடத்திட்டம் இனி இல்லை

தமிழகத்தில் 33,326 தொடக்கப் பள்ளிகள், 10815 நடுநிலைப் பள்ளிகள், 5020 உயர்நிலைப் பள்ளிகள், 5369 மேனிலைப் பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கி வருகின்றன. இதுதவிர 42 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 30 ஓ.எஸ்.எல்.சி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் தற்போது சமச்சீர் கல்வி பின்பற்றப்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
நான்கு பாடத்திட்டத்தின் கீழ் படித்து வரும் மாணவர்கள் இனிமேல் பொதுப் பாடத்திட்டத்தின் கீழ் வரும் சமச்சீர் கல்வி பாடங்களை படிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் பெயர் மாறும்
சமச்சீர் கல்வி முறையை கொண்டு வரும் போதே தற்போது நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து பொதுக் கல்வி வாரியத்தை அரசு உருவாக்கியது. இதற்காக ஒரு சட்டத்தையும் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின்படி இனிமேல் தமிழகத்தில் ஒரே கல்வி வாரியம் தான் செயல்படும். 4 கல்வி முறைகள் இருக்காது. மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ இந்தியன் என இதுவரை இருந்து வந்த கல்வி முறைகளுக்கு இனிமேல் தனித்தனி இயக்குநர்கள் இருக்க வாய்ப்பில்லை.
தனியார் பள்ளிகளும், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என்றெல்லாம் பெயர்களில் இயங்காது. பெயர்கள் பொதுவாக இருக்கும். எனவே மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி பள்ளிகள் இனிமேல் பொதுக்கல்வி வாரியத்தின் கீழ் வந்துவிடும். சமச்சீர் கல்வி அனைத்து வகுப்புகளுக்கும் வந்துவிட்டால் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு நடக்கும் காலங்களில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்தான் கேள்வித்தாளை முடிவு செய்வார்கள்.
மெட்ரிக். பள்ளிகள் அத்தியாயம் முடிகிறது :

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் முதல் முறையாக 1974ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் ஆலமரம் போல பரந்து, விரிந்து நகரங்கள் முதல் கிராமங்கள் வரை என்று 16 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மெட்ரிக் பள்ளிகளின் அத்தியாயம் முடிந்து, பொதுக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்குகின்றனர்.
மச்சீர் கல்வி தீர்ப்பு எதிரொலி - அமைச்சர் அவசர ஆலோசனை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்தும், சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்குவது குறித்தும் அவசர ஆலோசனை கூட்டம் 09.08.2011 அன்று மாலை நடந்தது. கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 9 கோடி சமச்சீர் கல்வி புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை :

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்துவதற்காக, முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் கடந்த 2006ம் ஆண்டு ஒரு குழுவை தமிழக அரசு உருவாக்கியது. அந்த குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று பள்ளிக் கல்வியில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
2007ல் முன்னாள் மாநகராட்சி ஆணையர் எம்.பி.விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
முத்துக்குமரன் குழு அளித்த கருத்துகள், பரிந்துரைகள் ஆகியவற்றை பரிசீலித்து நிர்வாக ரீதியாக சமச்சீர் கல்வியை நிறைவேற்ற நடைமுறை சாத்தியம் உள்ள ஆலோசனைகளை தொகுத்து வழங்க ஒரு நபர் குழுவுக்கு அரசு உத்தரவிட்டது. இதற்கு பிறகு மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் பயனுள்ள நடைமுறைகளை தெரிந்து வர 2008ம் ஆண்டு ஒரு கல்வியாளர் குழுவை அரசு அமைத்தது. அந்த குழு மற்ற மாநிலங்களுக்கு சென்று விரிவான அறிக்கை சமர்ப்பித்தது.
26.8.2009ல் அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள நான்கு விதமான பாடத்திட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமுடைய பாடத்திட்டத்தை கொண்டு வர திமுக அரசு முடிவு செய்தது. இதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டது.
சட்ட முன்வடிவின் அடிப்படையில் 2010ம் ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ம் ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த அரசு அறிவித்தது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு :

சமச்சீர் கல்வியை 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியின் முக்கிய அம்சமான பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அனைத்து பள்ளி வாரியங்களை இணைத்து ஒரே வாரியத்தை உருவாக்குவது போன்ற முத்துக்குமரன் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி பொதுப் பள்ளியை நோக்கி பள்ளிக் கல்வி முன்னேற ஆவன செய்ய வேண்டும்.
தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்):
உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வி வழக்கில் மிகச் சரியான தீர்ப்பை வழங்கி அதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்து விட்டது. அரசு விரைந்து நடைமுறைப்படுத்தவேண்டும். ஆசிரியர்களும் ஒத்துழைத்து திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
பொன்.ராதாகிருஷ்ணன்(பாஜ):
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டரை மாதங்களாக பள்ளி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குக்கு மிகப் பெரிய வெற்றியாகும். இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் மேலும் நடக்கக் கூடாது. இந்த தீர்ப்பை தமிழக பாஜ முழு மனதோடு வரவேற்கிறது.
ராமதாஸ் (பாமக):
சமச்சீர் கல்வி தொடர்பான விஷயத்தில் தமிழக அரசின் பிடிவாதப் போக்கால் காயமடைந்திருந்த மனங்களுக்கு மருந்து போடும் வகையில் அமைந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது,
இந்தியாவின் எதிர்கால தூண்களான மாணவர்களின் நலனில் அக்கறையின்றி செயல்பட்டு 70 பள்ளி வேலை நாட்களும், ^500கோடிக்கு அதிகமான வரிப் பணமும் வீணடிக்கப்படுவதற்கு காரணமான அனைவரும் இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும்.
வைகோ (மதிமுக):
ஒரு கோடியே 22 லட்சம் மாணவர்களின் கல்வி உரிமையையும், எதிர்கால நலனையும் பாதுகாத்து சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அனைத்து வகுப்புகளிலும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு பெற்றோர்களின் மனதில் பால் வார்த்துள்ளது. தேர்தலில் ஆட்சிகள் மாறினாலும், புதிதாக வரும் அரசு மாணவர்கள் நலனைப் பாதிக்கும் விதத்தில் முடிவு எடுக்கக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்த பிரச்னையில் அதிமுக அரசு கடைப்பிடித்த பிடிவாதம் பொதுமக்களின் நலனுக்கு, மாணவர்களின் உரிமைக்கு எதிரானது என்பதை உணர்த்துகின்ற தீர்ப்பாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதை தவிர தமிழக அரசுக்கு இனி வேறு வழி இல்லை. இழந்து போன இரண்டு மாத காலத்தை இந்த அரசு மாணவர்களுக்கு திருப்பித் தர முடியுமா?
கி.வீரமணி (திராவிடர் கழகம்):
உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பினை வழங்கியுள்ளது. பெற்றோர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது. இதன் மூலமாவது முதல்வர் புரிந்து கொண்டு ஆட்சியை நடத்த முன்வர வேண்டும். மக்கள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டுமே தவிர, பழி வாங்குவதற்காக அல்ல என்று காட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
ஈஸ்வரன் (கொமுக):
திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆட்சி மாறியதால் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இது தவறான நடவடிக்கையாகும். மாணவர்கள் நலன்தான் முக்கியமே தவிர திமுக கொண்டு வந்தது என்ற விரோத மனப்பான்மை தேவையற்றது. சமச்சீர் கல்வியை அமல்படுத்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்):
முதல்வர் ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொண்டு, சமச்சீர் கல்வி உடனே நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். அதனால், சமச்சீர் கல்வி உடனடியாக அமல்படுத்தப்படும்.
பெரியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் தங்கராசு :
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் இப்போதைய அரசு இவ்வளவு சிரமப்பட்டிருக்க தேவையில்லை.
சமச்சீர் கல்வி பிரச்னையால், கிட்டத்தட்ட 2 மாதமாக மாணவர்கள் புத்தகங்கள் இல்லாமல் பள்ளிக்குச் சென்று வந்தனர். ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் உழைத்தால் மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் உரிய காலத்தில் நடத்தி முடிக்க முடியும்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழக நிறுவனத் தலைவர் மாயவன்:
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் கல்வித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி :
பொதுப்பாடத் திட்டத்தை அரசு உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும். இதன் அடுத்த கட்டத்துக்கு சமுதாயமும், அரசும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு தலைவர்கள் கூறியுள்ளனர்.

வீண் பிடிவாதத்திற்கு விழுந்த அடி - சமச்சீர் கல்வி தீர்ப்பு பற்றி கல்வியாளர்கள் கருத்து :
சமச்சீர் கல்வியை செயபடுத்துவதில் தமிழக அரசு எந்த பாரபட்சமும் காட்டாமல் உரிய காலத்தில் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வா.அண்ணாமலை (அனைத்திந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய செயலாளர்):
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு, கடந்த இரண்டரை மாதமாக 1 கோடியே 30 லட்சம் மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனி அரசியல் மாச்சரியங்களை பார்க்காமல் பொது நோக்குடன் முதல்வர் செயல்பட வேண்டும்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் செயலாளர்):
‘மாணவர்களுக்கு உடனடியாக சமச்சீர் புத்தகம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள இந்த தீர்ப்பு மகிழ்ச்சி தரக்கூடியது.
மார்ட்டீன் லூதர்கிங் ஜூனியர், �அடிமையின் பிள்ளையும் முதலாளியின் பிள்ளையும் கைகோர்த்து செல்ல வேண்டும்� என்று கூறினார். அதைபோல ஏழை, பணக்கார குழந்தைகள் ஒரே பாடத் திட்டத்தை படிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்றும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
கனகசுந்தரம் (முன்னாள் கல்வித் துறை அதிகாரி):
எதிர்பார்த்த தீர்ப்புதான். தமிழக அரசு உடனடியாகவும், மகிழ்ச்சியுடனும் இதை செயல்படுத்த வேண்டும். சமத்துவ சமுதாயத்துக்கு முன்னோடியாக தமிழகம் இதன் மூலம் திகழ உள்ளது. சமச்சீர் கல்வியை இதற்கான முதல்படியாக நினைத்து அரசு செயல்பட வேண்டும்.
எஸ்.எஸ்.ராஜகோபாலன் (கல்வியாளர்):
தமிழக அரசு வீண் பிடிவாதம் பிடித்ததற்கு விழுந்த அடி இது. 200 வேலை நாட்களில் 50 வேலை நாட்கள் வீணாகிவிட்ட நிலையில் மீதம் உள்ள 150 வேலை நாட்களில் பாடங்களை நடத்த வேண்டும். குறிப்பாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக வினாத்தாள் வடிவமைக்க வேண்டும். பின்னர் மாதிரி வினாத்தாள் தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும்.

2006 முதல் சமச்சீர் கல்வியின் பயணம்
சமச்சீர் கல்வி திட்டம் கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோதே தனியார் பள்ளிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து இந்த திட்டம் பள்ளிகளில் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் பயணம் குறிப்பு இங்கே...
* 2006&தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்துவது என்ற முடிவை தமிழக அரசு ஏற்றது. முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை அரசு உருவாக்கியது.
* முத்துக்குமரன் குழு ஒரு ஆண்டு காலம் தமிழகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. பின்னர் பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பித்தது.
* 2007&குழுவின் பரிந்துரையை ஆழ்ந்து பரிசீலனை செய்ய, சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் எம்.பி.விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
* ஒரு நபர் குழு சமச்சீர் கல்வி உருவாக்குதல் குறித்து திட்டவட்டமான ஆலோசனைகளை அரசுக்கு சமர்ப்பித்தது.
* 2008&மற்ற மாநிலங்களில் பள்ளிக் கல்வித்துறையில் பின்பற்றப்படும் பயனுள்ள நடைமுறைகளை தெரிந்து வர ஒரு கல்வியாளர் குழுவை அரசு அமைத்தது.
* இந்த கல்வியாளர் குழு சில மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிர்வாக அமைப்பு முறைகள், பாடவாரியங்கள், பாடத்திட்டம், தேர்வு முறை, பயிற்று மொழி ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
* 2009&மேற்கண்ட குழுக்கள் அளித்த பரிந்துரைகளை பற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
* தமிழகத்தில் உள்ள நான்கு வகை பாடத்திட்டங்களை கலைத்துவிட்டு ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வருவது எனவும், 2010&2011 கல்வி ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் பொதுப்பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வது, 2011&2012 கல்வி ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு பொதுப்பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வது எனவும் அரசு ஏற்றுக் கொண்டது.
* 2009 அக்டோபர்& சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் பொதுக்கல்வி திட்டம், பாடத்திட்டம், பாடநூல்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது.
* 2009 அக்டோபர்& சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் பொதுக்கல்வி திட்டம், பாடத்திட்டம், பாடநூல்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது.
* சமச்சீர் கல்வி� செயல்படுத்துவதின் முதற்கட்டமாக பொது பாடத்திட்ட வரைவு பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டது.
* 2009 டிசம்பர்&அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குநர் தலைவராக நியமனம்.
* சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் எழுத பாடவாரியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
* 2010 சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் எழுதும் பணி தொடங்கியது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 10 இணை இயக்குநர்கள் இதற்கு பொறுப்பேற்றனர்.
* 2011 ஏப்ரல்& சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் 7 கோடி அச்சிடும் பணிகள் நிறைவு பெற்றன.
* 2011 மே& சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் 44 குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.

ஆடு, மாடுகள் தான் கிடைக்கும் என்று பயந்த நேரத்தில் பாடப் புத்தகம் கிடைப்பது மகிழ்ச்சி - சுப.வீரபாண்டியன் :

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்யன் கூறுகையில்,

இன்றைய நாள் என்றைக்கும் நினைக்கப்பட வேண்டிய நாள். இனிமேல் பிள்ளைகளுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும். பாடப்புத்தகங்களே கிடைக்காது, ஆடு மாடுகள் தான் கிடைக்மோ என்று அல்லல்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பாடப்புத்தகங்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது.


நீதிமன்றம் சொல்லியிருக்கிற ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், மாணவர்களுடைய படிப்பதற்கான அடிப்படை உரிமையை இந்த அரசு மறுத்திருக்கிறது என்பது. இதைக்காட்டிலும் ஒரு அரசுக்கு கடுமையான கண்டனம் இருக்க முடியாது. படிக்கிறது மாணவனின் அடிப்படை உரிமை. ஏறத்தாழ ஒன்றரை கோடி மாணவர்கள் கடந்த இரண்டரை மாதங்களாக மறுத்திருக்கிற ஒரு பெரும் குற்றத்தை தமிழக அரசு செய்திருக்கிறது. கலைஞரின் ஆட்சியில்
மூன்றாண்டுக்கும் மேலாக சிந்தித்து கொண்டுவரப்பட்ட இந்த திட்டம், எவ்வளவு சரியானது என்பதை இன்றைக்கு காலம் மெய்ப்பித்திருக்கிறது. இது கலைஞருக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.







No comments:

Post a Comment