கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

விபத்தில் மாணவன் பலியானதற்கு மாவட்ட செயலாளரை கைது செய்தால் ஒன்றரை கோடி மாணவர்களின் படிப்பை பாழாக்கியவரை எந்த சிறையில் அடைப்பது? - மு.க.ஸ்டாலின்





1.40 கோடி மாணவர்கள் படிப்பை பாழாக்கிய ஜெயலலிதாவை அந்தமான் சிறையில் தள்ள வேண்டும் என்று சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
டசென்னை திமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே 01.08.2011 அன்று காலை 7 மணி முதல் ஆயிரக்கணக்கான திமுகவினர் கொடிகளுடன் திரண்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசாரும் வேன்களும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
நேரம் ஆக ஆக ஏராளமான திமுகவினர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 10.30 மணிக்கு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்தார். போலீஸ் அனுமதி அளிக்காததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. தடை காரணமாக மேடை அமைக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மினி லாரி மீது மேடை போல அமைக்கப்பட்டு இருந்தது. மற்றொரு வேனில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு இருந்தது. ஸ்டாலின் மேடை ஏறியதும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அதிமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, முத்துசாமி, வேங்கடபதி, சற்குணபாண்டியன், சங்கரி நாராணயன், மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், டாக்டர் கனிமொழி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஏராளமான பெண்களும் வந்திருந்தனர். விபத்தில் காயமடைந்த நடிகை குஷ்பு வாக்கர் உதவியுடன் வந்திருந்தார்.

அதிமுக அரசு பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து 01.08.2011 அன்று வடசென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
இந்த போராட்டத்திற்கு காவல் துறையிடம் முறையாக அனுமதி கேட்கப்பட்டது. 2 நாள் முன்பு திடீரென்று அனுமதி கிடையாது என்று கூறுகிறார்கள். அனுமதி கிடைக்காததால் தடையை மீறி சிறை செல்ல தயாராக இந்த போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் எத்தனையோ போராட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். கொசுவை விரட்டக் கூட போராட்டம் அறிவித்தார். அந்த போராட்டங்களைக் கண்டு கருணாநிதி பயந்து விடவில்லை. அனுமதி வழங்கினார்.
ஆனால் ஜெயலலிதா நம் போராட்டத்திற்கு அஞ்சி அனுமதி மறுத்து இருக்கிறார். இது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. திமுகவை எப்படியாவது அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று ஜெயலலிதா முயலுகிறார். திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போய் இருக்கிறார்கள். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை.
எனவே, எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் மிசா சட்டம், எத்தனையோ விசாரணைக் கமிஷன்களை பார்த்தவர்கள். அடக்கு முறைகளை சந்தித்தவர்கள். எனவே எது பற்றியும் கவலை இல்லை.
திமுக முன்னோடிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு போடுகிறார்கள். தகுந்த ஆதாரம், சான்று இருந்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கட்டும். தண்டனையை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் பொய் வழக்கு போடுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். சந்திக்க தயாராக இருக்கிறோம். வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு போட்டார்கள். அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டார். அவர் மீது வேறு வழக்கு போட்டு கைது செய்து கோவை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
தென் சென்னை செயலாளர் ஜெ. அன்பழகனை இரவு 2 மணிக்கு பயங்கர தீவிரவாதியை, பெரிய கொள்ளைக்காரணை கைது செய்வதைப் போல கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூர் சீனிவாசன் தந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சீனிவாசன் பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். பதுங்கி உள்ள ஒருவர், தலைமறைவான ஒருவர் தந்த புகாரில் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூண்டி கலைவாணன் மீது என்ன வழக்கு? சமச்சீர் கல்வி அமல்படுத்தக் கோரி திருவாரூர் பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விஜய் என்ற மாணவன் அதில் பங்கேற்று பஸ்சில் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தான். தகவல் அறிந்த கலைவாணன் விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இறந்த மாணவனின் பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தார். இதுதான் அவர் செய்த தவறு.
மாணவன் சாவுக்கு அவர்தான் காரணம் என்று போலீசார் மிரட்டியும் ஆசிரியர்களும், பொதுமக்களும் புகார் தர மறுத்து விட்டனர். வேறு யாரோ ஒரு மாணவனின் தந்தையிடம் மாணவர்களை தூண்டி விட்டதாகவும், பள்ளி செல்ல விடாமல் தடுத்ததாகவும் கடிதம் பெற்று கைது செய்கிறார்கள்.
எப்.ஐ.ஆர். அல்லது வாரண்ட் இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்றார்கள். அதைக் கொண்டு வாருங்கள் என்றதும் எங்களை சாலையில் வழி மறித்து கைது செய்து விட்டு நாங்கள் சாலை மறியல் செய்ததாக கூறினார்கள். பிறகு எப்.ஐ.ஆர். கொண்டு வந்து தந்து கலைவாணனை அழைத்துச் சென்றனர்.
ஒரு மாணவனை பள்ளி செல்ல விடாமல் தடுத்ததாக கூறி வழக்கு போட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறார்கள் என்றால், சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் 1.40 கோடி மாணவர்களின் படிப்பை பாழாக்கிய ஜெயலலிதாவை எந்த சிறையில் அடைப்பது? அந்தமான் சிறையில்தான் அடைக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சர்வாதிகார நிலை நாட்டில் உள்ளது. இதை தடுத்து நிறுத்திட, திருத்திக் கொள்ள அறவழி போராட்டம் நடத்துகிறோம். இது தீவிர போராட்டமாக மாற ஆட்சியாளர்கள் துணை நிற்க கூடாது. இந்த ஆட்சியின் அடக்குமுறை தொடர்ந்தால் வரைவில் தமிழ்நாட்டு சிறைகளை நிரப்பும் போராட்டத்தை நடத்த கருணாநிதி ஆணையிட வேண்டும். அதற்கு திமுகவினர் தயார், தயார், தயார்.

திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கட்சித் தலைமை அறிவித்ததன் பேரிலும், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. திமுக போராட்டத்தை பார்த்து அதிமுக அரசு மிரண்டு விட்டது கண்கூடாக தெரிகிறது. திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள். திமுகவை அழிக்க யாராலும் முடியாது.
இதுபோன்ற சர்வாதிகார போக்கை ஜெயலலிதா நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விரைவில், கட்சித் தலைவர் கருணாநிதி அனுமதியுடன் தமிழகம் முழுக்க சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

நம்மை கைது செய்ய போலீசார் வந்து விட்டனர். அமைதியான முறையில் கைதாவோம். கடைசியாகதான் நான் கைதாவேன். இல்லாவிட்டால் முதலில் என்னை கைது செய்து விட்டு பிறகு உங்களை அடித்து, விரட்டி விடுவார்கள்.
இவ்வாறு மு.. ஸ்டாலின் பேசினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசி முடித்ததும் காலை 11 மணிக்கு போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.
அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி வண்ணாரப்பேட்டையில் உள்ள சில திருமண மண்டபங்களில் சிறை வைத்தனர். மாலை 3 மணி அளவில் விடுவித்தனர். ஆர்ப்பாட்டம் நடந்த கலெக்டர் அலுவலகம் அருகே ராஜாஜி சாலையில் திமுகவினர் பெருமளவில் திரண்டதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, இந்த ஆர்ப்பாட்டம் எதற்காக என்றால் திமுகவினர் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு என்ன மாற்றம் வருகிறது என்று பார்ப்போம் என்றார்.

பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் -
லட்சம் திமுகவினர் கைது :

பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் 01.08.2011 அன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதிமுக அரசு பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு அரசு அனுமதி தரவில்லை. திட்டமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 01.08.2011 அன்று தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூரில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஆர்.காந்தி, முகமது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக் பாட்சா உள்ளிட்டவர்கள் கைதானார்கள்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கு.பிச்சாண்டி, வேணுகோபால் எம்.பி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆதிசங்கர் எம்.பி ஆகியோரும், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, உபயதுல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், புறநகர் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், பி. மூர்த்தி, குழந்தைவேலு, வேலுசாமி, மேயர் தேன்மொழி, ஜெயராம், கவுஸ்பாஷா, தமிழரசி, மன்னன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஜி.எம்.ஷா, ஹெலன் டேவிட்சன் எம்.பி உள்ளிட்டோரும், ஈரோடு மின்வாரிய அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் என்கேகேபி ராஜா, அந்தியூர் செல்வராஜ், மேயர் குமார் முருகேஷ், காயத்ரி சீனிவாசன் உள்ளிட்டவர்களும் கைதானார்கள்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஏராளமானவர்கள் கைதானார்கள். கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் திமுகவினரும், திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல - கி.வீரமணி :

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அறப் போராட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது இயல்பான ஒன்றாகும். சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்திவிடாமல் அறப்போராக ஆர்ப்பாட்டம் நடத்திடத்தான் திமுக அனுமதி கேட்டது.


இதனை அனுமதிப்பது ஒரு ஜனநாயக ஆட்சியின் கடமையாகும். சில இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியையும் கொடுத்துவிட்டு, பிறகு அதனை ரத்து செய்திருப்பது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகாரப் போக்கே அல்லாமல் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.


அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊருக்கு ஊர் போராட்டங்களை நடத்தினார்களே. அவற்றிற்கெல்லாம் திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டதே.


எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல. மக்கள் மத்தியில் அவப் பெயரைத்தான் தேடிக் கொடுக்கும். எனவே கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.



No comments:

Post a Comment