திமுகவினர் மீது தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக போலீஸ் டிஜிபிக்கு எதிரான புகார் மனுவை, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் திமுக வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் 05.08.2011 அன்று கொடுத்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது:
தற்போதுள்ள அதிமுக தலைமையிலான தமிழக அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இப்போதுள்ள அரசு, சட்டத்துக்கு மாறாக மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டு வருகிறது.
சமூகத்தில் நல்ல அந்தஸ்திலும், நல்ல நிலையிலும் உள்ளவர்கள் மீது தேவையில்லாமல் சில நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கவைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது பொய்யாக புனையப்பட்ட நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்று இருந்த அவர் மீது இதே போன்ற இன்னொரு பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, பெரிய ஊழல் நடந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் கடந்த 29ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். முன்னாள் திமுக எம்எல்ஏவான ப.ரங்கநாதன் என்பவரையும் கடந்த 2ம் தேதி அதிகாலையில் கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற செயல்பாடுகள் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. எங்கள் கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட எங்கள் கட்சிக்காரர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.
இதன் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகிறது. இந்த நிகழ்வுகள் குறித்து, தமிழக கவர்னர் மற்றும் தமிழக அரசின் உள்துறை செயலாளரிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மதுரைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ கருப்பையா ஆகியோர் மீது குறிப்பிட்டு அடையாளம் காட்டப்பட்ட நில அபகரிப்பு தொடர்பான புகாரில், அவர்கள் மீது எந்த கிரிமினல் வழக்கும் தொடராமல் சுதந்திரமாக விடப்பட்டுள்ளனர். இப்படி ஒரு தலைபட்சமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது.
எனவே, இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உரிய வழிகாட்டுதலை வழங்கி இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் மேலும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் காவல் துறையினரால் துன்புறுத்தப்படுகின்றனர். இவற்றை தடுத்து நிறுத்தும் வகையில் உரிய உத்தரவு பிறப்பித்து நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment