கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 31, 2010

மக்களிடம் கையேந்தும் நிலையில்தான் அரசு இருக்கிறது : கலைஞர் பேச்சு


சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு மக்கள் நிலங்களை ஒதுக்கித்தந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.


சென்னை அண்ணாசாலையில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகத்தை முதல்வர் கருணாநிதி இன்று மாலை திறந்து வைத்தார்.

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தினார். எக்ஸ்பிரஸ் அவென்யூ தலைவர் சரோஜ் கோயங்கா அனைவரையும் வரவேற்றார்.


முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.


அவர், ’’ ஒரு வளாகத்தைத் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். கோயங்கா குடும்பம் நீண்ட காலமாக எனக்கு நெருங்கிய நண்பர்களை - இன்னும் சொல்லப் போனால், இந்தக் குடும்பத்தின் தலைவர் கோயாங்கா அவர்களையே பழகி அறிந்திருந்த அனுபவ ரீதியாக உணர்ந்திருந்த குடும்பம் ஆகும்.


அப்படிப்பட்ட குடும்பத்தின் வழித்தோன்றல்கள், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் உள்ளங் கவருகின்ற அளவிற்கு “எக்ஸ்பிரஸ் அவென்யூ” வர்த்தக வளாகத்தை அமைத்து பெயருக்கேற்றாற்போல் அடிக்கல் நாட்டியதிலிருந்து கட்டிடத்தை முற்றாக முடிக்கின்ற வரையில் - “எக்ஸ்பிரஸ்” வேகத்திலேயே இதை நடத்தி நம் அனைவருடைய வாழ்த்துக்களையும் இன்றைக்குப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.


சென்னை மாநகரத்தின் தேவை நிரம்ப! அந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடிய வகையில், கோயங்கா குடும்பத்தினரைப் போன்ற ஆற்றல் வாய்ந்தவர்கள், வாய்ப்பு கொண்டவர்கள், வசதி மிக்கவர்கள் தான் இதைச் செய்ய முடியும்.

வசதியும் வாய்ப்பும் இருந்தாலுங்கூட, இதைச் செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடாது. பொது நல நோக்கிலே யாருக்கு கவனம் இருக்கிறதோ, யாருக்கு பொது நலச் சிந்தனை இருக்கிறதோ அவர்களால் தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும். கோயங்கா அவர்கள் அரசியலிலே ஈடுபாடு கொண்டிருந்த அந்தக் காலந்தொட்டு, நான் அவரை மிக நன்றாக அறிவேன்.

அவரும் என்னை மிக நன்றாக அறிவார். 87 ஆண்டுக் காலம் வாழ்ந்து தமிழகத்திலே, இந்தியத் திருநாட்டிலே அவர் ஆற்றிய பெரும் பணிகள் இன்றைக்கும் நினைவு கூரத் தக்க பணிகளாகும். அத்தகைய பணி களுக்கெல்லாம் ஒரு சிலாசாசனம் நிறுவியதைப் போலத் தான் இன்றைக்கு இந்த வர்த்தக வளாகம் இங்கே அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


தென்னிந்தியாவில் இருக்கின்ற வளாகங்கள் அனைத்தையும் விட பெரிய வளாகம் இது தான் என்று கூறுகின்ற அளவுக்கு இது இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது. திரையரங்குகள், ஓட்டல்கள் போன்ற பல வசதிகளோடு இது அமைக்கப்பட்டிருக்கின்றது’’என்று பேசினார்.


அவர் மேலும், ‘’ என்ன தான் சென்னை மாநகரம் பரப்பளவு மிகுந்தது என்றாலுங்கூட, இன்னமும் நெருக்கடியான சூழ்நிலை இருப்பதை நாம் காணுகிறோம்.

சென்னை மேலும் மேலும் வளர வேண்டும், வளம் பெற வேண்டும் மற்ற இந்தியாவிலே இருக்கின்ற பெரு நகரங்களுக்கு ஈடாக இந்த மாநகரம் விளங்க வேண்டுமென்று நினைத்தாலுங்கூட, அதற்குக் குறுக்கே பல சக்திகள் வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.


இன்னமும் பக்கத்திலே உள்ள ஆந்திராவில், கர்நாடகாவில் விமான நிலையம் பெரிய அளவிலே அமைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறோம். சின்னஞ்சிறிய மாநிலங்களில் எல்லாம் பெரிய விமான நிலையங்கள், வசதியான விமான நிலையங்கள் தோன்றியிருப்பதை காணுகிறோம்.


டெல்லியிலே இருக்கின்ற விமான நிலையத்திற்கு ஈடாக இந்தியாவிலே உள்ள மாநிலங்களில் - அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், அதற்கு அடுத்தபடியாகவாவது விமான நிலையங்கள் இருக்க வேண்டுமென்று கருதுகின்றோம்.

ஆனால் புது விமான நிலையத்திற்கு நாம் அடிக்கல் நாட்டிய மறுநாளே, ஆயிரம் பேர் அல்லது நூறு பேர் ’இந்த இடத்தை ஆக்ரமிக்காதே!’ என்று கோஷம் போட்டுக் கொண்டு, கொடி பிடித்துக் கொண்டு வருவதையும், அவர்களுக்கு சில பேர் தலைமை வகித்து வருவதையும் காணுகிறோம். நான் அவர்களையெல்லாம் வாழ விடக் கூடாது என்று எண்ணுகிறவன் அல்ல.


தமிழ்நாட்டில் பல ஆண்டுக் காலமாக இருந்த குடிசை வாழ் மக்களை கோபுரத்திலே ஏற்றி உட்கார வைக்கவேண்டுமென்று முதன் முதலாக சென்னை மாநகரத்தில் நினைத்தவனே நான் தான் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதனுடைய விளைவாகத் தான் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டு - நடை பாதை யோரங்களில் வாழ்ந்து வந்த குடிசை வாழ் மக்களுக்கெல்லாம் கோபுரம் போன்ற வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன.


அதைப் போல மாற்றுத் திட்டங் கள் அவர்களுக்கு அமைக்கப்படுமென்று உறுதியளித்து, விமான நிலையத்திற்கு கொஞ்சம் விரிவான இடம் தேவை, கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டு மக்களிடத்திலே கையேந்தி, தயவுசெய்து விட்டுக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற வேண்டிய நிலைமையிலே தான் அரசு இருக்கிறது.

அப்படிப்பட்ட நெருக்கடி யான சூழ்நிலை இருக்கின்ற இந்தக் காலக் கட்டத்திலே கூட ஏறத்தாழ 18 இலட்சம் சதுர அடி பரப்பில் ஒரு வர்த்தக மையத்தைக் கட்ட முடிகிறது என்றால், அது கோயங்கா குடும்பத்தால் மாத்திரம் தான் முடியும் என்பதை இந்தக் கட்டடம் நமக்கு விவரித்துக் கொண்டிருக்கிறது.


எப்படிப்பட்ட அபூர்வமான நிகழ்ச்சிகளை - எப்படிப்பட்ட அருமையான திட்டங்களை இவர்களால் நிறைவேற்ற முடியும், வசதி வாய்ப்புகளை மக்களுக்குத் தர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தத் தொடக்க விழா அமைந்திருக் கின்றது. இந்த ஆரம்ப விழாவே அதற்கான அச்சாரமாக விளங்குகிறது.


இப்பொழுதே இந்த மாளிகை எழும்ப - இந்த வளாகம் எழும்ப மாநகராட்சி மன்றம், அரசு, அதிகாரிகள் அத்தனை பேரும் தந்த ஒத்துழைப்பை இங்கே நன்றி யோடு பாராட்டினார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன். தொடர்ந்து உங்களுக்காக அல்ல - சென்னைக்கு வருகின்ற மக்களின் வசதி வாய்ப்புக்காக - அவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக - அவர்களுடைய உற்சாகத்திற்காக - சுற்றுப் பயணத்தில் ஈடுபடுகின்ற பக்கத்து நாட்டுக்காரர் களுக்காக என்றும் பல வசதிகளைச் செய்து கொடுக்க எவ்வளவு தேவையோ அந்தத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்போம் - அரசின் சார்பாக - மாநகராட்சி மன்றத்தின் சார்பாக செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். கோயங்கா குடும்பத்தாரைப் போன்ற குடும்பத்தினர் தொடர்ந்து இத்தகைய முயற்சிகளிலே ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொண்டு - இந்த விழாவிலே கலந்து கொண்டு,

இந்த வளாகத்தை அமைத்தவர்களை வாழ்த்துவதில் நான் பெருமையடைகிறேன். ஏனென்றால் கோயங்கா, தமிழகத்திலே பிறந்தவரல்ல, பீகாரிலே பிறந்தவர் என்றாலுங்கூட - தமிழ்நாட்டு அரசியலிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு - அப்படி ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தால் பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஈ.வெ.ரா., பேரறிஞர் அண்ணா போன்றவர்களோடெல்லாம் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்டவரோடு நானும் கொஞ்ச காலம் தொடர்பு கொண்டிருந்தேன் என்பதையும், அவர் நடத்திய பத்திரிகை நேர்மையான முறை யில் - எங்களைத் தாக்கக் கூடிய முறையிலே எழுதினாலும் - எங்களைக் கண்டிக்கக் கூடிய வகையிலே எழுதினாலும் - அதிலே ஒரு “கண்ணியம்” இருக்கும், அதிலே ஒரு “நாகரிகம்” இருக்கும்.


அப்படிப்பட்ட நாகரிக எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்களான ஏ.என். சிவராமன் போன்றவர்கள், சொக்கலிங்கம் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு நடைபெற்ற “தினமணி” பத்திரிகையானாலும், “எக்ஸ்பிரஸ்” பத்திரிகையானாலும் - இந்தப் பத்திரிகைள் நடந்து கொண்ட நாகரிகமான முறையிலே தொடர்ந்து தமிழகத்திலே உள்ள பத்திரிகைகள் எல்லாம் நடைபெறுமேயானால், அது கோயங்கா அவர்களுக்கு நாம் காட்டுகின்ற மரியாதை -

இந்தக் கட்டிடம் மாத்திரம் கோயங்கா அவர்களுக்குத் தரப்பட்ட காணிக்கை அல்ல, அந்தப் பத்திரிகைகளிலே நாம் கடைப்பிடிக்கின்ற நாகரிகமும், கண்ணியமும் கோயங்கா அவர்களுக்கு நாம் காட்டுகின்ற நன்றி யாகும் என்பதை எடுத்துச் சொல்லி, இந்த விழாவிலே கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்காக மீண்டும் மீண்டும் நன்றி கூறி, குறிப்பாக என்னை அழைத்து இந்த விழாவிலே கலந்து கொள்ளச் செய்த கோயங்கா குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்து இந்த அளவில் விடைபெற்றுக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment