கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 13, 2010

பொறியியல் படிப்பில் எல்லா பிரிவுகளிலும் தமிழ் வழி கல்வி - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி&பதில் அறிக்கை:

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சர்கள் குழு முடிவெடுத்திருக்கிறதே?
பிரதமர் மன்மோகன்சிங் இந்த பிரச்சினையிலே நல்லதொரு முடிவினை அமைச்சரவை மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார். எதிர்க்கட்சிகளின் கருத்தை அப்படியே புறந்தள்ளிவிட மாட்டார்கள் என்பதற்கும், கொடுத்த உறுதிமொழியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு நிறைவேற்றும் என்பதற்கும் இது சான்றாகும்.
இந்த முடிவினை எடுத்துள்ள மத்திய அரசுக்கு தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேயர் காலத்தில் 1931ம் ஆண்டு இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு பிறகு ஏறத்தாழ 80 ஆண்டுகள் கழித்து தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன் வந்திருப்பது வரலாற்றில் பொறிக்கத்தக்க ஒரு முன்னேற்ற மாகும்.
இந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் தமிழில் படிக்க எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர்?
அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 13 பொறியியல் கல்லூரிகளில், மெகானிக்கல் மற்றும் சிவில் பட்ட ப்படிப்புகளில் 1380 இடங்கள் தமிழில் படிப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த 1380 இடங்களில் 1372 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை கோவையிலே சிறப்பாக நடத்தி, தமிழில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவினையும் எடுத்து அறிவித்த நிலைக்கு மகத்தான வரவேற்பளிக்கும் வகையில் தமிழில் படிக்க அக்கறை கொண்டு, இத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த அளவிற்கு தமிழில் படிக்க ஆர்வம் இருப்பதைக் காணும் போது, மற்றப் பிரிவுகளுக்கும் இதனை அடுத்தடுத்த ஆண்டுகளில் விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபடும்.

11-8-2010 நாளிட்ட ஆனந்த விகடன்' வார இதழில், தி.மு.க. ஆட்சியில் ரூ.90,000 கோடி கடன் உள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு வட்டி மட்டும் 6000 கோடி கட்டவேண்டும். ஒரு நாளைக்கு ரூ.20 கோடி வட்டி கட்டவேண்டும். கருணாநிதியால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்று எழுதப்பட்டுள்ளதே?

தமிழக அரசின் கடன்சுமை கழக ஆட்சியில் மட்டும் அதிகரித்துவிட்டதா அல்லது அதற்கு முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க. ஆட்சியில் அதிகரித்ததா என்பதற்கு ஒரு விரிவான விளக்கத்தை 11.1.2010 அன்றே சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அந்தப் பதிலில் 2001ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது இருந்த கடன் தொகை ரூ.28,685 கோடி என்பது; 2006ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி பதவியை விட்டு இறங்கும் போது ரூ.57,457 கோடியாக, அதாவது சுமார் இரண்டு மடங்காக உயர்ந்தது. 2006ம் ஆண்டில், தி.மு.க. அரசு பதவி ஏற்றபோது தமிழக அரசின் கடன் தொகை ரூ.57,457 கோடியாக இருந்ததுதான்; 31.3.2009 அன்று மாநில அரசின் கடன் சுமை ரூ.74,858 கோடியாக உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.


24.1.2010-ல் "விலைவாசி தொடர்ந்து கவனம் தேவை'' என்ற தலைப்பில் என்னுடைய கேள்வி-பதில்கள் பகுதியில் தமிழக அரசின் கடன் சுமை தற்போது அதிகரித்துள்ள போதிலும் தனி நபர் கடன் தொகை பிற மாநிலங்களைக் காட்டிலும் குறிப்பாக ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

தமிழக அரசின் கடன் சுமை பற்றி இந்த அளவிற்கு
தெளிவுபடுத்தியுள்ள நிலையில் ஆனந்த விகடனில் தற்போது வந்துள்ள இந்தச் செய்தி ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்ட செய்தி யாகக் கருத வேண்டியுள்ளது.


வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் கிடைக்கின்ற வருவாய் ஆதாரத்தை மட்டுமே வைத்து தேவைப்படும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் செய்ய முடியாது என்பதாலும், அத்தகைய தேவைகளைக் கடன் பெற்று நிறைவு செய்வதால் எதிர்காலத்தில் காலம்கடந்து இந்த வளர்ச்சிப் பணிகளை எடுத்துச் செய்வதால் ஏற்படும் கூடுதல் செலவுகள் குறைக்கப்படுவதோடு பொருளாதார வளர்ச்சியும் துரிதப்படுத்தப்படும் என்ற காரணத்தால்தான் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கடன் பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவது பொருளாதார ரீதியாக நடைமுறையில் உள்ள ஒன்று. ஆனால் கடன் வாங்குகின்ற அரசு அத்தகைய கடனை திரும்ப செலுத்தக்கூடிய திறன் படைத்ததா என்பதையும் எதற்காக கடன் பெறப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் மொத்தக் கடன் பொறுப்பு 12.67 லட்சம் கோடி டாலர்களாகும் அதாவது 592 லட்சம் கோடி ரூபாயாகும்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2009-2010ம் ஆண்டின் இறுதியில் அரசுக்கு உள்ள மொத்த கடன் ரூ.88,882 கோடி.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறிப்பாக சொத்துக்களை உருவாக்கும் மூலதனப் பணிகள் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் எடுத்து செயல்படுத்தப்படும் மூலதனப் பணிகள் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. உதாரணமாக 2005-2006ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மூலதனப் பணியின் அளவு ரூ.4,054 கோடி மட்டுமே.

ஆனால் 2010-2011ம் ஆண்டில் மூலதனப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூ.12,284 கோடி. எனவே இந்தக் கூடுதல் கடன் மூலதனப் பணிக்காக பெறப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


அதுமட்டுமல்லாமல் 13-வது நிதிக்குழு பரிந்துரைப்படி ஒரு மாநிலத்தின் நிதிநிர்வாகம் சிறப்பாக அமையவேண்டுமென்றால் அம்மாநிலம் ஆண்டுதோறும் செலுத்தும் வட்டி; அம்மாநிலம் பெறும் வரி வருவாயில் 15 சதவீதத்திற்கு மிகாமலும் மொத்தக் கடன் மாநில உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்கவேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரப்படி மாநில அரசு செலுத்தும் வட்டியின் அளவு, வரி வருவாயில் 12 சதவீதமும்; மொத்த கடன், உற்பத்தி மதிப்பில் 23.6 சதவீதமாகவும்தான் உள்ளது. எனவே தற்போதைய தமிழக அரசின் கடன்நிலை நிதி ஆணையம் விதித்துள்ள வரம்புக்குள்தான் உள்ளது.


இந்தியாவிலேயே 2009-2010ம் ஆண்டில், மொத்த உற்பத்தி அளவில் கடன் சதவீதம் குறைவாக உள்ள மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்கள் நிதி ஆணையம் விதித்துள்ள வரம்பையும் தாண்டி மிக அதிக அளவில் கடன் சுமையை ஏற்றுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக அரசு செலுத்தவேண்டிய அசல் மற்றும் வட்டித் தொகைகளை முறையாக செலுத்துவதன் காரணமாகத்தான் தமிழக அரசு பிறமாநிலங்களைக் காட்டிலும் நிதிநிர்வாக மதிப்பீட்டில் உயர்ந்த தரத்தைப் பெற்றுள்ளது.

இதனால் பிறமாநிலங்களைக் காட்டிலும் குறைந்த வட்டியில் வெளிச்சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக கடன் திரட்டும் நிலையைப் பெற்றுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தான் அதுவும் கழக ஆட்சியில்தான் கடன் சுமை அதிகரித்துவிட்டதாகவும், அதை திரும்பச் செலுத்துவதற்கு முடியாமல் மாநில அரசு திணறுவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் நோக்குடன் ஒரு செய்தியை உள்நோக்கத்தோடு இந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ளது. இதற்கு பன்னீர்செல்வமும் பயன்பட்டிருப்பதுதான் வேடிக்கை!


டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தற்போது கோரிக்கை வைக்கின்ற ஜெயலலிதா, 2006ம் ஆண்டு மே திங்கள் வரை முதல்வராக இருந்தபோதே, பணிநிரந்தரம் செய்திருக்கலாம் அல்லவா?


நிரந்தரப் பணியாளர்களாக இருந்த அரசு அலுவலர்களையே எஸ்மா, டெஸ்மா சட்டத்தின்கீழ் எந்தவிதமான விளக்கமும் கேட்காமல் வீட்டிற்கு அனுப்பியவர் ஆயிற்றே அவர்!


தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி, அரசு கேபிள் டி.வி.யை மீண்டும் துவங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?


அரசு கேபிள் டி.வி. தற்போதும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. அது மூடப்பட்டால் அல்லவா, மீண்டும் துவங்குவதற்கு? அரசு டி.வி. என்பதால் பெரிய அளவிற்கு விளம்பரத்தோடு செயல்படாமல், அடக்கத்தோடு அரசு கேபிள் டி.வி. செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளது. சுமார் 50 ஆயிரம் கேபிள் டி.வி. இணைப்புகளை தற்போது வழங்குகிறது.


இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment