கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 9, 2010

தி.மு.க. நிர்வாகிகள், பேச்சாளர்கள் கட்டுப்பாட்டை மீறக்கூடாது - முதல்வர் கருணாநிதி அறிவுரை



சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், திமுக துணை பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன், அமைச்சர் பரிதி இளம்வழுதி, கொள்கை பரப்பு செயலாளர்கள் மத்திய அமைச்சர் ராசா, திருச்சி சிவா எம்பி, கனிமொழி எம்பி, கயல்விழி அழகிரி, தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகை குஷ்பு, நடிகர் பாக்கியராஜ் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
சொற்பொழிவாளர்கள் தங்களுடைய சில சிரமங்களை எடுத்துச் சொன்ன போது & அதை குறிப்பிட்ட ஒரு சிலர் கைதட்டியதை நான் காணத் தவறவில்லை. இந்த நிலை தொடரக் கூடாது. இந்த சொற்பொழிவாளர் கருத்தரங்கத்தை அமைத்ததற்கு காரணமே தாராளமாக உங்களுடைய குறைகளை, உங்களுடைய தேவைகளை, இயக்கத்தை வளர்ப்பதற்கு எப்படியெல்லாம் தலைமைக் கழகம் இன்னும் உங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதை வகுத்துக் கொள்ள இந்த நிகழ்ச்சி பயன்பட வேண்டுமென்பதற்காகத்தான்.
தி.மு.க.வில் சொல், செயல் என்று வரும்போது, சொல் என்றால் அது நம்முடைய பிரச்சாரத்தையும், செயல் என்றால் அது நம்முடைய நிர்வாகத்தையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். சொற்பொழிவாளர்களுக்கும், செயலர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடாக இது அமைந்திடக் கூடாது.
புதுக்கோட்டை விஜயா பேச்சிலே, நிர்வாகத்தோடு ஒரு மோதுதல் இருந்ததை நான் உணர்ந்தேன். அதைச் சொற்பொழிவாளர்களில் யார்,யார் ரசித்தீர்கள், கை தட்டினீர்கள் என்பதையும் பார்த்தேன். இப்படி விஜயாவை பேசச் செய்து, நீங்கள் எல்லாம் கைதட்ட வந்தீர்களோ என்று கூட எனக்கு சந்தேகம். ஆனால், பேச்சாளர்கள் ஒரு சாதி, நிர்வாகிகள் ஒரு சாதி என்று தி.மு.க.வில் இல்லை. எல்லோரும் ஒரே சாதிதான்.
பேச்சாளர்களை அழைத்து ஒழுங்காக கூட்டம் பேச வைக்காமல், ஒழுங்காக வழிச்செலவு கொடுக்காமல் அனுப்பி வைக்கின்ற சில நிர்வாகிகள் யார் என்பதையும் நான் அறிவேன். அதைப் போல நான் திருப்பிக் கேட்டால், பேச்சாளர்களால் பதில் சொல்ல முடியுமா? எத்தனை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை நம்பி, தலைமைக் கழகத்தை நம்பி, இன்ன ஊரில், இன்ன தேதியில், இன்னார் பேசுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டு விட்டு, அந்த பேச்சாளர் வரவில்லை என்று மனக்குறை பட்ட நிர்வாகிகளையும் நான் அறிவேன்.
நிர்வாகிகள் சார்பாக யாரையாவது இங்கே பேசச் சொல்லியிருந்தால், அவர்களுக்கு ஆதரவாக இங்கே பலத்த கைதட்டல் ஒலி எழுந்திருக்கும். அதுவும் எனக்கு புரியும். எனவே, நிர்வாகிகள், பேச்சாளர்கள் என்று இரு கூறாக, இரண்டு சாதியாக பிரியாமல், நிர்வாகியானாலும், பேச்சாளர் ஆனாலும் இரண்டு பேரும் ஒன்றுதான் என்ற அந்த உணர்வோடு நீங்கள் இருந்தால்தான் இன்னும் வலிமையாக தி.மு.க.வை முன் நடத்திச் செல்ல முடியும் என்பதை எடுத்துக் கூற விரும்புகிறேன்.
இன்னொன்று, பேச்சாளர்களானாலும், பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்களானாலும், நீங்கள் ஆற்றுகின்ற தொண்டு, பணி, நீங்கள் காட்டுகின்ற ஆர்வம், நீங்கள் தருகின்ற வலிவு, பொலிவு அனைத்தும் இந்த இயக்கத்திற்கு பயன்படுகின்றது என்றாலுங்கூட, இடையிலேயே உங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதங்கள், மன வருத்தங்கள், கசப்புணர்வுகள் இந்த இயக்கத்திற்கு பயன்படுவதிலே பாதியைக் குறைத்து விடுகிறது என்பதை தயவுசெய்து யாரும் மறந்து விடக் கூடாது. அண்ணா மறைந்த பிறகு & நான் பெரியாரோடு திருச்சியில் ஒரு கூட்டத்தில் பேசினேன். ‘நாங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களை மறவாமல் அவ்வழி நின்று இயக்கத்தை நடத்துவோம்’ என்று நான் பேசினேன். அதற்கு பிறகு பெரியார் பேசும்போது, ‘முதலமைச்சர் கருணாநிதி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றார்கள் & இதிலே கடமையை மறந்தாலும் மறங்கள், கண்ணியத்தை மறந்தாலும் நான் கவலைப்படவில்லை, ஆனால், கட்டுப்பாட்டை மாத்திரம் மறக்காதீர்கள்’ என்று திட்டவட்டமாக பேசினார். எனவே, சொற்பொழிவாளர்களாக இருந்தாலும், நிர்வாகிகளாக இருந்தாலும் அவர்கள் கருத்து வேறுபாடுகளை அறவே மறந்து விட்டு, கட்டுப்பாட்டு உணர்ச்சியோடு கழகத்தைக் கட்டிக் காக்க வேண்டும்.
இங்கே பேசிய திருச்சி செல்வேந்திரன், உங்களுக்கெல்லாம் ஒரு ஆசையை உருவாக்கி & ஏதோ நிலம், வீடு & இதையெல்லாம் கருணாநிதி கொடுப்பார், அல்லது இந்த அரசாங்கத்தின் சார்பாக உங்களுக்கெல்லாம் வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு போனார். ஏழைகளுக்காக 21 லட்சம் வீடுகளைக் கட்டித் தருவதாகச் சொல்லியிருக்கிறோம். நானே உதாரணமாக இருந்து கோபாலபுரம் வீட்டை எழுதிக் கொடுத்து விட்டேன். அதைப் போலவே செல்வேந்திரன் & உதாரணமாக இருந்து & எல்லோருக்கும் வீடு, நிலம் கொடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். செல்வேந்திரன் பார்க்க இப்படியிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். நல்ல வசதி படைத்தவர்தான். (சிரிப்பு)
அவர் இதிலே உதாரண புருஷராகத் திகழ்வாரேயானால், அவரை பின்பற்ற & செல்வேந்திரனைப் போய் பின்பற்றுவதா & என்று வெட்கப்படாமல் திராவிட முன்னேற்றக் கழகம் இதிலே அவரைப் பின்பற்றத் தயாராக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். (கைதட்டல்) ஏனென்றால், ஆசைகளை உண்டாக்கி விடக்கூடாது.
எங்களுக்கு என்ன அறிவுரை கூறப் போகிறீர்கள் என்று கேட்டால் இதெல்லாம் அறிவுரைதான். எதை பேச வேண்டும், எதை பேசக் கூடாது என்பதெல்லாம் கூட அறிவுரைதான்.
சொற்பொழிவாளர்களில் ஒருவர் பேசினார். ஒரு பேச்சாளருக்கு உடல் நலம் கெட்டு, கைகால்கள் விளங்காமல் இருக்கிறார் என்றும், அவரை யாரும் கவனிக்கவில்லை என்றும் சொன்னார். தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது உண்டா? கொண்டு வராவிட்டால் அது யாருடைய குற்றம்? அல்லது என்கவனத்திற்காவது கொண்டு வந்தது உண்டா? அவருக்கு என்ன செய்யலாம் என்று தெரிவிக்காமல் இருந்தது அவருடைய குற்றமே தவிர, தி.மு.க. தலைமையைச் சேர்ந்த குற்றம் அல்ல. தலைமைக்கு தெரிவித்தால் காற்றிலும் விரைவாக அவருக்கு போய்ச் சேர வேண்டிய நன்மை போய்ச் சேரும்.
என்னுடைய பெயரால் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை என்று ஒன்று இருக்கிறது. அந்த அறக்கட்டளையின் சார்பில் கழகத்தைச் சேர்ந்த நலிந்தோர் உதவி நிதியாக 2005 நவம்பர் முதல் இந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் வரை 2049 பேருக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டிருக்கின்றது.
சைதாப்பேட்டையில் மேரி என்ற ஒரு பெண்மணி, கழகத்தைச் சேர்ந்தவர். உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். மேயர் சுப்பிரமணியத்தை உடனடியாக அழைத்து, போய்ப் பார்த்து வா என்று சொன்னேன். அவர் போய் பார்த்து விட்டு ஐம்பதாயிரம் ரூபாயை அந்த பெண்மணிக்கு கொடுத்து விட்டு வந்தார்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், இங்கே ஒலிபெருக்கி இருக்கிறது என்பதற்காக எதிரே கூட்டம் இருக்கிறது என்பதற்காக எதையும் சொல்லலாம் என்ற முறையில், ‘யாரோ ஒருவர் நாதியற்றுக் கிடக்கிறார், யாரும் பார்க்கச் செல்லவில்லை’ என்று இங்கே சொல்லப்பட்ட வார்த்தை இன்னமும் என் மனதை புண்ணாக்கிக் கொண்டிருக்கின்றது.
கேள்விப்பட்ட மாத்திரத்திலே அவர்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டதுதான் தி.மு.க. தலைமை. இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடம் தரத்தக்க எந்த விவாதங்களும் நமக்கிடையே வேண்டாம் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேனே அல்லாமல் வேறல்ல.
கட்டுப்பாட்டோடு பேசக் கூடிய அழகாக, ஆணித்தரமான வார்த்தைகளை அமைத்து பேசக் கூடிய பேச்சாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்.நான் உங்களையும், கழக நிர்வாகிகளையும் கேட்டுக் கொள்வது இருசாராரும் ஒருவரையொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மதித்து நடந்து கொள்ளவேண்டும்.
செப்டம்பர் திங்களில் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா, கழகம் பிறந்த நாள் விழா & இந்த மூன்றும் இணைந்த முப்பெரும் விழாவினையொட்டி ஒரு வார காலத்திற்கு எந்தெந்த தேதி என்பதை பொதுச் செயலாளர் அறிவிக்க இருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 20 முதல் 30 வரை தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் & அந்த பத்து நாட்களில் & ஐந்து, ஐந்து நாட்களாகப் பிரிக்கப் பெற்று & தமிழ்நாடு முழுவதும், பொதுக்கூட்டங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் திங்களில் முப்பெரும் விழா போக மீதம் உள்ள தேதிகளில் கழகச் சொற்பொழிவாளர்களுக்கு மாத்திரம் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது. பயிலரங்கம் என்ற பயிற்சிப் பட்டறை & சொற்பொழிவாளர்கள் பயிற்சியை எடுத்துக் கொள்கின்ற & பயிற்சியை வழங்குகின்ற பட்டறைகள் & நீலகிரியில் நடைபெறவுள்ளது. நம்முடைய ஒற்றுமைக்காக திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக கண்டிப்பாக சில வார்த்தைகளை நான் இங்கே சொல்லி யிருந்தாலுங்கூட, அதன் காரணமாக யாருடைய மனமாவது புண்பட்டிருக்குமேயானால் அதற்காக வருந்தாமல், திருந்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment