கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 16, 2010

உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்து நாட்டுக்காக நீண்டகாலம் பாடுபட வேண்டும் - முதல்வர் கருணாநிதி



வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு விழா மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
விழாவுக்கு தலைமை வகித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
மகரிஷி எதற்காகப் பணியாற்றினார்? பாடுபட்டார்? எதற்காகத் தன் அறிவு, ஆற்றல், உழைப்பு செலவிட்டார் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ராமலிங்க அடிகள் வழியொற்றி வாழ்ந்து, மற்றவர்களும் வாழ வேண்டும் என்று விரும்பிய மாமுனிவர்தான் வேதாத்திரி மகரிஷி.
பல முனிவர்கள், ரிஷிகள், மகான்கள் அடக்கமான பிறகு, அதாவது அடக்கமான பிறகு உயிர் துறந்து, அடக்கம் செய்யப்பட்ட பிறகு, மக்களால் போற்றப்படுவார்கள். ஆனால், இந்த மாமுனிவர் அடக்கமாக இருந்தே, மக்களிடத்திலே புகழ் பெற்றவர். இவர் யார், எவர் என்ற விளம்பரங்கள் இல்லாமலே அவர் வெளிநாடுகளிலே ஒளிவிட்டவர். அயல் நாடுகளில் அவருடைய ஆற்றலை உணர்ந்தவர்கள் பலருண்டு.
உனக்கு என்ன வேண்டும், கேள் உடனே தருகிறேன் என்று சொல்லி, அந்த நடிப்பின் மூலமாக தனக்கும், தெய்வத்திற்கும் தொடர்பு உண்டு என்பதைப்போல, காட்டிக் கொள்கிறவர்களுடைய அபூர்வ வித்தைகளைக் கண்டு மக்கள் அவர்பால் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளவில்லை. மக்கள் பாமர மக்களாக இருக்கிற காரணத்தினால் நீ அறிவது இதுதான், நீ அறிந்து கொண்டிருப்பது இதுதான் என்று அந்த பாமரத் தன்மையை உடைத்தெறிந்து விளக்குகிற பகுத்தறிவு ஆயுதத்தை பெற்றிருந்த காரணத்தினாலே தான், இன்றைக்குப் போற்றப்படுகிறார். அவருடைய எண்ணங்கள், கருத்துக்கள், உபதேசங்கள், அறிவுரைகள் பாராட்டப்படுகின்றன.
கடவுள் வேறு, மனிதன் வேறு அல்ல, மனிதன் அந்தக் கடவுளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், கடவுள் பெயரைச் சொல்லி மனிதன் சமுதாயத்தை ஏமாற்றக் கூடாது. சமுதாயம் கடவுள் பெயரால் கெட்டு விடக் கூடாது. அப்படி எண்ணிய காரணத்தால்தான், ராமலிங்க அடிகளாரானாலும், அவர் வழியில் வந்த வேதாத்திரி மகரிஷியானாலும் அந்தக் கடமையை உணர்ந்து மக்களிடம் பொய்யும், புளுகும், புராணக் கதைகளும் உருவாக்கியிருக்கிற சலனத்திலிருந்து மீட்டு, நல்வழிப் படுத்துகிற வகையிலே அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள்.
தனி மனிதனிடத்தில் ஒழுக்கம், கடமையுணர்வு, ஈகை போன்ற உயர்ந்த நற்பண்புகளை வாழ்க்கைக் கல்வியாக பயில வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மூச்சு விடும்போது, அதை நீண்ட மூச்சாக விடாமல், குறுகிய மூச்சாக விட்டு, நீண்ட காலம் வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட மூச்சாக விடக்கூடாது என்றால், அப்படி மூச்சு விடும்போது, சுவாசப் பையிலே ஏற்படுகிற மாற்றம், அதற்கு ஏற்படுகிற ஓய்வின்மை, சுவாசப்பைக்கு ஏற்படுகிற தொந்தரவு அதிகமானால், அது மனிதனுடைய ஆயுளுக்கு குந்தகம் விளைவிக்கும் எனவே குறுகிய மூச்சு விடு என்று சொல்கிறார். எனக்கும் தேசிகாச்சாரி என்ற குருநாதர் இருக்கிறார். அவர் மகரிஷி அல்ல. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று நூற்றுக்கணக்கான மாணவர்களைப் பெற்றவர் ஆவார்.
அவர் எனக்கு இந்தப் பயிற்சியைத் தொடங்கியபோது, எனக்குப் புரியாத சமஸ்கிருத பாஷையில், சில மந்திரங்களைச் சொன்னார். முதன்முதலாக சூரியனுக்கு வணக்கம் செலுத்திவிட்டுத் தான் இந்தப் பயிற்சியைத் தொடங்க வேண்டுமென்று சொன்னார். தமிழ், தமிழ் என்று பேசிப் பழகி ஒரு தடம் உருவாகிவிட்ட காரணத்தால் வடமொழிச் சொற்கள் புரியவில்லை.
சிலப்பதிகாரத்தில், சூரிய நமஸ்காரம் இருக்கிறது. ஞாயிறு போற்றுதும் கதிரவனைப் போற்றுதும் என்று இருக்கிறது. அதை சொல்லலாமா? என்றதும் சிந்தனை ஒரே இடத்திலே குவிய வேண்டும்; அது அங்கிங்கு அலையக் கூடாது அவ்வளவு தான் என்றார். நான் ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்று சொன்னேன். நன்றாக இருக்கிறது என்றார். இன்று வரை எனக்கு அந்தப் பயிற்சியின் போது, ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்று தான் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் இந்தப் பயிற்சியிலே ஈடுபட்டால், அது மெத்தப் பயனை விளைவிக்கிறது என்பதை என்னுடைய சொந்த விஷயத்திலே நான் பார்த்து வெற்றி அடைந்திருக்கிறேன். நீங்களும் உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சியில் கவனம் செலுத்தி, நீண்ட ஆயுளோடு வாழ்ந்தால் தான் நம்முடைய நாட்டிற்குத் தொடர்ந்து நீண்ட காலம் பாடுபட முடியும், பாடுபட வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
விழாவுக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் முன்னிலை வகித்தார். உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் வரவேற்றார். வேதாத்திரி மகரிஷி அஞ்சல் தலையை மத்திய அமைச்சர் ஆ.ராசா வெளியிட, முதல்வர் பெற்றுக் கொண்டார். விழா மலரை முதல்வர் கருணாநிதியிடம் இருந்து ஆழியாறு அறிவுத் திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். கே.ஆர்.நாகராஜன் நன்றி கூறினார்.

1 comment: