இராஜராஜசோழனின் தஞ்சைப் பெரிய கோயில் 1000 ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவது குறித்து முதலமைச்சர் கலைஞர் தலைமையில் இன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோயில் 1000 ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் இன்று (7-8-2010) புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நூலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் பின்: 1.இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் திங்கள் 25, 26 ஆகிய இரண்டு நாட்களுக்குச் சிறப்புற நடத்த வேண்டும். 2.இந்த விழாவின் முதல் நாள் காலை முதல், நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகளை நகரின் பல பகுதிகளிலும் நடத்த வேண்டும். அதே நாள் மாலையில் தஞ்சைப் பெரிய கோயிலில் அனைத்திந்திய பரத நாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் - டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் - ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சியினை நடத்தவேண்டும். 3.அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் - நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தவேண்டும். 4.இரண்டாம் நாள் காலையில் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும் - தஞ்சைப் பெரிய கோயிலில் பொது அரங்கமும் நடத்தவேண்டும். இரண்டாம் நாள் மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தொடங்குதல் ஆகிய நிகழ்வுகளை நடத்தவேண்டும். அந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர்களையும், பல்வேறு சான்றோர்களையும், ஆன்றோர்களையும், அரசியல் தலைவர்களையும் அழைக்கவேண்டும். 5.தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவடைவதையொட்டி வரலாற்றுக் கண்காட்சி ஒன்றை நடத்தவேண்டும்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் க. கணேசன், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் அசோக் வரதன் ஷெட்டி, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை முதன்மைச் செயலாளர் க. முத்துசாமி, பொதுத்துறைச் செயலாளர் ஜோதி ஜெகராஜன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளர் ஜி. சந்தானம், கலை மற்றும் பண்பாட்டுத் துறைச் செயலாளர் வெ. இறையன்பு,
இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையர் பி.ஆர். சம்பத், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் டாக்டர் செந்தில் குமார், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையர் (பொறுப்பு) ஏ.சி. மோகன்தாஸ், தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ம. இராசேந்திரன், உளவுத் துறைத் தலைவர் ஜாபர் சேட், தஞ்சை நகர காவல் கண்காணிப்பாளர் செந்தில்வேலன், நாட்டிய கலைஞர் முனைவர் பத்மா சுப்பிரமணியம்,
அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் எஸ். பாபாஜி ராஜா போஸ்லே, முனைவர் இரா. நாகசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment