கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 12, 2010

எஸ்மா, டெஸ்மா சட்டம் கொண்டு வந்தவர் ஊழியர்களை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு தகுதியில்லை - முதல்வர் கருணாநிதி


முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
அரசு பணியாளர்கள் பற்றி அறிக்கை விட ஜெயலலிதாவுக்கு ஏதாவது தகுதி உண்டா? அவர் ஆட்சிக் காலத்தில் அரசு பணியாளர்கள் பட்ட துன்பத்தை மக்கள் மறந்திருப்பார்கள் என்று அவர் கனவு காண்கிறாரா? ‘அரசு அலுவலர்களும் ஜெயலலிதாவும்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய புத்தகமே எழுதலாமே. இருந்தாலும் ஒரு சிலவற்றை ஞாபகப்படுத்துகிறேன்.
1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை, 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்தார். 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் மீண்டும் வேலை அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தேன். அதே போல், திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களை 2001ம் ஆண்டு ஜெயலலிதா, டிஸ்மிஸ் செய்து வீட்டிற்கு அனுப்பினார். அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். நிச்சயிக்கப்பட்ட நிலையில் இருந்த பலர் திருமணமும் நிறுத்தப்பட்டு, அவர்களை மணக்கவிருந்த பெண்கள் நிர்க்கதிக்கு ஆளானார்கள்.
அரசு அலுவலர் வேலை நிறுத்தம் செய்தால் மூன்றாண்டு சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று ஜெயலலிதா ஆட்சியில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அது மட்டுமல்ல 2002ம் ஆண்டு, வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களின் தலைவர்களை எஸ்மா சட்டத்தின்கீழ் கைது செய்ததோடு, டெஸ்மா சட்டம் என்ற புதிய அவசரச் சட்டத்தை அமல்படுத்தி பணியாளர்களை வேலை நீக்கமும் செய்தார். அந்த அம்மையார்தான் தற்போது டாஸ்மாக் பணியாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார்.
அரசு அலுவலர்களை டிஸ்மிஸ் செய்ததை ரத்து செய்யக் கோரும் வழக்கில் 6&7&2003ல் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், ‘விசாரணையே இல்லாமல் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வது சட்ட விரோதமானது. கைதான அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் சஸ்பென்ட், டிஸ்மிஸ் உத்தரவுகளையும் நிறுத்தி வைக்கிறேன். அனைவரும் உடனடியாக வேலைக்குப் போக வேண்டும். புதிய ஆட்களை பணியில் நியமிக்கக் கூடாது’ என்று கூறப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதி இந்த அளவுக்கு அரசு அலுவலர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததும், ஜெயலலிதா அரசு அதனையேற்காமல், இரவோடு இரவாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் இல்லத்திற்கே சென்று மேல் முறையீடு செய்து, தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது. அந்த அளவுக்கு அரசு அலுவலர்களிடம் விரோதம் பாராட்டிய ஜெயலலிதாதான், தேர்தல் வருகிறது என்றதும், தற்போது அவர்களிடம் அன்பு கொண்டவர்களை போல நடிக்கிறார்.
அரசு அலுவலர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்திய காரணத்தால், மீண்டும் அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். புதிதாக அமர்த்தப்பட்ட 16 ஆயிரம் அலுவலர்களை என்ன செய்வதென்று அந்த அரசுக்கு தெரியாததால், அவர்களை 2004ம் ஆண்டு ஜூனில் திடீரென்று அதிமுக அரசு நீக்குவதாக ஒரு ஆணை பிறப்பித்தது. உதவிக்கரம் நீட்டியவர்களின் வாழ்வைப் பாழாக்குவது நல்லதல்ல என்று நான் ஒரு அறிக்கை விடுத்தேன். பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள். அதன் பிறகு, ஜெயலலிதா அரசு அந்த உத்தரவை திரும்பப் பெற்றது.
டாஸ்மாக் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற போதிலும், திமுக அரசு 2006ம் ஆண்டு பதவியேற்ற பிறகு அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடாமல் தொடர் பணி வழங்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கு ரூ.3000, விற்பனையாளர்களுக்கு ரூ.2000, மது கூட உதவியாளர்களுக்கு ரூ.1500 மாத ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசு பதவியேற்ற பின், 2 முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ஜூலையில் மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.3,500, ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.2,400, மதுக்கூட உதவியாளர் ஊதியம் ரூ.1,800 என்று உயர்த்தப்பட்டது. 2009ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மேற்பார்வையாளர்கள் ரூ.4000, விற்பனையாளர்கள் ரூ.2,800, மதுக்கூட உதவியாளர்கள் ரூ.2,100 மாத ஊதியமாகப் பெற்று வருகிறார்கள்.
மதுபானக் கடைகளின் பணி நேரம் அதிமுக ஆட்சியில் 16 மணி. தற்போது 12 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் வாராந்திர விடுமுறையும் விடப்படுகிறது. அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 5 நாள் பொது விடுமுறைதான். இந்த ஆண்டு மே முதல் நாளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு, பணி புரிபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படுகிறது.
அதே போல், திமுக ஆட்சியில்தான் 1&7&2007 முதல், ஊழியர்களின் டெபாசிட் தொகைக்கு ஆண்டுக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்பார்வையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,750ம் விற்பனையாளர்களுக்கு ரூ.525ம், மற்றும் மதுக்கூட உதவியாளர்களுக்கு ரூ. 350ம் வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.7 கோடியே 57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் 2005&2006ம் ஆண்டு குறிப்பிட்ட பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.26 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. இந்த அரசு பதவியேற்றபின் அனைத்துப் பணியாளர்களும் பயன்பெறும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டது.
2009&10ம் ஆண்டில் ஊக்கத் தொகையாக ரூ.33.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் 2005& 06ல் போனஸ் மற்றும் கருணைத் தொகை 10 சதவீதமாக ரூ.8 கோடி மட்டுமே வழங்கப்பட்டது.
இந்த ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக போனஸ் மற்றும் கருணைத் தொகை 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 2009&10ம் ஆண்டில் ரூ.18 கோடியே 64 லட்சம் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பணியாளர் இறக்க நேரிட்டால் குடும்ப நல நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் இதுஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், திமுக ஆட்சியில்தான் மேற்பார்வையாளர்களுக்கு மாதாந்திர பயணப்படி ரூ.150 முதல் ரூ.250 வரை அளிக்கப்படுகிறது.
இந்த அளவுக்கு டாஸ்மாக் பணியாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்த பணியாளர்களில் சிலர் மட்டும் வேலை நிறுத்தம் என்கிறார்கள். அரசை மிரட்டிப் பார்க்கிறார்கள்.
அவர்களுக்குள்ளேயே கடந்த காலத்தையும், இந்த காலத்தையும் சீர்தூக்கி பார்த்து பெரும்பாலோர் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தியும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment