கேரள மக்கள் அறுவடைத் திருநாளாக பெரிய அளவில் கொண்டாடும் ஓணம் திருநாள், மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடு கருதாமல் எல்லா மக்களும் கொண்டாடும் ஓணம் திருநாள், ஆணவம், அகம்பாவம் ஆகிய கொடிய குணங்கள் மனித சமுதாயத்தி லிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதையும், அன்பு, அமைதி, சகோதர நேயம் ஆகியவை மண்ணில் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் திருநாளைத் தங்கள் குடும்பத்தினர், உறவினர் சூழ மகிழ்ச்சியுடன் கூடிக் கொண்டாடிட வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் அவர்கள் நிறைந்து வாழும் எல்லையோர மாவட்டங்களான நாகர்கோவில், கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களுக்கும் 2006ம் ஆண்டு முதல் சிறப்பு விடுமுறை வழங்கிட ஆணையிட்ட இந்த அரசு, 2007ம் ஆண்டு முதல் சென்னை மாவட்டத்திற்கும் விடுமுறை வழங்கி வருகிறது. தமிழக மக்களின் உரிமைகளை மட்டுமல்லாமல், தமிழகத்தில் வாழும் அண்டை மாநில மக்களின் நியாயமான உணர்வுகளையும் மதிப்பது இந்த அரசு என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகி நிற்கிறது.
ஓணம் திருநாள் கொண்டாடும் மலையாள மொழி பேசும் அருமை உடன் பிறப்புகள் அனைவர் வாழ்விலும் அன்பும், அருளும், அமைதியும் தழைத்து வளம் பெருகிட தமிழ் மக்கள் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.
No comments:
Post a Comment